திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த கமல் .. உற்சாக வரவேற்பு
திருச்சி: திருச்சிக்கு மகளுடன் பிரச்சாரத்திற்காக ஹெலிகாப்டரில் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுடைய தேர்தல் பரப்புரையை துவங்கியது இதனிடையே மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் கட்சியின் பிரச்சாரத்தை ஏற்கனவே துவக்கினார். இந்நிலையில் இன்று திருச்சி வந்த அவர், பிரச்சாரக்கூட்டத்தில் பேசினார். நாளையும் திருச்சியில் அவர் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக இன்று சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் அடுத்துள்ள மொராய் சிட்டி வளாகத்தில் ஹெலிகாப்டரில் வந்து இறங்கினார். அங்கு கமலஹாசனுக்கு மக்கள் நீதி மைய தொண்டர்களுக்கு கையசைத்து வரவேற்பு அளித்தனர்

கமல் பிரச்சாரம்
தொடர்ந்து அங்கிருந்து பிரச்சார வேனில் புறப்பட்ட கமலஹாசன் விமான நிலையம், வயர்லெஸ் ரோடு, கே.கே.நகர், சிம்கோ மீட்டர், மன்னார்புரம் நால்ரோடு, டிவிஎஸ் டோல்கேட், சுப்பிரமணியபுரம் வழியாக காஜாமலை எஸ்ஆர்எம் ஹோட்டல் சென்று அடைந்தார். கமலுடன் 2வது மகள் அக்சராவும் உடன் வந்திருந்தார்.

மரியாதை பேச்சு
திருச்சியில் பிரச்சாரத்தில் பேசிய கமல்ஹாசன் கூறுகையில், என் தந்தையிடம் கற்ற மரியாதை காரணமாக தான் இன்றைய கொள்ளையர்களை கூட நான் திட்டியதில்லை. இலவசங்கள் அனைத்தும் மக்கள் பணம். நியாயமாக மக்களுக்கு வந்து சேர வேண்டிய பணம். ஏழ்மையை இந்த அரசு பாதுகாத்து வைத்திருக்கிறது. நாங்கள் சிறந்த திட்டங்கள் வைத்துள்ளோம். ஏழைகள் தான் ஓட்டு போடுகிறார்கள். பணக்காரர்கள் ஓட்டு போட வருவதில்லை. வாக்களிக்க வந்தாலும் அங்கு நிற்பவர்களை பார்த்து திரும்பி விடுகிறார்கள்.

எங்கள் திட்டம்
தமிழ்நாட்டை டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக மாற்ற வேண்டியது மக்கள் நீதி மையத்தின் திட்டம். அதை செய்ய நேர்மையான அரசு. தேவை. ஓட்டுச்சாவடிகளில் நடக்கும் ஊழலை தடுக்க வேண்டியது நமது கடமை. ஊழலை நீக்குவதற்கான தான் அரசியலுக்கு வந்தேன் தொடர்ந்து செயல்படுவேன்.

பிரதிநிதி இருப்பார்
அரசியல் பிரசுரங்களில் எதுகை, மோனையுடன் பேசும் அரசு நாங்கள் அல்ல. மக்கள் நீதி மையம் சார்பில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மாற்றுத்திறனாளி ஒருவர் பிரதிநிதியாக நிச்சயம் இருப்பார். மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை கிடப்பில் இருக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க இந்த நடவடிக்கை உதவும். இது நேர்மையானவர்கள் கூட்டம். நான் நட்சத்திரம் அல்ல. இனி உங்கள் வீட்டில் உள்ள சிறு விளக்கு. ஊழலுக்கு எதிராக இந்த விளக்கு எரிந்து கொண்டே இருக்கும். அதை அணையாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு" என்றார்.