திருச்சி சாலைகளில் ஜல் ஜல் சத்தம்.. மாட்டு வண்டிகளில் வந்து ஸ்ரீரங்கநாதரை தரிசித்த கிராம மக்கள்
திருச்சி: கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த 11 கோயில் பூசாரிகள் உட்பட சுமார் 1500 பேர் 100 இரட்டை மாட்டு வண்டிகள் உட்பட 200 வண்டிகளில் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், 108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதாகவும், பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் சிறப்புக்குரியது.
சென்னை உட்பட.. 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை வெளுக்குமாம்.. அலர்ட் மக்களே!
இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து நம்பெருமாளை தரிசித்து செல்வது வழக்கம்.

குலதெய்வ வழிபாடு
இந்த நிலையில், திருச்சி மற்றும் அண்டை மாவட்டங்களில் பெருமாளை குல தெய்வமாக வழிபடும் பொதுமக்கள் ஆண்டுதோறும் பாரம்பரிய முறைப்படி இரட்டை மாடுகள் பூட்டிய வண்டியில் குடும்பம் குடும்பமாக ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை தந்து நம்பெருமாளுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம்.

மாட்டு வண்டி பயணம்
திருச்சி மாவட்டம் அருகில் உள்ள காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் தான் குலதெய்வம். ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஊர்மக்கள் ஒன்றுகூடி, மாட்டு வண்டிகளில் ஸ்ரீரங்கம் வந்து, மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தி, ரங்கநாதரை தரிசனம் செய்வது வழக்கம்.

200 மாட்டுவண்டிகள்
கொரானா ஊரடங்கு காரணமாக, 7 ஆண்டுகள் கழித்து நேற்று கரூர் மாவட்டம் காவல்காரன்பட்டி கிராம மக்கள் மாட்டு வண்டிகளை பூட்டிக் கொண்டு, ஸ்ரீரங்கம் கோயிலுக்கு கிளம்பினர். காவல்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்த, 11 கோயில் பூசாரிகள் உட்பட சுமார், 1500 பேர், 100 இரட்டை மாட்டு வண்டிகள் உட்பட, 200 வண்டிகளில் இன்று காலை ஸ்ரீரங்கம் வந்தடைந்தனர்.

மொட்டை அடித்து வழிபாடு
முதலில் வடகாவிரி என அழைக்கப்படும் கொள்ளிடம் ஆற்றுக்கு சென்ற காவல்காரன்பட்டி கிராம பக்தர்கள், அங்கு மொட்டை அடித்து தளுகை பூஜை செய்தனர். தொடர்ந்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்று நம்பெருமாள் மற்றும் தாயாரை தரிசனம் செய்து வழிபாடு நடத்தினர்.

திருச்சி சாலைகளில் மாட்டு வண்டிகள்
அறிவியல் வளர்ச்சி காரணமாக நவீன வாகனங்கள் வந்து விட்டபோதும் கிராம மக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டியில் வந்து நம்பெருமாளை தரிசித்து செல்லும் நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நாளை வந்த வழியே ஊர் திரும்புகின்றனர். பாரம்பரியமாக மாட்டுவண்டிகளில் வந்த கிராம மக்களை திருச்சி மாநகர மக்கள் வியப்புடன் பார்த்து ரசித்தனர்.