போலீஸ் -டாக்டர் -இஞ்சினியர் ஆகனும்ணு ஆசைப்பட்டேன்! மாணவர்களிடம் ஜாலியாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்
திருச்சி: சிறுவயதில் தானும் போலீஸ், டாக்டர், இஞ்சினியர் ஆக வேண்டும் என ஆசைப்பட்டதாக கூறி அரசுப் பள்ளி மாணவர்களை கலகலப்பாக சந்தித்து பேசியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ்.
தனது சொந்த அத்தை காலமானதை அடுத்து திருச்சி மாவட்டம் வாளாடி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தச் செல்லும் வழியில், அமைச்சர் அன்பில் மகேஷ் இந்த சந்திப்பை நடத்தியுள்ளார்.
கடுகடு முகத்தோடு போன ஓபிஎஸ்! பின்னாடியே போன 2 கார்.. உள்ளே 3 பேர்! இரவோடு இரவாக நடந்த அந்த சம்பவம்
அமைச்சரின் வருகையை எதிர்பார்க்காத ஆசிரியர்கள் அவர் அங்கிருந்து புறப்படும் வரை பதற்றத்துடனே இருந்தார்கள்.

அமைச்சரின் அத்தை
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியின் சொந்த அத்தை ராணி அம்மையார் உடல் நலக்குறைவால் திருச்சி மாவட்டம் வாளாடி கிராமத்தில் காலமானார். அவருக்கு அஞ்சலி செலுத்தச் சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ், போகும் வழியில் அரசு தொடக்கப்பள்ளியில் ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களை பார்த்து நீங்க என்னவாக வேண்டும் என ஆசைப்படுகிறீர்கள் என மாணவர்களிடம் கேட்டார்.

சந்தோஷமாக இருக்கிறது
அதற்கு நான் போலீஸ் ஆகப் போகிறேன், நான் ஆர்மியில் சேரப்போகிறேன், நான் இஞ்சினியர் ஆகப்போகிறேன் என மாணவர்கள் மழலை மொழி மாறாமல் பதில் கூறினர். இதனைக் கேட்ட அமைச்சர் அன்பில் மகேஷ், ''அடேங்கப்பா கேட்கவே சந்தோஷமாக இருக்கு, நான் என் சின்ன வயதில் போலீஸ் ஆகனும்னு ஆசைப்பட்டேன், பிறகு 8-வது, 9-வது படிக்கும் போது டாக்டர் ஆகனும்னு ஆசைப்பட்டேன், பிளஸ் ஒன், பிளஸ் 2 படிக்கும் போது இஞ்சினியராக வேண்டும் என ஆசைப்பட்டேன்'' என தனது நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.

ஆர்வம் வேண்டும்
நீங்க என்னவாக வேண்டும் என விரும்புகிறீர்களோ அதற்கு இப்போது இருந்தே உங்களை தயார் படுத்திக் கொள்ள வேண்டும் என அட்வைஸ் செய்த அமைச்சர் அன்பில் மகேஷ், உதாரணத்துக்கு இப்ப நீங்க போலீஸ் ஆகனும்னு நினைத்தால் டிஜிபியில் இருந்து கான்ஸ்டபிள் வரை எந்தெந்த கிரேடுகளில் பதவிகள் உள்ளன என்பதை இப்போதே அறிந்து வைத்துக்கொள்ள வேண்டும் என்றார். இதேபோல் தான் ஒவ்வொரு துறையை பற்றியும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்ட வேண்டும் என மரத்தடியில் பாடம் எடுத்தார்.

தலைவர் ஆவீர்கள்
அங்கிருந்த புறப்படும் முன் தொடக்கப்பள்ளி மாணவி ஒருவரிடம் நீங்க என்னவாகப் போறீங்க என அமைச்சர் அன்பில் மகேஷ் கேட்க, அதற்கு நான் என்னவாக வேண்டும் என இன்னும் யோசிக்கவே இல்லை என பளிச் பதில் கொடுத்தார் அந்த மாணவி. அப்ப நீங்க தலைவராகிடுவிங்க என அந்த மாணவியை வாழ்த்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.