கொடுமையிலும் கொடுமை! டிராக்டர் வாங்க கடன் வாங்கியது ஒரு குத்தமா! நடுத்தெருவில் விவசாயி குடும்பம்!
திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஏழரை லட்சம் ரூபாய் கடனுக்காக 11 ஏக்கர் நிலத்தை சொற்ப தொகைக்கு வங்கி அதிகாரிகள் ஏலம் விட்ட அவலம் நடந்துள்ளது.
இதுமட்டுமல்லாமல் போலீஸுடன் சென்று விவசாயியை வீட்டில் இருந்து வெளியேற்றி அவர்களின் உடைமைகளை வெளியே தூக்கி எறிந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
தேசியமயமாக்கப்பட்ட வங்கி நிர்வாகத்தின் இந்த செயலுக்கு விவசாயிகள் சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
’நானும் விவசாயி’ என சொல்லாமல்.. விவசாயி மனதில் பன்னீர் தெளித்த முதல்வர்! எடப்பாடியை சீண்டிய முரசொலி!

டிராக்டர் வாங்க
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியை சேர்ந்தவர்கள் பாலசுப்ரமணியம் மற்றும் பன்னீர்செல்வம். அண்ணன் தம்பிகளான இவர்கள் குளித்தலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் கடந்த 2006-ஆம் ஆண்டு டிராக்டர் வாங்குவதற்காக 14 லட்சம் ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்கள். அதில் ஏழரை லட்சம் ரூபாய் கடனை முறையாக திருப்பிச் செலுத்திய அவர்கள், கடந்த சில ஆண்டுகளாக டிராக்டர் பழுது, மற்றும் கொரோனா காரணமாக பணப்புழக்கமின்றி வங்கியில் மீதமிருக்கும் தொகையை திருப்பிச் செலுத்தவில்லை.

வங்கி நிர்வாகம்
இது குறித்து நோட்டீஸ் அனுப்பிய வங்கி நிர்வாகம் வட்டிக்கு வட்டி போட்டு அதை முழுமையாக செலுத்தாவிட்டால் நிலத்தை ஜப்தி செய்வோம் எனக் கூறியிருந்தது. தாங்கள் கட்ட வேண்டிய ஏழரை லட்சம் ரூபாயை மட்டும் தான் திருப்பிச் செலுத்துவோம் என விவசாயி பாலசுப்ரமணியனும், பன்னீர்செல்வமும் உறுதியாக இருந்துள்ளனர். இது குறித்த பைசல் பல மாதங்களாக சென்று கொண்டிருந்தது.

போலீஸ் உதவி
இந்நிலையில் போலீஸ் உதவியுடன் நிலத்தை நில அளவையரை வைத்து அளவீடு செய்த தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வங்கிக்கு திருப்பி வர வேண்டிய ஏழரை லட்சம் ரூபாய் பணத்துக்காக 11 ஏக்கர் நிலத்தை ஏலம் விட்டு அந்த குடும்பத்தையே நடுத்தெருவில் நிற்க வைத்துவிட்டார்கள். இதுமட்டுமல்லாமல் வீட்டையும் காலி செய்யுமாறு கூறி உடைமைகளை வெளியே தூக்கி எறிந்துள்ளனர். இதனால் ஆவேசமடைந்த அந்த குடும்பத்தினர், அனைவரும் தீயிட்டும் கொளுத்திக் கொள்வோம் என எச்சரிக்கை விடுத்தனர்.

ஜப்தி நடவடிக்கை
ஆனாலும் ஜப்தி நடவடிக்கையை அந்த வங்கி அதிகாரிகள் கைவிட வில்லை. இதனிடையே தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு நிகழ்விடத்திற்கு சென்று, இரு தரப்பிற்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். கொடுத்த பணத்தை வசூலிக்க ஆயிரம் அற வழிகள் உள்ள நிலையில் சினிமா பாணியில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை வங்கிகள் இனியாவது கைவிட வேண்டும் என விவசாயிகள் சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் ஆர்ப்பாட்டம்
இதனிடையே இந்த நிகழ்வை கண்டித்து குளித்தலை தேசியமயமாக்கப்பட்ட வங்கி கிளைக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. விவசாயி குடும்பத்தினரை அவமரியாதை செய்த வங்கி அதிகாரிகளை கண்டித்து தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.