ஆடு திருடர்களை நள்ளிரவில் பைக்கில் துரத்திய எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை.. திருச்சியில் அதிர்ச்சி!
திருச்சி: ஆடு திருடர்களை விரட்டிச் சென்ற திருச்சி நவல்பட்டு காவல்நிலைய துணை ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்துள்ள நவல்பட்டு காவல் நிலையத்தில் துணை ஆய்வாளராக பணியாற்றி வந்தவர் பூமிநாதன் (56). நேற்றிரவு ரோந்து பணியில் 2 காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
அப்போது நவல்பட்டு பகுதியில் இருசக்கர வாகனத்தில் ஆடுகளுடன் வந்த நபர்களை தடுத்து நிறுத்தினார். அவர்கள் நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர்.
அப்பாவும் மகனும் வெளியே வரமாட்டாங்களாம்.. என்னங்க சார் உங்க அரசியல்.. ராமதாஸுக்கு திமுக எம்பி பொளேர்

ஆடு திருட்டு
இதனால் இவர்கள் ஆடுகளை திருடும் கும்பலை சேர்ந்தவர்கள் என்பதை அறிந்த பூமிநாதன் உள்ளிட்ட 3 போலீஸார் அவர்களை ஆளுக்கொரு திசையில் இரு சக்கர வாகனத்தில் விரட்டிச் சென்றனர். அப்போது திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோட்டில் உள்ள மூகாம்பிகை கல்லூரிக்கு அருகே களமாவூர் ரயில்வே கேட் பகுதியில் உள்ள பள்ளத்துப்பட்டி அருகில் சென்ற போது பூமிநாதன் ஒரு இருசக்கர வாகனத்தில் சென்ற இருவரை வளைத்து பிடித்தார்.

அரிவாளால் வெட்டி படுகொலை
இருவரும் பிடிபட்டதை அறிந்த மற்றவர்கள் பூமிநாதனிடம் அவர்களை விட்டு விடுமாறு மிரட்டியுள்ளனர். ஆனால் பூமிநாதன் முடியாது என கூறினார். மேலும் அவர்களை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து செல்ல பூமிநாதன் கடுமையாக போராடியுள்ளார். அவர்களுடன் சண்டையிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பூமிநாதனை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் படுகாயமடைந்த பூமிநாதன் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டார்.

நடமாட்டம்
நள்ளிரவு 2 மணிக்கு நடந்த இந்த சம்பவம் குறித்து அவ்வழியாக இன்று காலை 5 மணிக்கு மக்கள் நடமாட்டத்தின்போதுதான் தெரியவந்தது. இதையடுத்து அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு புகார் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், பூமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலையாளிகள்
இதைத் தொடர்ந்து இந்த படுகொலையில் சம்பந்தப்பட்ட கொலையாளிகளை காவல்துறையினர் தனிப்படை அமைத்து வலைவீசி தேடி வருகின்றனர். அவர்கள் நெடுஞ்சாலையில் போவதும், அவர்கள் பின்னால் இன்னொரு இருசக்கர வாகனத்தில் பூமிநாதன் துரத்துவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அது போல் இன்னொரு இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியில் ஆடு திருடர்கள் மட்டும் செல்வது பதிவாகியுள்ளது. எனவே பூமிநாதனை வெட்டிக் கொன்றுவிட்டு இவர்கள் தப்பியுள்ளது தெரியவந்தது.

பரபரப்பு
இந்த பகுதியில் ஆடு திருட்டு அதிகரித்து வருவதாக மக்கள் புகார் அளித்துள்ளனர். குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்க மக்கள் அதிக ஆர்வம் காட்டுவர் என்பதால் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆடு திருட்டு நடந்து வருவதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். அதை தடுக்க போராடிய பூமிநாதன் வெட்டிக் கொல்லப்பட்டுள்ளார். ஆடுத்திருடர்களை பிடிக்க முயன்ற காவல்துறை துணை ஆய்வாளர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.