• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் திருவிழாக்கள் - அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்ய ஹைகோர்ட் உத்தரவு

Google Oneindia Tamil News

திருச்சி: மகாவிஷ்ணுவின் 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலமாக போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில், வரும் ஜூலை மாதம் வரையில் நடத்த வேண்டிய விழாக்கள் பற்றி அறிக்கை தாக்கல் செய்ய இந்து சமய அறநிலைய துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பூலோக வைகுண்டம், 108 வைணவ தலங்களில் முதன்மையானது என்ற பெருமைக்குரியது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில். அரங்கன் பள்ளி கொள்ளும் புண்ணிய பூமியான ஸ்ரீரங்கம் காவிரி, கொள்ளிடம் என்ற இரு நதிகளுக்கு இடையே அமைந்து உள்ளது. அதனால் தான் ஸ்ரீரங்கத்தை தீவு என கூறுவோரும் உண்டு.

Srirangam Ranganathar Temple Festivals High Court orders to hrced filing of report

156 ஏக்கர் பரப்பளவு, உலகிலேயே உயரமான ராஜகோபுரம் உள்பட 21 கோபுரங்கள், நெடிதுயர்ந்த மதில்சுவர்களை கொண்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை தென்னிந்தியாவின் கலாசார கருவூலம் என்று போற்றுகின்றனர்.

நம்பெருமாளின் திருவடிகளை சேவிப்பதற்காக ஸ்ரீரங்கம் நோக்கி வந்துள்ள பக்தர்கள் ஏராளம். அவர்கள் அனைவரையும் முதலில் வரவேற்பது வானுயர, விண்ணுயர எழுந்து கம்பீரமாக காட்சியளிக்கும் 236 அடி உயர ராஜ கோபுரம் தான் என்று சொன்னால் மிகையாகாது. ஆனால் இந்த ராஜ கோபுரத்தை விட வரலாற்று சிறப்புமிக்கது ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வெள்ளை கோபுரம்.

இக்கோவிலை சுற்றி அமைந்துள்ள மொத்த கோபுரங்களின் எண்ணிக்கை 21. அனைத்து கோபுரங்களும் பல வண்ணங்களில் காட்சியளிக்க இந்த கிழக்கு கோபுரம் மட்டும் வெள்ளையாக காட்சியளிக்கும்.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் திருவிழாக்கள் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் என அனைத்தும் பண்டைக்காலத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகளின்படியே இன்றளவும் நடத்தப்பட்டு வருகிறது. பூஜை முறைகள் மற்றும் உள்ள சடங்குகள் என எல்லாமே கோவிலொழுகு என்ற நூலில் குறிக்கப்பட்டுள்ள விதிமுறைகளின் படியே நடத்தப்பட்டு வருகின்றன.

ஆண்டுக்கு 365 நாட்களும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை பொறுத்த வரை திருநாட்கள் தான் என கூறும் அளவிற்கு இங்கு பல்வேறு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் எடுத்துக்கூறுவது என்பது இயலாத காரியமாகும். இதில் பழமை மாறாமல் நடத்தப்பட்டு வரும் விழாக்கள் 322 என வகைப்படுத்தப்பட்டு உள்ளது.

சித்திரை மாதம் தொடங்கி பங்குனி மாதம் வரைக்கும் ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தில் தினம் தினம் திருவிழாதான். இந்த விழாக்கள் எல்லாவற்றிலும் முதன்மையானது வைகுண்ட ஏகாதசி பெருவிழாவாகும். இது தென்னிந்திய விழாக்களில் மிகவும் புகழ் வாய்ந்ததாகும். இவ்விழா ஒவ்வொரு ஆண்டும் மார்கழி, தை மாதங்களுக்கு இடையில் பகல்பத்து, ராப்பத்து இயற்பா என மொத்தம் 21 நாட்கள் நடத்தப்படுகிறது.

வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கியதில் இருந்து நம்மாழ்வார் மோட்சத்துடன் விழா நிறைவு பெறும் நாள் வரை ஸ்ரீரங்கம் நகரமே விழாக்கோலம் பூண்டு இருப்பதை காண கோடி கண்கள் வேண்டும். அது மட்டும் இன்றி விழா நாட்களில் ஒவ்வொரு நாளும் நம்பெருமாள் வெவ்வேறு அலங்காரங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிப்பதும், அரங்கனை மகிழ்விக்க அரையர்கள் அபிநயத்துடன் நாலாயிரம் திவ்ய பிரபந்த பாடல்களை பாடுவதும் வேறு எந்த திவ்ய தேசங்களிலும் இல்லாத ஒன்றாகும்.

இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் நடத்தப்பட வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு உரிமையில்லை எனவும், ஆகம விதிகளின்படி விழாக்களை நடத்த வேண்டும் என மனுதாரர் ரங்கராஜன் வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, மத உரிமை, பொது நலனை விட வாழ்வுரிமை உயர்ந்தது எனவும், வாழ்வுரிமை முக்கியமானது எனவும் வாழ்வுரிமையை கருதி அரசு எடுக்கும் நடவடிக்கைகளில் தலையிட முடியாது என தெரிவித்தார்.

அதேசமயம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோவிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி, ஆறு வாரங்களுக்குள் அறிக்கை அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், பொது சுகாதாரம் மற்றும் கொரோனா தடுப்பு விதிகளில் எந்த சமரசமும் செய்து கொள்ளக் கூடாது என திட்டவட்டமாக அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைத்தனர்.

English summary
Srirangam Ranganathar Temple is revered as Puloga Vaikundam in Vaishnava revisions. The Chennai High Court has directed the Department of Hindu Religious Affairs to file a report on the ceremonies to be held till July at the Srirangam Ranganathar Temple, which is revered as the premier destination among the 108 Divya Desams.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X