• search
திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நமக்கு கடவுள் துணை இருக்கிறது... திமுக சூழ்ச்சி செய்தாலும் ஜெயிக்க முடியாது - முதல்வர் பழனிச்சாமி

|

திருச்சி: இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. தெய்வம் நமக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. ஆதலால் திமுக தலைவர் ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் எவ்வளவு தில்லுமுள்ளுகள் செய்தாலும் வெற்றி பெறமுடியாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

திருச்சியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிச்சாமி சொந்த அண்ணனை கூட ஏற்றுக்கொள்ளாமல் கட்சியை விட்டு நீக்கியவர் தான் ஸ்டாலின். இப்படி இருக்கிற அவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற போகிறார் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் அரசியல் களத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. இறுதிக்கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித்தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்.

திருச்சியில் இபிஎஸ் பிரசாரம்

திருச்சியில் இபிஎஸ் பிரசாரம்

திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் இரவு நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் திறந்த வேனில் நின்றபடி அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மு.பரஞ்சோதி, ப.குமார், பத்மநாதன், கு.ப.கிருஷ்ணன், செல்வராசு, சந்திரசேகர், இந்திரா காந்தி, மற்றும் கூட்டணி கட்சியான த.மா.கா. வேட்பாளர் தர்மராஜ் ஆகியோருக்கு நேற்று இரவு வாக்கு சேகரித்தார் முதல்வர் பழனிச்சாமி.

திருச்சி அதிமுகவின் கோட்டை

திருச்சி அதிமுகவின் கோட்டை

எம்.ஜி.ஆர். காலத்திலும் திருச்சி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை. ஜெயலலிதா இருந்த போதும் திருச்சி மாவட்டம் அ.தி.மு.க. கோட்டை. ஜெயலலிதாவின் ஆட்சி தொடர இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். தமிழகத்தில் பல திட்டங்களையும், நன்மைகளையும் செய்து நிறைவேற்றி இருக்கிறோம். ஆனால், எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் என்னென்னமோ பேசி வருகிறார். அ.தி.மு.க. ஆட்சியில் எதுவுமே நடக்கவில்லை என்று பொய்யான குற்றச்சாட்டை தொடர்ந்து மக்களிடத்தில் சொல்லி அனுதாபம் தேடி, அரசியல் நாடகம் ஆடி தேர்தலில் வெற்றி பெற திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்புகிறார்.

சொந்த வீடு நிலம்

சொந்த வீடு நிலம்

மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும் திருச்சி புறநகர் மாவட்டத்தில் நிலமும் இன்றி, வீடும் என இரண்டும் இல்லாத ஏழைகளுக்கு சொந்தமாக நிலம் வாங்கி கான்கிரீட் வீடுகள் கட்டி கொடுக்கப்படும். சாதி பாகுபாடே பார்க்க மாட்டோம். பாலக்கரை பகுதி மக்களுக்கு சொந்தமாக அடுக்குமாடி வீடு கட்டி கொடுக்கப்படும். அதேபோன்று பட்டா இல்லாதவர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஆதிதிராவிடர் மக்கள் அரசு மூலம் வீடு கட்டி அது தற்போது குடியிருக்க தகுதி இல்லாத வீடுகளாக இருந்தால், அதற்கு பதிலாக புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும்.

பிள்ளையார் சுழி போட்ட திமுக

பிள்ளையார் சுழி போட்ட திமுக


இன்றைக்கு ஸ்டாலின் செல்லும் இடமெல்லாம் ‘நீட்' தேர்வு குறித்து பேசி வருகிறார். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரசும், தி.மு.க.வும் தான். 2010ஆம் ஆண்டில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்தது. அப்போது தி.மு.க. எம்.பி.க்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தனர். அந்த வேளையில் மாநிலத்திலும் தி.மு.க. ஆட்சி, மத்தியிலும் தி.மு.க. ஆட்சி. அந்த காலக்கட்டத்தில்தான் நீட் கொண்டு வரப்பட்டது. எனவே, நீட்டுக்கு பிள்ளையார் சுழி போட்டது காங்கிரசும், தி.மு.க.வும்தான். அண்ணா தி.மு.க. அல்ல.

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு

தமிழகத்தில் நீட் வரக்கூடாது என கடுமையாக ஜெயலலிதா முயற்சி எடுத்தார். இன்றைக்கும் அதே நிலைப்பாட்டுடன் தான் இருக்கிறோம். இருந்தாலும் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களாக, பல் மருத்துவர்களாக வேண்டும் என்ற ஏழை மாணவர்களின் எண்ணத்தை நிறைவேற்றுவதற்காக அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் இயற்றி அமல்படுத்தினோம். நானும் அரசு பள்ளியில் படித்தவன் என்பதை உணர்ந்து என் மனதில் பட்டதை செய்தேன்.

சாதனை பட்டியல்

சாதனை பட்டியல்

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதன் காரணமாக அரசு பள்ளியில் படித்த 435 பேர் மருத்துவர்களாக கல்லூரியில் சேர்ந்துள்ளனர். மேலும் ஒரே ஆண்டில் 11 புதிய மருத்துவ கல்லூரியை நாம் தொடங்கி இருக்கிறோம். இது வரலாற்று சாதனை.
வெளிநாட்டில் கூட இல்லாத மருத்துவ வசதி அங்கு கிடைக்கும். அங்கு உயர்தர சிகிச்சை கிடைக்கும். அதுதான் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா கண்ட கனவு. அந்த இருபெரும் தலைவர்கள் கண்ட கனவை எங்கள் அரசு நனவாக்கி கொண்டிருக்கிறது. இந்த புதிய மருத்துவ கல்லூரிகளில் அடுத்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம் கூடுதலாக 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு கிட்டும்.

கோதாவரி - காவிரி இணைப்பு

கோதாவரி - காவிரி இணைப்பு

ஒவ்வொரு ஆண்டும் கர்நாடக மாநிலத்தில் வாதாடி, போராடி தண்ணீரை பெற்று வருகிறோம். அதுவும் உபரி நீரைத்தான் திறந்து விடுகிறார்கள். காவிரி நதிநீரை நம்பிதான் பல மாவட்ட மக்கள் குடிநீர் பிரச்சினைக்கு ஏங்கி கொண்டிருக்கிறார்கள். எனவே, டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் கோதாவரி-காவிரி நதிகள் இணைப்பு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக ஸ்டாலின் ஒருநாளாவது பேசி இருப்பாரா?. அ.தி.மு.க.வை பொறுத்தவரை நான் ஒரு விவசாயி. உழைக்கிறவர்கள் வாழ வேண்டும். விவசாயம் செழித்தால் நாடு செழிக்கும்.

நதிநீர் பிரச்சினை

நதிநீர் பிரச்சினை

அந்த வகையில் கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்திற்கு உதவ வேண்டும் என பிரதமரிடம் இன்றும் கோரிக்கை வைத்துள்ளேன். அதற்கு உதவிட தெலுங்கானா முதல்வர் சொல்லி இருக்கிறார். ஆந்திர முதல்வரும் கோதாவரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்க தடையில்லை என்று சொல்லி இருக்கிறார். இப்படிப்பட்ட திட்டத்திற்கு என்றாவது தி.மு.க. முயற்சி எடுத்ததுண்டா?. அத்திட்டத்திற்கு நிதி வேண்டும், சுற்றுச்சூழல் அனுமதி வேண்டும். மத்திய அரசின் அனுமதியும் வேண்டும். அதைத்தான் பிரதமரிடம் கூறி இருக்கிறேன். எனவேதான், மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கிறோம்.

பொய் பேசும் திமுக

பொய் பேசும் திமுக

திமுக ஒவ்வொரு தேர்தலிலும் தேர்தல் அறிக்கை வெளியிடும். ஆனால், அவை நிறைவேற்றாது. நிலம் இல்லாத விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் வழங்குவதாக சொன்னார்கள். கொடுத்தார்களா? இல்லை. ஆனால், மக்களை ஏமாற்றுவார்கள்.
நமது அரசுக்கு வருண பகவான் கருணை இருக்கிறது. இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. தெய்வம் நமக்கு பக்க பலமாக இருந்து வருகிறது. ஆதலால் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் எவ்வளவு பொய் பேசினாலும், எத்தனை சூழ்ச்சிகள் செய்தாலும் எவ்வளவு தில்லுமுள்ளுகள் செய்தாலும் வெற்றி பெறமுடியாது. உண்மையை பேசினால் தான் மக்கள் நம்புவார்கள்.

மக்கள்தான் நீதிபதி

மக்கள்தான் நீதிபதி

அ.தி.மு.க. என்பது ஐ.எஸ்.ஐ. முத்திரை போன்ற கட்சி. நான் விவசாயி என்பதால் விவசாயிகளை பற்றி கவலைப்படுகிறேன். அவர்களின் வாழ்விற்காக சிந்திக்கிறேன். ஆனால் விவசாயிகளை பற்றி கவலைப்பட்டது உண்டா?. சட்டசபைக்கு ஒரு நாள் கூட லீவு எடுக்காமல் சென்று உள்ளேன். தமிழக சட்டசபை வரலாற்றிலேயே எந்த ஒரு முதல்வரும் இப்படி லீவு எடுக்காமல் வந்தது கிடையாது. ஸ்டாலின் என்னைப்பற்றி என்ன சொன்னாலும் அதனை சந்திக்க தயார். அவர் சொல்வது பற்றி எனக்கு கவலை இல்லை. மக்கள் தான் நீதிபதிகள்.

ஊழல் பணம்

ஊழல் பணம்

திமுகவில் மூத்த நிா்வாகிகளாக உள்ள முன்னாள் அமைச்சா்கள் அனைவருக்கும் கல்லூரிகள் உள்ளன. அந்த கல்லூரிகளின் சுவா்களை தட்டினாலே ஊழல் என ஒலிக்கும். அமைச்சா்களாக வருவதற்கு முன் இவா்களிடம் என்ன சொத்து இருந்தது. பணம் காய்க்கும் மரம் வைத்திருந்தாா்களா?. திமுக முன்னாள் அமைச்சா்கள் 13 போ் மீது ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. தனிநீதிமன்றம் அமைத்து அந்த வழக்குகளை விரைந்து முடிந்துவிட்டால், உதயநிதியின் குறுக்கே மூத்த நிா்வாகிகள் யாரும் வரமாட்டாா்கள் என்பதற்காகவே திமுக தலைவா் ஸ்டாலின் செயல்படுகிறாா். தமிழக மக்கள் மீது எந்த அக்கறையும் இல்லை.

மீண்டும் அதிமுக அரசு

மீண்டும் அதிமுக அரசு

இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு தி.மு.க. அரசு தான். கண்ணுக்கு தெரியாத காற்றில் கூட ஊழல் செய்தவர்கள் தி.மு.க.வினர். ஸ்டாலின் என்னை பார்த்து சொல்கிறார் ஊழல் என்று. காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் ஸ்டாலின். கட்சி சொன்னதால் நான் கையெழுத்திட்டேன் என ஸ்டாலின் அவரே ஒரு பேட்டியில் சொல்லி இருக்கிறார். இதற்கான ஆதாரம் இருக்கிறது.

பாம்பா பல்லியா

பாம்பா பல்லியா

எடப்பாடி பழனிசாமி பல்லி, பாம்பை விட விஷதன்மை கொண்டவர் என ஸ்டாலின் பேசி இருக்கிறார். நான் மனிதன். பாம்பும் அல்ல. பல்லியும் அல்ல. ஆனால் சொந்த அண்ணனை கூட ஏற்றுக்கொள்ளாமல் கட்சியை விட்டு நீக்கியவர் தான் ஸ்டாலின். இப்படி இருக்கிற அவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்ற போகிறார்? என்று முதல்வர் பழனிச்சாமி கேள்வி எழுப்பினார்.

English summary
Chief Minister Edappadi Palanisamy told an election campaign rally in Trichy that the people had decided to resume the AIADMK government. Stalin was the one who left the party without even accepting his own brother. Edappadi Palanichamy has questioned how he is going to save the people of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X