நூடுல்ஸ் சாப்பிட்டு உயிரிழந்த 2 வயது சிறுவன்.. விலா எலும்பு உடைந்ததால் மரணத்தில் திடீர் திருப்பம்!
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் பிரிட்ஜில் வைத்திருந்த நூடுல்ஸை சாப்பிட்டு பலியான சிறுவன் உடலில் காயங்கள் இருப்பதாகவும் விலா எலும்பு உடைந்துள்ளதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே தாளக்குடி மருதமுத்து நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் சேகர்- மகாலட்சுமி தம்பதியர். சேகர் ஜேசிபி ஆபரேட்டராக உள்ளார்.
குழப்பம்! ஓபிஎஸ் வீட்டுக்கு எடப்பாடி அனுப்பிய 2 பேர்! பேசுனது என்ன? சீக்ரெட்டை உடைத்த வைத்தியலிங்கம்
இருவரும் வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். காதலித்து 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு சுஜிதா (6), சாய் தருண் (2 ) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

நூடுல்ஸ்
இந்த நிலையில் கடந்த 17 ஆம் தேதி மகாலட்சுமி, நூடுல்ஸை சமைத்து கணவர், குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு மீதமிருந்ததை காலையில் சாப்பிட்டுக் கொள்ளலாம் என நினைத்து பக்கத்து வீட்டில் கொடுத்து பிரிட்ஜில் வைத்திருக்க சொல்லியுள்ளார். இதையடுத்து காலையில் அந்த நூடுல்ஸை பக்கத்து வீட்டிலிருந்து மகாலட்சுமி வாங்கியுள்ளார்.

சூடு செய்யாத நூடுல்ஸ்
அதை சூடு செய்யாமல் அப்படியே குழந்தைக்கு கொடுத்ததாக தெரிகிறது. நூடுல்ஸை விரும்பி சாப்பிட்ட குழந்தைகளில் சாய் தருணுக்கு சிறிது நேரத்தில் கடுமையான வாந்தியும் வயிற்றுப்போக்கும் ஏற்பட்டிருக்கிறது. இதில் சோர்ந்து போன அந்த குழந்தை மயங்கி விழுந்தது. உடனே பதறிபோன மகாலட்சுமி சாய் தருணை அருகே உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

குழந்தையின் உடல் மோசம்
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தையின் உடல் நிலை மோசமாக இருக்கிறது. எனவே அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறியுள்ளார்கள். இதையடுத்து ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொள்ளிடம் போலீஸார்
இதையடுத்து கொள்ளிடம் போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு குழந்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் உடலில் காயங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

போலீஸார் சந்தேகம்
மேலும் குழந்தையின் விலா எலும்பும் உடைந்துள்ளதாக அந்த அறிக்கையில் உள்ளது. இதனால் குழந்தையின் மரணத்தில் மர்மம் இருப்பதாக போலீஸார் சந்தேகிக்கிறார்கள். ஆனால் இதுகுறித்து பெற்றோரிடம் விசாரித்த போது குழந்தை ஒரு வாரத்திற்கு முன்பு மூன்று சக்கர சைக்கிளிலிருந்து கீழே விழுந்து காயம் ஏற்பட்டதாக தெரிவித்தனர். எனினும் இதுகுறித்து விசாரணை தீவிரமடைந்துள்ளது.