எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா.. இவங்க எல்லாம் பலத்தை நிரூபிக்கணும்.. விஜய பிரபாகரன் ஓவர் பேச்சு
திருச்சி: மூன்றாவது அணி அமைக்க விஜயகாந்த் தயாராக உள்ளார் என விஜய பிரபாகரன் பேசியுள்ளார்.

அண்ணாவின் 52 ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி தமிழகத்தில் இருக்கக் கூடிய பல்வேறு கட்சியை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். அதன்படி தேமுதிக சார்பிலும் திருச்சியில் உள்ள அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்சியில் உள்ள மேலசிந்தாமணி அண்ணா சிலைக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் வந்திருந்தார். அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அமெரிக்கா
அவர் கூறுகையில் மூன்றாவது அணி அமைக்க விஜயகாந்த் தயாராக உள்ளார். மூன்றாவது அணியை வெற்றி பெறச் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அமெரிக்காவில் இருந்து கொண்டு எம்ஜிஆர் வென்றார்.

உடல்நிலை சரியில்லை
அது போல் விஜயகாந்த் பேச வேண்டும், நடக்க வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர் எங்கிருந்தாலும் வெற்றி பெறுவார். அவர் ஏற்கெனவே பேச வேண்டிய பல காரியங்களை பேசிவிட்டார். விஜயகாந்துடைய உடல்நிலை சரியில்லாததால் தேமுதிகவின் நிலை தேய்ந்து போய்விடவில்லை.

தொகுதி பங்கீடு
அவர் மீண்டும் வருவார். தேமுதிக குறித்த விமர்சனங்களுக்கு நாங்கள் பதிலளிக்க விரும்பவில்லை. கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் கட்சியின் தலைவர்தான் முடிவு எடுக்க வேண்டும். எனவே உங்கள் ஒவ்வொருவருடைய யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது.

முதல்வர்
விஜயகாந்த் விரைவில் பிரச்சாரத்திற்கு வருவார். தமிழகத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தல் அனைவருக்கும் முதல் தேர்தலாக இருக்கும். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவருமே தங்களது பலத்தை நிரூபிக்க வேண்டியுள்ளது என விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.