குலசை தசரா கோலாகலம்... சூலாயுதத்தால் மகிஷாசூரனை வதம் செய்த முத்தாரம்மன்
தூத்துக்குடி: விஜயதசமி விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு குலசேகரப்பட்டிணம் கடற்கரையில் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஜெய் காளி, ஓம் காளி என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். காளி வேடம் அணிந்த ஏராளமான பக்தர்கள் ஆக்ரோஷமாக ஆடியது காண்பவர்களை மெய்சிலிர்க்க வைத்தது.
மைசூரு தசராவிற்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றது குலசை தசரா விழா. நவராத்திரியை முன்னிட்டு ஆண்டு தோறும் 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா இந்த ஆண்டு விழா கடந்த வாரம் பக்தர்கள் காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து பணம் வசூல் செய்தனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள கோவிலின் அருகில் தசரா பிறை அமைத்து, அதில் பக்தர்கள் தங்கியிருந்து அம்மனை வழிபட்டனர்.
விஜயதசமி நாளான நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியான மகிசாசூரசம்ஹாரம் நேற்று நள்ளிரவு நடைபெற்றது. நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர். அக்னிசட்டி ஏந்தியும், முளைப்பாரி எடுத்தும் கோவிலுக்கு வந்த பக்தர்கள் பல மணி நேரம் காத்து இருந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடற்கரையில் முத்தாரம்மன்
காலை முதல் மதியம் வரையிலும் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இரவு 11 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இரவு 12 மணி அளவில் அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேசுவரர் கோவிலுக்கு முன்பாக எழுந்தருளினார். அப்போது காளி வேடம் அணிந்த திரளான பக்தர்களும் அம்மனை பின்தொடர்ந்து வந்தனர். சூரசம்ஹாரத்தை காண்பதற்காக, கடற்கரையில் பல லட்சக் கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

மகிஷாசூரன் வதம்
முதலில் ஆணவமே உருவான மகிஷாசூரன், அம்மனை சுற்றி வந்து போருக்கு தயாரானான். அவனை சூலாயுதத்தால் அம்மன் வதம் செய்தார். யானையாகவும், சிங்கமாகவும், சேவலாகவும் அடுத்தடுத்து உருமாறி போர் புரிய வந்த மகிஷாசூரனை அம்மன் சூலாயுதத்தால் வதம் செய்தார். அப்போது கூடியிருந்த பல லட்சக்கணக் கான பக்தர்கள் ஓம் காளி, ஜெய் காளி என்று முழக்கமிட்டது விண்ணை எட்டியது.

ஆக்ரோஷ அம்மனுக்கு சாந்தி பூஜை
அசுர வதம் முடிந்து கடற்கரை மேடையில் எழுந்தருளிய அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிதம்பரேசுவரர் கோவிலில் எழுந்தருளிய அம்மனுக்கு சாந்தாபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் அம்மன் தேரில் பவனி வந்து கோவிலை சென்றடைந்தார். தொடர்ந்து கோவில் கலையரங்கத்தில் அம்மனுக்கு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.

குலசை தசாரா நிறைவு
தசரா திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் குலசையில் குவிந்ததால் காணும் இடம் எங்கும் மனித தலைகளாக காணப்பட்டது.
வேடம் அணிந்த பக்தர்கள் சேகரித்த காணிக்கைகளை கோவில் உண்டியலில் செலுத்தினர். பின்னர் கடற்கரையில் மகிஷாசூரனை அம்மன் வதம் செய்ததை தரிசித்தனர். குலசேகரன்பட்டினம் நகரம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
பதினோராம் நாளான இன்று அம்மன் பூஞ்சரப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். மாலை 4 மணிக்கு கொடி இறக்கப்பட்டு காப்பு களைதல் நடைபெறும் வேடமணிந்து வந்த பக்தர்களும் காப்புகளை களைவார்கள். நள்ளிரவு 12 மணிக்கு மீண்டும் அபிஷேகம் நரடபெறும். நாளை காலை சிறப்பு பாலபிஷேகத்துடன் குலசை தசரா திருவிழா நிறைவடைகிறது.