பாஜகவுக்கு தள்ளிவிடப்படுகிறதா தூத்துக்குடி? அதுவும் அந்த பெண் பிரபலத்துக்கா..அதிமுக நிர்வாகிகள் ஷாக்
தூத்துக்குடி: தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் முயற்சித்து வருவதாக கூறப்படும் நிலையில் அந்த தொகுதியில் பாஜக சார்பில் சசிகலா புஷ்பா போட்டியிட காய்நகர்த்தி வருவதாக சொல்லப்படுகிறது.
இதனிடையே தூத்துக்குடி தொகுதியை பாஜகவிற்கு தள்ளிவிட முயற்சிகள் நடப்பதாகக கூறி அதிமுக நிர்வாகிகள் அப்செட்டில் இருக்கிறார்களாம்.
கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி எம்பி வெற்றி பெற்றார்.

திமுக வெற்றி
அதேநேரம் அதற்கு முன்னதாக நடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுகவைக் சேர்ந்த கீதா ஜீவன் வெற்றி பெற்றிருந்தார். அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனை விட 19 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வென்றிருந்தார்.

செல்லபாண்டியன் வெற்றி
அதேநேரம் 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுகவின் செல்லபாண்டியன் வெற்றி பெற்றிருநதார். திமுகவின் கீதா ஜீவனை விட சுமார் 27 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்று இருந்தார். எனவே முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியன் மீண்டும் 2021 சட்டசபை தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிட முயற்சி செய்து வருகிறார்.

கடும் அப்செட்
ஆனால் தூத்துக்குடி அ.தி.மு.க-வில் கோஷ்டிப்பூசல் அதிகமாக உள்ளதாக சொல்லப்படுகிறது. ‘தொகுதியில் அ.தி.மு.க-வுக்கு பெரிதாக வாய்ப்பு இல்லை' என்று கூறி, தொகுதியை பா.ஜ.க-வுக்குத் தள்ளிவிட அதிமுகவில் சிலர் காய்நகர்த்துவதாக சொல்லப்படுகிறது. இதனால் செல்லப்பாண்டியன் தரப்பினர் கடும் அப்செட்டில் இருக்கிறார்களாம்.

வாய்ப்பு கிடைக்குமா
இந்த கோஷ்டிப்பூசலுக்கு நடுவே பா.ஜ.க-வின் சசிகலா புஷ்பா, தொகுதியில் வேட்பாளராகக் களமிறங்க டெல்லி மேலிடம் மூலம் எடப்பாடி தரப்பிடம் பேசிவருவதாக சொல்லப்படுகிறது.. ஜெயலலிதாவையே நேரடியாக எதிர்த்தவர் என்பதால் வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை.