தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாத்தான்குளம்.. ஜெ. வழக்கு போல வெளி மாநில அதிகாரிகள் விசாரிக்க வேண்டும்.. சுதா ராமலிங்கம்

By Staff
Google Oneindia Tamil News

- ஜி. தனலட்சுமி

சென்னை: ஜெயலலிதா வழக்கைப் போல சாத்தான்குளம் வழக்கையும் வெளிமாநில அதிகாரிகளை வைத்து விசாரித்தால்தான் நீதி கிடைக்கும் என்று பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஒன்இந்தியா தமிழ் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

சாத்தான்குளத்தில் தந்தை மகன் மர்ம மரணம் குறித்த வழக்கை விசாரிக்க பலத்த அழுத்தத்துக்கு இடையே சிபிஐக்கு மாற்றுவதற்கு தமிழக அரசு முடிவு செய்து அறிவிப்பாணையும் வெளியிட்டுள்ளது.

sathankulam other state police officers should probe the case

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மரக்கடை நடத்தி வந்தவர் ஜெயராஜ். வயது 58. அதே பகுதியில் செல்போன் நடத்தி வந்தவர் அவரது மகன் பென்னிக்ஸ். வயது 31. கடந்த 19ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்ட பொது முடக்க நேரத்திற்கு மேலாக கடையை திறந்து வைத்ததாக ஜெயராஜை விசாரிக்க காவல்துறையினர் அழைத்து சென்றனர்.

இவரைத் தொடர்ந்து அவரது மகனும் காவல்நிலையத்துக்கு சென்றார். அங்கு காவல்துறைக்கும், ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைதொடர்ந்து காவல்துறையினர், தந்தை மகனை கடுமையாக தாக்கியதாக செய்தி வெளியானது.

இதைத்தொடர்ந்து கோவில்பட்டி சிறையில் அனுமதிக்கப்பட்ட இவர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு இருவரும் இறந்தனர். சாத்தான்குளம் காவல்துறையினர் கொடூரமான முறையில் இவர்கள் இருவரையும் தாக்கியதால்தான் மரணம் அடைந்தனர் என்று பரவலாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தாமாக முன் வந்து இந்த வழக்கை எடுத்து விசாரித்து வருகிறது.

நொறுக்கப்பட்ட பொய்கள்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் நிறைய காயம்! பிரேத பரிசோதனை அறிக்கையால் திருப்பம்நொறுக்கப்பட்ட பொய்கள்.. ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் நிறைய காயம்! பிரேத பரிசோதனை அறிக்கையால் திருப்பம்

இந்த சம்பவம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. மாஜிஸ்திரேட் விசாரணைக்கான வழக்காகத்தான் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சிபிஐக்கு தமிழக அரசு மாற்றி அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த வழக்கின் போக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கத்திடம் ஒன் இந்தியா தமிழ் சார்பில் கருத்து கேட்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:

சாத்தான்குளம் காவல்துறையில் நடந்த தந்தை மகன் இறப்பு சம்பவத்தை எவ்வாறு பதிவு செய்துள்ளனர்?

மர்ம மரணம் என்ற வகையில்தான் இந்த சம்பவத்தை பதிவு செய்துள்ளனர். இந்திய தண்டனைச் சட்டம் 176 என்பதே மர்ம மரணத்தைத்தான் குறிக்கிறது. தந்தை மகன் இறப்பில் இந்த சட்டத்தின் கீழ், மாஜிஸ்திரேட் விசாரணைக்கான வழக்காக பதிவு செய்துள்ளனர். காவல்துறையினர் மீது முதல் தகவல் அறிக்கையே பதிவு செய்யவில்லை. குற்றம் செய்தவர்கள் மீது சட்டம் 302ன் கீழ் வழக்குப் பதிவு செய்து இருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. சம்பவத்தின்போது உடன் இருந்த காவலர்கள், 'ஃபிரண்ட்ஸ் ஆப் போலீஸ்' ஆகியோர் மீது இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருக்க வேண்டும்.

சிபிஐ விசாரணைதான் ஒரே தீர்வா?

சிபிஐ விசாரணையால் பெரிதாக எதுவும் நடந்துவிடும் என்று நான் நினைக்கவில்லை. நிச்சயமாக நேர்மையான, சுய அதிகாரம் பெற்ற அதிகாரிகளை வெளி மாநிலங்களில் இருந்து தேர்வு செய்து, சிறப்புக்குழு அமைத்து விசாரித்தால்தான் நியாயம் கிடைக்கும். இங்கு இருக்கும் அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள், ஸ்பெஷல் பிராஞ்ச் அதிகாரிகளாக இருந்தாலும் போதிய அழுத்தம் கொடுத்து விசாரணை மேற்கொள்ள முடியாது.

ஜெயலலிதா வழக்கு, குஜராத் வழக்குகள் போல வெளிமாநில அதிகாரிகளிடம் ஒப்படைத்து விசாரணை மேற்கொண்டால்தான், முறையான விசாரணை நடக்கும் என்று எண்ணுகிறேன்.

இதுமாதிரி காவல் நிலையங்களில் குற்றங்கள் நடக்காமல் இருக்க தமிழக அரசு என்ன செய்ய வேண்டும்?

முதலில் குற்றம் செய்தவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்தாலே, நிச்சயமாக குற்றம் செய்ய மற்றவர்கள் அஞ்சுவார்கள். உண்மையைப் பேச வெளிப்படையான அமைப்பு வேண்டும், மனித உரிமை கமிஷன் இருக்கு, நீதிமன்றம் இருக்கிறது. இது எல்லாமே வேலை செய்யாமல் இருக்கின்றன. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

பொதுவாகவே காவல்நிலையம் சென்று புகார் கொடுக்க வேண்டும் என்றால் மக்கள் அஞ்சுவார்கள். தற்போது இன்னும் அச்சம் அதிகரித்துள்ளது. மக்கள் இனிமேல் எவ்வாறு அச்சமின்றி காவல்துறையை அணுகலாம்?

யாருமே தனியாக காவல்துறைக்கு செல்ல வேண்டாம். உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள். புகார் கொடுத்தாலும் ஒரு நகல் எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சாட்சியங்கள், ஆவணங்கள் வைத்துக் கொள்ள வேண்டும். சிசிடிவி கேமரா வந்துவிட்டன, சாட்சியம் இல்லாமல் எதுவும் செய்ய வேண்டாம். உள்ளூரில் இருக்கும் தன்னார்வலர்கள், வழக்கறிஞர்கள், சட்ட உதவியாளர்கள் ஆகியோரின் உதவியை நாடினால், நிவாரணம் கிடைக்கும்.

சாத்தான்குளம் விஷயத்தில் உங்களுடைய தனிப்பட்ட கருத்து என்ன?

தனிப்பட்ட கருத்து என்று சொல்ல அங்கு நான் செல்லவில்லை. யாரையும் இந்த மாதிரி கொடுமைக்கு உள்ளாக்கக் கூடாது. இறந்தவர்கள் மீது பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை மிகவும் பிரன்ஷியாக இருக்கிறது. ''நல்ல முறையில் மரியாதையாக சொன்னோம். அனைவரும் கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் இருவரும் கட்டிப் புரண்டார்கள், அதில் காயம் அடைந்து விட்டனர்'' என்று பைத்தியக்காரத்தனமாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை யாரும் நம்பமாட்டார்கள். இவர்களை கைது செய்ய வேண்டிய தேவையே இல்லை. காவலர்களின் அத்துமீறல் என்பது தெளிவாகத் தெரிகிறது. காவல்துறை செய்தது தவறு, மாஜிஸ்திரேட் செய்தது தவறு, டாக்டர் செய்ததும் தவறு. அவர்களது தங்களது வேலையை செய்ய தவறி விட்டனர்.

இதில் யாருடைய தவறு அதிக பங்கு வகிக்கிறது?

எல்லாருமே தவறிழைத்துள்ளனர். காவலர்கள்தான் முதலில் அத்துமீறலில் ஈடுபட்டனர். அவர்கள் அத்துமீறவில்லை என்றால், இந்த சம்பவம் நடந்தே இருக்காது. ஆரம்பத்து வைத்தவர்கள் காவல்துறையினர். பின்னர் நடந்து எல்லாம் 'கம்ப்ளீட் சிஸ்டம் பெயிலியர்'

காவல் நிலையத்தில் நடந்த இந்த கொடூர சம்பவம் நமக்கு கொடுக்கும் பாடம் என்ன?

குறைந்தது இந்த சம்பவம் ''ஐ ஓபனராக'' இருந்து இதுபோன்ற குற்றங்கள் எதிர்காலத்தில் நடக்காமல், ஒருத்தரும் அடி வாங்காமல், இறக்காமல் இருப்பதற்கான வழிமுறைகளை நாம் தேட வேண்டும்.

இவ்வாறு பிரபல வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.

English summary
Advocate Sutha Ramalingam has said that Sathankulam case should be probed by other state Police officers.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X