எனக்கு ஒரு வாய் சோறு யார் தருவாங்க.. கண்ணீர்விட்டபடியே உயிரைவிட்ட செல்வனின் தாய்.. தட்டார்குடி சோகம்
தூத்துக்குடி: "எனக்கு இனி யார் ஒரு வாய் சோறு தருவாங்க" என்று கண்ணீர் வடித்தபடியே ஒரு ஏழை தாயின் உயிர் பிரிந்துள்ளது.. தூத்துக்குடியில் அதிமுக பிரமுகரால் கொல்லப்பட்ட செல்வனின் அம்மா எலிசபெத்தான் இப்படி கதறி கதறியே உயிரை விட்டுள்ளார்.. இந்த சம்பவம் தட்டார்மடம் பகுதியில் மிகுந்த சோகத்தை உருவாக்கி உள்ளது.
தூத்துக்குடி தட்டார்மடம் பகுதியை சேர்ந்தவர் செல்வன்.. இவருக்கும், அந்த பகுதியின் உசரத்துக்குடியிருப்பை சேர்ந்த அதிமுகவின் மாவட்ட வர்த்தக அணிச் செயலாளரான திருமணவேலுவுக்கும் நிலம் தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது... இரு தரப்புமே போலீசில் புகார் செய்த நிலையில், இறுதியில் செல்வம் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், தனக்கு நியாயம் வேண்டி மதுரை ஹைகோர்ட்டில் செல்வன் முறையிட்டார்.. கடந்த 17ம் தேதி செல்வம் சொக்கன் குடியிருப்பிற்கு தனது பைக்கில் திரும்பிக்கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அவரது கார் மீது மோதியதில் அவரை கீழே விழ செய்து, பிறகு தாங்கள் வந்த காரிலேயே கடத்தியும் சென்றது.. செல்வன் உயிர் பிரியும்வரை உருட்டுக் கட்டைகளாலேயே தாக்கி கொன்றதாகவும் கூறப்பட்டது.
அதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்பட்ட செல்வனின் உடலை வாங்க மறுத்து போராட்டம் செய்தனர்.. இந்த சம்பவத்துக்கு எம்பி கனிமொழியும், முக ஸ்டாலினும் அதிமுக அரசை கேள்வி மேல் கேள்வி கேட்டு துளைத்தெடுத்தும், விசாரணை கோரியும் அறிக்கையும் வெளியிட்டனர். பின்னர், இந்த கொலை வழக்கில் திருமண வேல் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது.
பெண்களுடன் அராஜக நெருக்கம்.. சிக்கிய ஆபாச மன்னன்.. "எனக்காக வாதாட யாருமே இல்லையே".. கதறும் காசி!
இதனிடையே, கொலை செய்யப்பட்ட செல்வத்தின் அம்மா எலிசபெத்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.. செல்வன் இறந்ததில் இருந்தே அதிர்ச்சியிலும் கவலையிலும் தவித்து வந்திருக்கிறார்.. மகனை நினைத்து இந்த 2 வாரமாக அழுது கொண்டே இருந்தாராம்.. சரியாக சாப்பிடவும் இல்லை.. உடல்நிலை ரொம்ப மோசமாகவும், அவரை உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதித்து, தீவிர சிகிச்சையும் தரப்பட்டது.
ஆனால், "எனக்கு இனி யார் ஒரு வாய் சோறு தருவாங்க" என்று புலம்பியபடியே இருந்தாராம் எலிசபெத்.. கண்ணீர் வடித்தபடியே அந்த உயிர் இன்று பிரிந்துவிட்டது! மகனையே நினைத்து நினைத்து அழுதபடியே தாயின் உயிர் பிரிந்த சம்பவம், தட்டார்மடம் பகுதி மக்களை மேலும் சோகத்திலும் துயரத்திலும் மூழ்கடித்து வருகிறது.