நிலக்கரி தட்டுப்பாடு...தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 4 யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த 4 யூனிட்டுகளில் உற்பத்தி செய்யப்படும் 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்ற அபாயம் எழுந்துள்ளது.
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் மின் வெட்டு பிரச்சனை நிலவி வருகிறது. நாடு முழுவதும் உள்ள 178 அனல் மின் நிலையங்களில் சுமார் 100 அனல் மின் நிலையங்களில் மிகவும் குறைவான அளவில் நிலக்கரி கையிருப்பு உள்ளது தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்க தொடங்கிவிட்டது. காலநிலை மாற்றம், புவி வெப்பமடைதல் போன்ற சூழலியல் சீர்கேடுகளால் இயல்பு வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இதனால் கோடை வெயிலை சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக மின் தேவையும் பெரிதும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் மின் தேவையின் பெரும்பான்மை பகுதியை நிலக்கரி தான் பூர்த்தி செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இது 8 முதல் 10 மணி நேரம் வரை மின்வெட்டு என சிக்கலை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் உள்ள அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்டுகள் மூலம் தலா 210 மெகாவாட் விதம், 1050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களாக நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின் உற்பத்தி பாதிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில வாரங்களாகவே அங்கு மின் உற்பத்தி சில யூனிட்களில் மட்டுமே நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் உள்ள 5 யூனிட்களில் 1,077 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. இதனையடுத்து நிர்ணயிக்கப்பட்ட 1,050 மெகாவாட் மின்சாரத்தை விட அதிகமாக உற்பத்தி நடைபெற்றது.
மீண்டும் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நேற்றைய தினம் மின் உற்பத்தி 2 யூனிட்களில் மட்டுமே நடைபெற்றது. தற்போது 4 யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 840 மெகவாட் மின் உற்பத்தி தடை பட்டுள்ளது. 1 யூனிட்டில் மட்டுமே மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மின் வெட்டு ஏற்பட்டு மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் மின்சார உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளதால் மின்வெட்டு பிரச்சினை அதிகரிக்கும் என்ற அபாயம் எழுந்துள்ளது.