For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தென்னை மரத்தில் பேயா?- செல்போன் ரிங்டோனால் பீதியில் ஆழ்ந்த கிராமம்!

Google Oneindia Tamil News

பைந்தூர்: உடுப்பியின் வன்சி கிராமத்தில் தென்னை மரம் ஒன்றில் இருந்து குழந்தை சப்தம் வந்ததால் ஊரே பேய் இருப்பதாக பயப்பட ஆரம்பித்த நிலையில், அது வெறும் செல்போன் என்று தெரிந்து கிராமமே ரூம் போட்டு சிரித்து வருகின்றது.

உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகா வன்சி கிராமத்தில் தங்கஜி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தா. இவர் தனது தோட்டத்தில் தென்னைமரங்களை வளர்த்து வருகிறார்.

இந்த தென்னந்தோப்பு மத்தியில் உள்ள பண்ணை வீட்டில் கோவிந்தா தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு பைந்தூர் அருகே அடிக்கே கோட்லு கிராமத்தை சேர்ந்த சீன பூசாரி என்பவர் கோவிந்தாவின் தோட்டத்தில் உள்ள தென்னைமரங்களில் இருந்து தேங்காய்களை பறித்து விட்டு சென்றார்.

தென்னை மரத்தில் பேயா?:

அன்று இரவு திடீரென்று தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டது. அந்த சத்தம் சிறிது நேர இடைவெளியில் தொடர்ந்து ஒலித்துக் கொண்டே இருந்தது. இந்த சத்தத்தை கேட்ட கோவிந்தாவும், அவரது குடும்பத்தினரும் தென்னை மரத்தில் குழந்தையின் பேய் இருப்பதாகவும், அது தான் சிரித்தப்படி இருப்பதாக கருதி பீதி அடைந்தனர். இதனால் அன்று இரவு முழுவதும் அவர்கள் தூங்காமல் தவித்தனர்.

பேயை விரட்ட பூஜை:

மறுநாள் அதிகாலையில் கோவிந்தா தென்னை மரத்தில் இருந்து குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்டுக்கொண்டிருப்பது பற்றி தனது கிராமத்தில் உள்ள ஒரு சாமியாரை சந்தித்து கூறினார். அந்த சாமியார் சோழி போட்டு பார்த்து தென்னை மரத்தில் இறந்துபோன குழந்தையின் பேய் இருப்பதாகவும், அந்த பேயை விரட்ட பூஜை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

பூஜைக்கு பயப்படாத பேய்:

இதைதொடர்ந்து கோவிந்தா அந்த சாமியாரை அழைத்து சென்று குழந்தையின் சிரிப்பு சத்தம் கேட்ட தென்னை மரத்தை சுற்றி சிறப்பு பூஜை செய்தார். மேலும் சிறப்பு பூஜை செய்ததால் இனி பேய் பீதி இல்லை என்று கோவிந்தாவும், அவரது குடும்பத்தினரும் நினைத்திருந்தனர். ஆனால் நடந்ததோ வேறு. சாமியார் பூஜை போட்டு சென்ற அன்று இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை சீரான இடைவெளியில் மீண்டும் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டுக்கொண்டே இருந்தது. இதனால் கோவிந்தா, அவரது குடும்பத்தினரை மீண்டும் பேய் பீதி தொற்றிக்கொண்டது. இதன் காரணமாக அன்று இரவும் அவர்கள் தூக்கத்தை தொலைத்தனர்.

ஆயிரக்கணக்கில் செலவு:

அடுத்த நாள் காலையில் கோவிந்தா மீண்டும் சாமியாரை சந்தித்து, குழந்தையின் சிரிப்பு சத்தம் தொடர்ந்து கேட்டதாக கூறினார். அப்போது சாமியார் தென்னை மரத்தில் இருக்கும் பேய் சாதாரண பேய் இல்லை. அந்த பேயை விரட்ட பெரிய அளவில் பூஜை நடத்த வேண்டியதிருக்கிறது எனக் கூறி ஆயிரக்கணக்கில் ரூபாய் வாங்கிக்கொண்டார்.

பீதியில் கிராம மக்கள்:

தென்னை மரத்தில் குழந்தை பேய் இருப்பதாக அந்த கிராமம் முழுவதும் பெரும் பீதியும், பரபரப்பும் ஏற்பட்டது. இதனால் கிராம மக்கள் அனைவரும் இரவு 7 மணிக்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வராமல் முடங்கி கிடந்தனர்.

மீண்டும் வந்த தேங்காய பறிக்கும் சீனபூசாரி:

இதற்கிடையே தேங்காய் பறிக்கும் கூலி தொழிலாளி சீனபூசாரி, மறுபடி கோவிந்தாவின் வீட்டிற்கு வந்தார். அவரிடம் கோவிந்தாவோ, "நீ தேங்காய்களை பறித்து சென்ற நாள் முதல் தென்னை மரத்தில் இருந்து குழந்தை பேய் இருப்பதாகவும், குழந்தையின் சிரிப்பு சத்தம் இரவில் கேட்கிறது" என்று கூறினார்.

என் போனைக் காணும்:

அப்போது சீனபூசாரி, தேங்காய் பறிக்க வந்த போது எனது செல்போனை தவறவிட்டு விட்டேன். அந்த செல்போன் அழைப்பு ஒலி கூட குழந்தை சிரிப்பது போன்று தான் இருக்கும் என்றும் கூறியுள்ளார். அந்த செல்போனை காணாததால் நான் வேறொரு செல்போனில் இருந்து எனது செல்போன் எண்ணுக்கு கடந்த 3 நாட்களாக போன் செய்து வந்ததாகவும் கூறினார்.

எல்லாமே ரிங்டோன் லீலை:

இதையடுத்து அந்த தென்னை மரத்தில் ஏறி, சீனபூசாரி தனது செல்போனை எடுத்தார். பின்னர் செல்போனுக்கு, வேறொரு செல்போனில் இருந்து போன் செய்து காண்பித்தார். அப்போது சீனபூசாரியின் செல்போனில் குழந்தையின் சிரிப்பு ஒலி கேட்டது. அப்போது தான் சீனபூசாரி தவறி விட்ட செல்போன் தென்னை மரத்தில் கிடப்பதும், அதில் இருந்து குழந்தையின் சிரிப்பு ஒலி வந்ததும் தெரியவந்தது.

திருப்பிக் கொடுத்த சாமியார்:

இதனால் அந்தப் பகுதியில் 3 நாளாக நீடித்த பேய் பீதி சம்பவம் புஸ்வானமாகி போனது. இதையடுத்து கோவிந்தா சாமியாரை சந்தித்து நடந்த சம்பவங்கள் பற்றி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த சாமியார் கோவிந்தாவிடம் பூஜை செய்ய வாங்கிய பாதி தொகையை திருப்பி செலுத்தினார்.

English summary
People from udupi village feared for a ghost in coconut tree; finally its a phone's ringtone.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X