திருமணமான 3 மாதத்தில் போலீஸ்காரர் தற்கொலை.. 'இரக்கமற்ற எமதர்ம ராஜாவே' என வாட்ஸ் அப்பில் கடிதம்!
வேலூர்: வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே போலீஸ்காரர் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர் இம்ரான் சாகும் முன்பு 'உயர்திரு. எமதர்ம ராஜா, எமலோகம்' என்ற முகவரிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்துள்ளதாக ஒரு கடிதம் வைரலாகி வருகிறது. அந்த கையெழுத்து அவருடையதா அல்லது வேறு யாருடையது என்று அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் கணியம்பாடி அருகே கட்டுப்புடி கிராமத்தைச் சேர்ந்தவர் இம்ரான். இவருக்கு வயது 23. காட்பாடி அருகே சேவூரில் தமிழ்நாடு சிறப்பு காவல் படை பிரிவு போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார்.
எஸ்ஐ அடிச்சுட்டாரு.. சாகப்போறேன். என் ஆன்மா சும்மா விடாது.. மந்திரவாதி மரண வாக்குமூலம்

பாதுகாப்பு பணி
நேற்று வேலூர் மாவட்டத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வந்திருந்தார். இதன் காரணமாக இம்ரானுக்கு ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் பாதுகாப்பு பணி போடப்பட்டிருந்தது. பாதுகாப்பு பணிக்கு மதியம் வரை ஈடுபட்டிருந்தார். பின்னர் மதியம் 2.30 மணியளவில் கட்டுப்புடி கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.

பணிசுமை காரணமா?
வீட்டிற்கு சென்ற காவலர் இம்ரான் திடீரென மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.. இம்ரானுக்கு 3 மாதத்துக்கு முன்புதான் திருமணம் நடந்தது. எனவே அவரது தற்கொலைக்கு பணிச்சுமை காரணமா என அல்லது வேறு காரணமா என்று வேலூர் தாலுகா போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

எமதர்ம ராஜா,
இந்நிலையில், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ‘காவலர், தமிழ்நாடு காவல்துறை' என்ற பெயரில் ‘உயர்திரு. எமதர்ம ராஜா, எமலோகம்' என்ற முகவரிக்கு காவலர் இம்ரான் கடிதம் எழுதியதாக ஒரு கடிதம் வைரலாகி வருகிறது.

யாருடைய கையெழுத்து
அதில், ‘இரக்கமற்ற எமதர்ம ராஜாவே, கடந்த சில வருடங்களாக காக்கி உடை தரித்த சொந்தங்களை எமலோக பணிக்காக அழைத்துக் கொள்கிறீர்கள். எங்கள் மரணம் சாதாரணமாக இல்லாமல், நாட்டிற்காக உயிர்விடும் மரணமாக இருக்க வேண்டும் என்பதே எங்களின் கடைசி விருப்பம். கடிதம் உங்களின் பார்வைக்கு கிடைத்தவுடன் கருணை காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று உள்ளது.. கடைசியில் உள்ள கையெழுத்தின் மூலம் கடிதம் எழுதியவரை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.