எந்த பிரதமரும் செய்யாததையா மோடி செய்துவிட்டார்... ஊடகங்கள் தான் அவரை பெரிதுபடுத்துகின்றன -K.s.அழகிரி
வேலூர்: பிரதமர் மோடிக்கு அமெரிக்காவில் அவர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை என்றும் ஊடகங்கள் தான் அவருக்கு பெரியளவில் வரவேற்பு கிடைத்ததை போல் காட்டுவதாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
மேலும், இதற்கு முன்னால் இருந்த பிரதமர்கள் விமானத்தில் பயணிக்கும் போது என்ன செய்தார்களோ, அதைத் தான் மோடியும் செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, விமானப் பயணத்தின் போது அரசின் முக்கியக் கோப்புகளை பார்வையிட்ட படம் வெளியான நிலையில் அதனை மையமாக வைத்து கே.எஸ்.அழகிரி இந்தக் கருத்தை பகிர்ந்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. திடீரென இரவில் வந்து பிரதமர் மோடி தந்த சர்ப்ரைஸ்.. திகைத்த ஊழியர்கள்

வெற்றிவாய்ப்பு
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தமிழக மக்கள் திமுக-காங்கிரஸ் கூட்டணியை நேசிப்பதாகவும், 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தங்கள் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக உள்ளதாகவும் கூறினார்.

கண்டிப்பு
பாஜகவை பொறுத்தவரை அது சர்வாதிகார கட்சி என்றும் அந்தக் கட்சியின் மாநில பிரதிநிதியாக உள்ள அண்ணாமலை, திமுகவையும், காங்கிரஸையும் குறை சொல்லித்தான் பேசுவார் எனவும் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதாக கூறிய அவர், ஊடகத்தினர் மீதான ஹெச்.ராஜாவின் கருத்தை கண்டித்தார்.

வெற்றிபெறும்
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இல்லை என்றும் குற்றமற்றவர்கள் என்றால் அதை நிரூபிக்க வேண்டியது அவர்கள் பொறுப்பு தான் எனவும் தெரிவித்தார். மேலும், நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் தமிழக அரசின் முயற்சி நிச்சயம் வெற்றிபெறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

விமர்சனம்
ஊடகங்கள் இன்று பாஜகவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாகவும், மோடிக்கு அமெரிக்காவில் வரவேற்பே இல்லாத போதும் அங்கு பெரியளவில் வரவேற்பு கொடுக்கப்பட்டதாக காட்டுவதாகவும் விமர்சித்தார். மேலும், மோடிக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை ராகுலுக்கும், மு.க. ஸ்டாலினுக்கும் ஊடகங்கள் ஏன் கொடுப்பதில்லை என வினவினார். இதனிடையே சோனியாவோ, ராகுலோ நினைத்திருந்தால் காங்கிரஸ் ஆட்சி செய்த 10 ஆண்டுகளில் பிரதமராக வந்திருக்கு முடியும் என்றும் ஆனால் அவர்கள் செய்யவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.

குலாம் நபி ஆசாத்
காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்டவேண்டுமானால் முறையாக தலைமையிடம் குலாம் நபி ஆசாத் கூற வேண்டும் என்றும் அதைவிடுத்து ஊடகங்கள் மூலம் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டத்தை கூட்ட நினைப்பது தவறு எனவும் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டினார். இதனிடையே குலாம் நபி ஆசாத், கபில் சிபில் போன்ற மூத்த தலைவர்கள் ராகுல்காந்தி மீது அதிருப்தியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.