பாமககாரங்க புகுந்து அடிக்கிறாங்க..கண்ணீர் விட்டழுத ஜெகத்ரட்சகன்! என்ன நடக்கிறது விக்கிரவாண்டியில்?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் தேர்தல் பிரச்சாரம் அங்கு சூடு பிடித்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தல் பணிகளில் ஈடுபட்ட திமுகவினரை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கியதோடு மருத்துவமனைக்குள்ளும் புகுந்து கொடூரமாக தாக்குதல் நடத்தியதாக கண்ணீர் மல்க பேசி இருக்கிறார் திமுக எம்பியான ஜெகத்ரட்சகன்.. என்ன நடந்தது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..

விக்கிரவாண்டி எம்.எல்.ஏ.வாக இருந்த புகழேந்தி மரணமடைந்த நிலையில், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு ஜூலை 10ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

DMK MP Jagadratsakan complains about PMK executives attack dmk members in Vikravandi by-election

ஒரு மாதத்திற்கு உள்ளாகவே தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அரசியல் கட்சிகள் பரபரப்பில் உள்ளனர். அதே நேரத்தில் முதல் கட்சியாக திமுக தேர்தலில் போட்டியிடும் என்றதோடு வேட்பாளராக அன்னியூர் சிவாவையும் அறிவித்தது.

இதேபோல நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயாவும், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சி.அன்புமணியும் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரசாரமும் தொடங்கியுள்ளது. குறிப்பாக திமுக, நாம் தமிழர் கட்சி, பாட்டாளி மக்கள் தலைவர்கள் அங்கு களத்தில் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

திமுகவுக்கு ஆதரவாக கூட்டணி கட்சித் தலைவர்கள், பாமகவுக்கு ஆதரவாக அன்புமணி ராமதாஸ், சௌமியா அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு ஆதரவாக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் அங்கு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் கட்சிகள் பிரச்சாரம் நடத்துவது, சாலைகளில் பேரணி செல்வது போன்றவைகள் காரணமாக அரசியல் கட்சியினருக்குள் அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் தேர்தல் பணியில் ஈடுபட்ட திமுகவினரை பாட்டாளி மக்கள் கட்சியினர் தாக்கியதாக கண்ணீர் மல்க புகார் தெரிவித்திருக்கிறார் திமுக எம்பி ஆன ஜெகத்ரட்சகன். விக்கிரவாண்டி தொகுதி ஆசூர் பகுதியில் திமுக பாமக பிரமுகர்கள் இரு தரப்பாக பிரிந்து தாக்கி கொண்டதோடு, இரண்டு தரப்பும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக உள்ளூர் நிர்வாகிகளிடம் விசாரித்த போது, விக்கிரவாண்டி தொகுதி ஆசூர் கிராமம் திமுக இளைஞரணி அமைப்பாளர் கண்ணதாசன் என்பவரை அதே பகுதியை சேர்ந்த பாமகவை சேர்ந்த அவைத்தலைவர் அண்ணாதுரை மற்றும் கிளைக் கழக செயலாளர் புருஷோத்தமன் தாக்கியதில் தலையில் பலத்த காயமுற்று முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறுகின்றனர். இந்த சம்பவம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

காயமுற்ற இளைஞர் அணி அமைப்பாளர் கண்ணதாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவரிடம் அறிவுரை கூறிவிட்டு சென்றார். முன்னதாக கண்ணதாசன் கடந்த சில நாட்களாக பாமகவை சேர்ந்த 25க்கும் மேற்பட்ட நபர்களை திமுகவில் இணைத்ததாகவும் இதில் ஆத்திரமுற்ற பாமக அவைத் தலைவர் அண்ணாதுரை மற்றும் கிளைக் கழக செயலாளர் புருஷோத்தமன் நேற்று இரவு திமுக கட்சி அலுவலகத்தில் இருந்த தன்னை தகாத வார்த்தையால் திட்டி சண்டையிட்டு தலையில் பீர் பாட்டிலால் அடித்து விட்டதாகவும் புகார் கூறியுள்ளார்.

இதில் படுகாயம் உற்ற அவரை அவரது தம்பி ரவிக்குமார் என்பவர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் தலையில் பலத்த காயம் பட்டதாகவும் பேட்டி அளித்துள்ளார். இதேபோன்று கண்ணதாசன் அடித்ததாக கூறப்படும் பாமக பிரமுகர் அண்ணாதுரை அதே முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தேர்தல் நேரத்தில் இரண்டு தரப்பினரும் மாறி மாறி தாக்கி விட்டதாக கூறி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை அமைச்சர் பொன்முடி, எம்பி ஜெகத்ரட்சகன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். திமுக கொடி கட்டிக் கொண்டிருந்த நபரை பாமகவினர் தாக்கியது மிகுந்த வருத்தமளிப்பதாகவும் அவர்கள் மீது காவல்துறையில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து எம்பி ஜெகத்ரட்சகன் பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், திமுக அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த கண்ணதாசனை பத்துக்கு மேற்பட்ட நபர்கள் குடிபோதையில் பீர் பாட்டிலால் தலையில் அடித்து கடுமையாக தாக்கி உள்ளதாகவும் இதை வன்மையாக கண்டிப்பதாகவும் இது என்ன மாதிரியான செயல் என கேள்வி எழுப்பினார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லை என்றால் மாறி மாறி இது பிரச்சினையை பெரிதாக்கும் என பேசினார். அப்போது திடீரென விம்மி விம்மி அழுதவாறு பேசினார் ஜெகத்ரட்சகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+