ஆவின் பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும்?விழுப்புரம் அதிகாரிகள் ஆய்வு
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். பால் பாக்கெட்டிற்குள் தவளை எப்படி போயிருக்கும் என்று குழம்பிப்போன அதிகாரிகள் புகார் அளித்த நபரின் வீட்டிற்கு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் வானமாமலை பகுதியை சேர்ந்தவர் சிவநேசன். இவர் நேற்று காலையில் டீ போடுவதற்காக ஆவின் பாலகத்தில் பால் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பால் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் தவளை இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து சிவநேசன் ஆவின் பாலக முகவர் பாஸ்கரிடம் முறையிட்டுள்ளார். இதை தொடர்ந்து விழுப்புரம் மண்டல ஆவின் விற்பனை பிரிவு மேலாளர் ஐயங்கரனிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.
பால் பாக்கெட்டில் தவளை இருந்தது உண்மையா என ஆவின் விற்பனைப் பிரிவு மண்டல மேலாளர் ஐங்கரன் விசாரணை மேற்கொண்டுள்ளார். ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்ததாக வெளியான தகவல் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, கோவை, சேலம், திருப்பூர், திருச்சி, திண்டுக்கல், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் ஆவின் பால் திருடி விற்கப்பட்டு, தண்ணீர் மற்றும் கலப்படங்கள் செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர்.
இந்த நிலையில் நன்றாக பேக் செய்யப்பட்டிருந்த ஆவின் பால் பாக்கெட்டில் தவளை இருந்த சம்பவம் திருக்கோவிலூர் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பால் பாக்கெட்டில் தவளை எப்படி போயிருக்கும் என்று அதிகாரிகளும், மக்களும் பல விதமாக யோசித்து வருகின்றனர்.