பழமைவாத கருத்தை பரப்புவோரால் நாட்டில் பிரச்சனைகள்! தமிழகத்தில் சூழ்ச்சி எடுபடவில்லை: ஸ்டாலின் தாக்கு
விழுப்புரம்: ‛‛கலைஞர் கருணாநிதி அமைச்சரவையில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தபோது என்மீதும், எனது துறை மீதும் அவர் பொறாமை கொண்டார். இதை வெளிப்படையாக பல இடங்களில் கூறியுள்ளார்'' என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். விழுப்புரம் அருகே கொழுவாரி ஊராட்சியில் 100 வீடுகளுடன் பெரியார் நினைவு சமத்துவபுரத்தை இன்று காலை 9 மணிக்கு திறந்து வைத்தார்.
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு.. 6 பேர் பலி, 12 பேர் படுகாயம்.. நள்ளிரவில் பரபர சம்பவம்
அதன்பிறகு அங்கு அமைக்கப்பட்டுள்ள கலைஞர் பூங்கா, விளையாட்டு திடலை அவர் திறந்து வைத்தார். சர்வீஸ் செய்து வாலிபால் போட்டியை துவக்கி வைத்தார். வீரர்களுடன் அவர் வாலிபால் விளையாடினார். ரேஷன் கடையை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பார்வையிட்டார்.

ஸ்டாலின் பேச்சு
அதன்பின் விழா மேடையில் சமத்துவ புரத்துக்கான கல்வெட்டை திறந்து வைத்தார். குடியிருப்பு பெற்ற பயனாளிகளுக்கு சாவி வழங்கினார். இதையடுத்து நலத்திட்ட உதவிகள் வழங்கினார். விழா மேடையில் அமைச்சர் பொன்முடி பேசினார். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

உள்ளாட்சியில் நல்லாட்சி
இது உள்ளாட்சி துறை சார்பில் நடைபெற கூடிய நிகழ்ச்சியாக அமைந்துள்ளது. இத்துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சியில் நான் முதல்வராக இருந்தாலும் கூட முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான ஆட்சியில் உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்தவன் என்ற முறையில் பங்கேற்கிறேன். நான் உள்ளாட்சி துறையை நிர்வகித்தபோது உள்ளாட்சியில் நல்லாட்சி நடத்தும் நாயகன் என எல்லோரும் கூறுவார்கள்.

கலைஞருக்கு என்மீது பொறாமை
இதனால் தலைவர் கலைஞர் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டபோது உள்ளாட்சி துறை அல்லது ஸ்டாலினை பார்த்தால் பொறாமை வந்துள்ளது. நான் அந்த துறையை வைத்திருந்தால் இன்னும் நல்ல பெயர் கிடைத்து இருக்கும் என சொல்லி இருக்கிறார். மக்களோடு நெருக்கமாக இருக்கும் துறை தான் உள்ளாட்சி துறை. இதில் அமைச்சராக இருந்தவன் என்ற பெருமையோடு, பூரிப்போடு இன்னும் கூற வேண்டும் என்றால் திமிரோடு, ஆதங்கத்தோடு இந்த பங்கேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

பெரியார் இல்லாவிட்டால்...
சாதியால், மதத்தால் , பொருளாதார ஏற்றத்தாழ்வால் பிரிந்தவர்களை சுயமரியாதை கொண்ட மனிதன், தமிழன் என்ற உணர்வுவோடு எழுச்சிபெற வைத்தவர் தான் தந்தை பெரியார். நாட்டை மாற்ற மகத்தான பணிகள் செய்தவர் தான் பெரியார். அவர் இல்லையென்றால் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், நான் உள்பட இந்த இயக்கமே இல்லை. தமிழக முன்னேற்றமடைந்து இருக்காது. தந்தை பெரியார், திராவிட இயக்கம் இல்லாமல் இருந்தால் தமிழ் சமூகம் இத்தகைய நிலைக்கு வந்திருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

சூழ்ச்சிகள் எடுபடாததற்கு காரணம்
பழமைவாத கருத்து, மூடப்பழக்கவழக்கத்தை பரப்புரை செய்யும் சிலரது ஆதிக்கத்தால் நாட்டில் எழும் பிரச்சனைகள் பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும். புரியும். அந்த சூழ்ச்சிகள் தமிழகத்தில் எடுபடாமல் போனதற்கான கராணம் யார் என்று கேட்டால் அதற்கு தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் தான் காரணம். திராவிட இயக்கத்தின் தலைவர்கள் தான் சாதி எனும் அழுக்கை சுமந்து வாழ்ந்த சமூகத்துக்கு பகுத்தறிவு ஊட்டி தன்மானம் மிகுந்த சமத்துவத்தை கட்டியெழுப்பினர்.

திட்டம் தொடரும்
இதனால் தான் தந்தை பெரியார் பெயரில் கலைஞர் கருணாநிதி சமத்துவபுரம் திட்டத்தை கனவு திட்டமாக உருவாக்கி கொடுத்தார். எந்த பாகுபாடு, வேறுபாடு இன்றி வாழ பெரியார் கனவு கண்டார். அனைத்து சாதி, மதத்தின் ஒற்றுமையோடு வாழ விரும்பினார். இதன் விளைவாக தான் கலைஞர் சமத்துவப்புரத்தை உருவாக்கினார். இதுபோன்ற திட்டங்கள் இன்னும் தொடர்ச்சியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.