ஹிஜாப்பை அகற்றச் சொன்னதில் என்ன தப்பு? முகத்தை மூடி ஓட்டு போட முடியாது.. பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
விருதுநகர்: மதுரை மாவட்டம் மேலூரில் வாக்களிக்க வந்த பெண்ணின் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கூறியதில் தவறில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி தேர்தலில் 8 ஆவது வார்டு அல் அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்களிப்பதற்காக கடந்த சனிக்கிழமை இஸ்லாமிய பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்து கொண்டு வந்தார். அப்போது அவரின் ஹிஜாப்பை அகற்றுமாறு பாஜக முகவர் கிரிதரன் தெரிவித்தார்.
5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடங்கியது..!
இதனால் அந்த பெண்ணுக்கும் பாஜக முகவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு வாக்குப் பதிவும் நிறுத்தப்பட்டது. ஹிஜாப்பை அகற்ற சொல்லி பாஜக முகவர் கிரிராஜனின் செயலை கண்டித்து திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வாக்குப் பதிவு மையத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

வாக்குப் பதிவு
சிறிதுநேரம் வாக்குப் பதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக முகவர் கிரிதரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவரை அங்கிருந்து போலீஸார் வெளியேற்றினர். பெண்ணிடம் தகராறு செய்து அரசு ஊழியர்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக கிரிதரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.

ஹிஜாப் விவகாரம்
பாஜக ஆளும் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் வலுத்து வரும் நிலையில் மதுரை மாவட்டம் மேலூரில் ஹிஜாப்பை பாஜக முகவர் எதிர்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் பாஜக முகவர் கிரிதரன் செய்ததில் எந்த தவறும் இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் அதிர்ச்சிகரமான கருத்தை தெரிவித்துள்ளார்.

பொன் ராதாகிருஷ்ணன்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் கட்சி நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பிஜேபி முன்னாள் மத்திய அமைச்சர் பொன்ராதாகிருஷ்ணன் கூறுகையில், நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு திமுக அரசு அராஜகத்தை கட்டவிழ்த்து உள்ளது.

பணபலம்
பணபலம், அதிகார பலம் ஆள் பலம் அவற்றின் மூலமாக தங்களுக்கு எதிராக போட்டியிட்டவர்களை களத்திலிருந்து கரையேற்ற கூடிய வேலையில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் வேட்பாளர் கட்சியினர் தாக்கப்பட்டுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தின் பார்வை சற்று மாற வேண்டும். ஆளுங்கட்சி அராஜகத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

மேலூர் பாஜக முகவர் செய்தது சரியே
மதுரை மேலூரில் பாஜக முகவர் செய்தது தவறில்லை. ஹிஜாப் அணிவது நோக்கம் அல்ல. சாதாரண பெண்களைப் போல வர வேண்டும் என்பதே விருப்பம். இதில் என்ன தவறு இருக்கிறது. தேர்தல் ஆணையம் எந்த ஒரு நபரும் முகத்தை மூடிக் கொண்டு சென்றால் ஏற்றுக் கொள்வார்களா?
நாளை வாக்கு எண்ணிக்கையின் போது முகத்திரை அணிந்து கொண்டு சென்றால் ஏற்றுக்கொள்வார்களா? விமான நிலையத்தில் முகத்திரை கழட்டி முகத்தைக் காட்டுங்கள் என தெரிவிக்கிறார்கள் அது சரியா தவறா ?

கடமையை செய்தார் முகவர்
முகவர் தன்னுடைய கடமையை செய்து இருக்கிறார். எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சரிதான்.
அவர் சில கேள்விகள் கேட்கும்போது அதிகாரிகள் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் நாம். எங்களைப் பொறுத்தவரை பல இடங்களில் நடைபெற்ற உள்ள தவறுகள் திருத்த முடியாத அளவுக்கு உள்ள தவறுகள். பிரச்சனைகள் குறித்து வழக்குப் பதிவு செய்யப்படாமலே உள்ளது. சரியான தேர்தல் நடைமுறையாக தெரியவில்லை. ஆளுங்கட்சியின் அழுத்தம் தான் இதன் காரணம் என நினைக்கிறேன். இவற்றையெல்லாம் மீறி பாஜக மிகச் சிறந்த வெற்றியைப் பெறும் என்று நல மத்திய அமைச்சர் தெரிவித்தார்.