வாஷிங்டன் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏன் இந்த கொல வெறி?" அமெரிக்காவிலிருந்து ஆண்டவனுக்கு ஒரு கடிதம்

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: அமெரிக்காவின், தென் கரோலினாவைச் சேர்ந்த, நமது வாசகர், வெங்கட் நடராஜன், 'ஒன்இந்தியா தமிழுடன்' அவர் எழுதிய உணர்ச்சிகரமான ஒரு கடிதத்தை ஷேர் செய்துள்ளார். கடவுளுக்கு அவர் பல கேள்விகளை முன்வைத்துள்ளார். அந்த கடிதம் இப்படி விரிகிறது..

சர்வ வல்லமை பெற்ற கடவுளுக்கு, விந்தை மனிதன் எழுதும் கடிதம்.

A letter to the God, by our reader

அந்தரத்தில் அண்டம் படைத்தாய் அதில் பல விண்மீன்கள் மிதக்கவிட்டாய். பால் வழியில் சூர்யன், சூர்யனைச் சுற்றிவரக் கோள்கள். அப்பப்பா ஆச்சர்யம்! எரிபொருள் ஏதுமில்லை, அச்சாணி அதுவுமில்லை. இத்துணையும் எப்படி இயக்குகிறாய். நீயே சர்வ சக்தி மயம்.

கதிரோனுக்கு சரியான தூரத்தில் பூமி படைத்து, நீர் நிலை உருவாக்கி, அதைச் சுற்றி வளிமண்டலம் அமைத்து, எல்லையற்ற இந்த வெட்ட வெளியில் உயிர்களை உருவாக்கினாயே அது விந்தையினும் விந்தை.

நீல வானம், கடல், மேகம், மழை, மரம், செடி கொடி, மலர், அதிலே மகரந்தம், அதிலிருந்து தேன் என்ன ஓர் அதிசயம். சிலந்தி வலை, குருவிக்கூடு, பட்டு நூல், பசுவின் பால் அதிசயமே. மலை, அருவி, ஆறு, அதில் துள்ளும் மீன்கள், தத்தி தாவும் மான், பாயும் புலி, சிங்கத்தின் கம்பீரம், சீறும் காளை, அதிசயம். ஒரு செல் அமீபா முதல் பல செல் யானை வரை, ஒரு நாள் பவழ பூச்சி முதல் பல ஆண்டுகள் வாழும் ஆமை வரை என பலவிதம்.

புல்வெளியில் உறையும் பனித்துளி, அதிகாலை பறவைச் சத்தம், அந்திநேர பூச்சிகள் ரீங்காரம், தாலாட்டும் தென்றல், பாலைவனத்தின் கானல் நீர், இரவின் அமைதி என அடுக்கிக்கொண்டே போகலாம்.

இதயம் துடிக்கும் மனிதன் படைத்தாய், அதிலே அன்பு வைத்தாய் அதிசயம். நொடிப்பொழுதும் மறக்கா சுவாசம் வைத்தாய். உறக்கம் தந்தாய், அதிலே கனவு வைத்தாய், ஒவ்வொரு நாலும் துயிலெழுவது அதிசயமே. ஐம்புலன்கள் கொண்ட ஆருயிர் மனிதன் அரிதான அதிசயம். ஒவ்வொரு உயிரும் ஒரு துளியினால் மிக நுட்பமாக தன் சந்ததியை உருவாக்குகிறதே விந்தையினும் விந்தை.

இவ்வளவு படைத்த நீ... ஓருயிர் மற்றொரு உயிரைக் கொன்று தான் வாழவேண்டும் என்ற நியதி விதித்தாயே... ஏன் இந்த கொலவெறி?
உன்னை அறிய, மனிதன் பல மதம் படைத்தான். அதில் பல கடவுள்களை உருவாக்கினான். அதனால் மதம் பிடித்து நாளும் மாய்ந்து போவதை ஏன் தடுக்கவில்லை? நீ ஒருவன் மட்டும்தான் கடவுள் என்றால் வானவில் போல் வானில் தோன்றி அசரீரி வாக்குகளை அவ்வப்போது அளிக்கலாமே, மனிதனின் அறியாமையை நீக்கலாமே... ஓ உலகைப் படைப்பது மட்டும் தான் உன்வேலையா? மனிதன் பகுத்தறிவைப் பயன்படுத்த வேண்டுமா? அப்படிப் பார்த்தாலும் உன் படைப்பில் நிறைய குறைபாடு உள்ளதே? ஏன்? நீயும் மனிதன் போல் குறைபாடு உள்ளவனோ?

சுனாமி, பூகம்பம், எரிமலை, சூறாவளி, புயல் என பல கொடூர இயற்கை சீற்றங்களை ஏன் உண்டாக்குகிறாய்? குருவிக்கூடு முதல் மனிதன் கட்டிய வீடு வரை ஏன் அழிகிறாய்? பல உயிர்களை சிதைக்கிறாய், சித்தரவதை செய்கிறாய்... அவ்வளவு கொடூரனா நீ? நீ படைத்த உலகம் என்பதாலா இல்லை, இவ்வுயிர்கள் உன் அடிமைகள் என்ற எண்ணமா?

கரோனா போன்ற கொடிய நோய்களை அவ்வப்போது பரப்பி கோடிக்கணக்கான உயிர்களை குடிக்கிறாயே? அவர்களின் சுற்றத்தாரை துடிக்க வைக்கிறாயே? மகா பாதகன் நீ? ஓ... உன் படைப்பு அளவுக்கதிகமாகும்போது அதைக் கட்டுப்படுத்தும் தந்திரம் தானோ இது? சாதாரண சளி காய்ச்சல் முதல் உயிர்கரைக்கும் புற்றுநோய் வரை ஏன் எங்கள் நிம்மதியைக் குலைக்கிறாய்? மனநோய் என்ற பெயரில் பல இளைஞர்கள் தற்கொலை செய்கிறார்களே? அவர்கள் கனவை ஏன் கலைக்கிறாய்?

உன் பெயரைச் சொல்லியே ஊரை ஏமாற்றுகிறார்களே? நீ என்ன ஏமாளியா அல்லது உன் மவுனம் சம்மதமா? இலங்கை இனப்படுகொலையில் அரங்கேறாத அவலங்களே இல்லை. அதை பார்த்து ரசித்தாயா? இல்லை இயலாமையால் வருந்தினாயா? சாதாரண மனிதர்கள் போல் அதை தடுக்கும் ஆற்றல் இல்லையா? உனக்கும் எனக்கும் என்ன பெரிய வித்தியாசம்

மக்களை ஏய்த்து ஆட்சி அதிகாரம் செய்யும் அரசியல்வாதிகளை ஏன் தண்டிக்கவில்லை? உன் படைப்பை பார்த்து உனக்கே அச்சமா என்ன?
எல்லையில் நடக்கும் போரை ஏன் தடுக்கவில்லை? கண்ணை இழந்தவன் கால் இழந்தவன் என்று வாழ்நாள் முழுதும் சித்திரவதை. பிள்ளையைப் பறிகொடுத்த பெற்றோர்கள் பெற்றோரை இழந்து தவிக்கும் பிள்ளைகள் ஏன் இந்த கொடூரம் நீ படைத்த இந்த உலகில்? இதயம் இல்லையா உனக்கு?

அவ்வளவு ஏன், அன்றாடம் தெருமுனையில் நடக்கும் குற்றங்களைக்கூட நீ நிறுத்துவதில்லை. ஓ... உலகைப் படைத்த களைப்பில் உறங்கி விட்டாயோ? இல்லை வெட்கி உன் முகத்தை மூடிக் கொண்டாயோ? இதற்கெல்லாம் காரணம் முன் ஜென்ம பாவம் என்கிறாயா? அப்போ முதல் ஜென்மத்தில் பாவத்தை விதைத்தது யார்? நீதானே அந்தக் கள்வன் உலகமெனும் மேடையில் நீ நடத்தும் கபட நாடகம் தானா அத்துனையும்? உன் பொழுது போக்கிற்கு எங்களை பலியாக்குகிறாயே? இது நியாயமா?

பள்ளி என்ற பெயரில் சிறார்கள் அனுபவிக்கும் சித்ரவதை, அலுவலகம் என்ற பெயரில் மனிதர்கள் படும் அடிமை வேதனை, சிகிச்சை என்ற பெயரில் நடக்கும் கொள்ளைகள், சினிமா என்ற பெயரில் அரங்கேறும் கூத்துகள், சட்டம் என்ற பெயரில் கை விலங்குகள், காவல்துறை அட்டூழியங்கள், கையூட்டு.

தொட்டிச் செடி என்ற பெயரில் தாவரங்கள் அடிமை, செல்லப் பிராணி பெயரில் விலங்குகள் அடிமை. சாலையை கடக்கும்போது அடிபடும் அணில், கால் மிதிபட்டு இறக்கும் எறும்பு ஏன்? காட்டு தீயில் கருகும் தாவரங்கள் மற்றும் விலங்குகள், மாசினால் அழியும் கடல் உயிரினங்கள். ஏன் இவ்வளவு அவலங்கள்? ஏன் இந்த பாவங்கள்? நீ படைத்த இந்த அற்புத உலகத்தில்.

உறக்கம் களை உன் படைப்பை பார்... இவ்வாறு, வெங்கட் நடராஜன் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

English summary
Oneindia Tamil reader Venkat Natrajan from US, write a letter to, the God.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X