திடீரென்று மயங்கிய ‛பைலட்’... வானில் கட்டுப்பாட்டை இழந்த விமானம்... பயணி செய்த துணிகர சம்பவம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா நோக்கி சென்ற விமானத்தில் உடல் நலக்குறைவால் திடீரென்று பைலட் மயங்கிய நிலையில் எந்த முன் அனுபவமும் இன்றி பயணி ஒருவர் விமானத்தை இயக்கி பத்திரமாக தரையிறக்கி அசத்தினார்.
வடஅமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள பஹாமாஸ். இங்கிருந்து ‛செஸ்னா 208' எனும் சிறிய ரக விமானம் 2 பயணிகளுடன் அமெரிக்காவின் புளோரிடா மகாணத்துக்கு புறப்பட்டது.
6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?
விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது பைலட் திடீரென்று சோர்வாக காணப்பட்டார். அவரது நிலை என்ன என்று பயணிகள் கேட்டனர்.

விமானத்தில் மயங்கிய பைலட்
அப்போது தனக்கு உடல் நலம் சரியில்லை என பைலட் கூறினார். மேலும், அடுத்த சில நிமிடங்களில் தன்னை அறியாமலே பைலட் திடீரென்று மயங்கினார். இதனால் விமானம் கட்டுப்பாட்டை இழந்தது. பயணிகள் அச்சமடைந்தனர். இதையடுத்து விமானத்தில் பயணம் செய்த டேரன் ஹாரிசன் என்பவர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

விமானம் இயக்கிய பயணி
இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்த ஊழியர் தான் கூறும் அறிவுரைகள்படி விமானத்தை செலுத்த கூறினார். அதற்கு பயணி ரேடன் ஹாரிசன் தனக்கு விமானத்தை பற்றி ஒன்றும் தெரியாது என கூறினார். இதை கேட்ட கட்டுப்பாட்டு அறை ஊழியர் ராபர்ட் மார்கான் தான் வழங்கும் அறிவுரைப்படி விமானத்தை செலுத்த வலியுறுத்தினார். இதையடுத்து பயணி டேரன் ஹாரிசன் விமானத்தை இயக்கி பால்ம் பீச் சர்வதேச விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதையடுத்து பைலட்டுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது.

பேசியது என்ன?
இதற்கிடையே பயணி டேரன் ஹாரிசன் மற்றும் கட்டுப்பாட்டு அறை ஊழியர் ராபர்ட் மார்கான் இடையே நடந்த உரையாடல் வெளியாகி உள்ளது. அதன்படி டேரன் ஹாரிசன், ‛‛நான் ஆபத்தான நிலையில் இருக்கிறேன். எனது விமானி மயங்கிவிட்டார். விமானத்தை ஓட்டுவது எப்படி என்று எனக்கு தெரியவில்லை'' என்றார். இதற்கு கட்டுப்பாட்டு அறையின் ராபர்ட் மார்கன், ‛‛விமானத்தை வேகத்தை கட்டுப்படுத்தி வடக்கே அல்லது தெற்கே கடற்கரையைப் பின்தொடர முயற்சிக்கவும். நாங்கள் உங்களை கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்'' என்றார். மேலும் விமானம் இயக்குவது குறித்தும், விமானத்தை தரையிறக்குவது பற்றியும் அறிவுரை வழங்கினார். இதையடுத்து விமானம் பத்திரமாக தரையிறங்கப்பட்டது.

அனுபவத்தை பகிர்ந்த பயணி
விமானம் தரையிறங்கிய பிறகு ராபர்ட் மார்கான், டேரன் ஹாரிசன் ஆகியோர் சந்தித்தனர். டேரன் ஹாரிசனுக்கு அவர் உள்பட விமான நிலையத்தில் இருந்தவர்கள் வாழ்த்துகள் தெரிவித்தனர். மேலும் அவரின் செயலை பாராட்டினர். இதுபற்றி டேரன் ஹாரிசன் கூறுகையில், ‛‛நான் கர்ப்பிணி மனைவியை பார்க்க புறப்பட்டேன். இந்த வேளையில் தான் விமானத்தில் பைலட் மயங்கினார். நான் பயந்துவிட்டேன். ஆனால் ராபர்ட் மார்கான் பதற்றமின்றி அறிவுரைகளை வழங்கினார். இந்த வேளையில் அவருக்கு நன்றி தெரிவிக்கிறேன்'' என்றார். இதபற்றி ராபர்ட் மார்கான் கூறுகையில், ‛‛முன்பின் அனுபவம் இல்லாத நபர் விமானம் ஓட்டுவது சாதாரண விஷயம் கிடையாது. இதனை டேரன் ஹாரிசன் நேர்த்தியாக செய்துள்ளார்'' என பெருமையாக கூறினார்.