உலகில் 100ல் 90 பேர் எதிர்ப்பு! செல்வாக்கற்ற தலைவராக விளாடிமிர் புதின்! பரபர சர்வே முடிவு
வாஷிங்டன்: Pew எனும் ஆராய்ச்சி மையம் சார்பில் 18 நாடுகளில் நடந்த சர்வேயில் உலகில் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகி உள்ளார். உக்ரைன் போர் விவகாரத்தால் 100ல் 90 பேர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் அதிபராக இருப்பவர் விளாடிமிர் புதின். இந்நிலையில் ரஷ்யா-உக்ரைன் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதையடுத்து ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் பிப்ரவரி 24ல் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.
உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடித்து தலைநகர் கீவ்வை கைப்பற்ற வேண்டும் என்பதே விளாடிமிர் புதினின் நோக்கமாக உள்ளது.
பிரிக்ஸ்! உக்ரைன் போருக்கு இடையே சந்திக்கும் தலைகள்! இந்தியா, ரஷ்யா, சீனாவை கண்காணிக்கும் அமெரிக்கா

ரஷ்யாவுக்கு கடும் சவால்
ரஷ்யாவை விட உக்ரைன் மிகச்சிறிய ராணுவத்தை கொண்டுள்ளதால் இதனை எளிதாக முடிக்கலாம் என விளாடிமிர் புதின் நினைத்தார். ஆனால் உக்ரைனை கைப்பற்றுவது என்பது ரஷ்யாவுக்கு எளிதான காரியமாக இல்லை. இதனால் தான் கடந்த 5 மாதமாக தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. உக்ரைன் படை வீரர்கள் உள்ளூர் மக்கள் மற்றும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளின் உதவிகளுடன் போர் புரிந்து வருவது ரஷ்யாவுக்கு கடும் சவாலாக உள்ளது.

வெற்றி பெறுவதில் உறுதி
இருப்பினும் உக்ரைன் மீதான போரில் வெற்றி பெற வேண்டும் என்பதில் விளாடிமிர் புதின் உறுதியாக உள்ளார். இது சாத்தியமானதால் மட்டுமே உலக அரங்கில் தன் பெயர் மற்றும் ரஷ்யாவின் பெயர் நிலைத்து இருக்கும் என்பதை புதின் புரிந்து கொண்டுள்ளார். இதனால் எக்காரணத்தை கொண்டும் போர் நடவடிக்கையில் ரஷ்யா பின்வாங்காது என உலக நாடுகள் கணித்துள்ளன.

செல்வாக்கற்ற தலைவராக புதின்
இந்நிலையில் தான் உலகின் மிகவும் செல்வாக்கற்ற தலைவராக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தேர்வாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது அமெரிக்காவின் வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் Pew Research Center சார்பில் உலகில் 18 நாடுகளில் சமீபத்தில் சர்வே மேற்கொள்ளப்பட்டது. இந்த சர்வே முடிவுகள் வெளியாகி உள்ளன.

90 சதவீதம் பேர் எதிர்ப்பு
இதில் பல நாடுகளில் உள்ள மக்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை. சராசரியாக 90 சதவீத மக்கள் விளாடிமிர் புதினுக்கு எதிரான கருத்தை கூறியுள்ளனர். அதாவது உலக நடப்புகளில் விளாடிமிர் புதின் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் என்பதில் நம்பிக்கையில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளார்.

10ல் 8 பேருக்கு நம்பிக்கையில்லை
மேலும் பத்தில் 8 பேர் அதாவது 78 சதவீதம் பேர் விளாடிமிர் புதின் மீது நம்பிக்கையில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர். 85 சதவீதம் பேர் ரஷ்யா பற்றி எதிர்மறையான கருத்துகளை கூறியுள்ளனர். கடந்த இருபது ஆண்டுகளாக விளாடிமிர் புதின் செயல்பாடு தொடர்பான மதிப்பீடுகள் பல நாடுகளில் குறைந்து வருகின்றன. ஆனால் 2022ல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் புதின் மீதான நம்பிக்கையின்மை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.