பூமியை நோக்கி.. மின்னல் வேகத்தில் வந்த ஆஸ்டிராய்டு திடீரென மாயம்! கடைசியில் செம ட்விஸ்ட்
வாஷிங்டன்: பூமியின் சுற்று வட்டப் பாதையில் வரவிருந்த ஆஸ்டிராய்டு திடீரென மாயமானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விண்வெளியில் ஆஸ்டிராய்டுகள் என்று அழைக்கப்படும் சிறுகோள்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். இப்படிச் சுற்றி வரும் ஆஸ்டிராய்டுகள் பெரும்பாலும் நமது பூமிக்கு எவ்வித ஆபத்தையும் ஏற்படுத்தாது.
இருப்பினும், சில நேரங்களில் இந்த ஆஸ்டிராய்டுகள் பூமியின் சுற்றுவட்டார பாதைக்கு அருகே வந்துவிடும். அதுபோல் நாசா கவனித்து வந்த ஆஸ்டிராய்டு குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.
அடேங்கப்பா.. எவ்வளவு பெரிசு! பூமிக்கு கிட்ட வரும் ஆஸ்டிராய்டு! மனிதர்களுக்கு ஆபத்தா? நாசா வார்னிங்

ஆஸ்டிராய்டு
கடந்த 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி அரிசோனாவின் டக்ஸனுக்கு வடக்கே அமைந்துள்ள மவுண்ட் லெமன் ஆய்வகம் விண்வெளியில் பறந்து கொண்டு இருக்கும் அடையாளம் தெரியாத ஒரு பொருளைக் கண்டறிந்தது. பூமிக்கு அப்பால் இதுபோல பொருட்களைக் கண்டறிவது அசாதாரணமானது இல்லை. ஆனால் அடுத்த வரும் நாட்களில், அது திடீரென மாயமாகவே ஆய்வாளர்களுக்குத் தலைவலியைக் கொடுத்தது.

பூமியில் மோதும் ஆபத்து
இந்த ஆஸ்டிராய்டை 2021 QM1 என்று ஆய்வாளர்கள் அழைத்தர். இதைக் கண்டுபிடித்த சில நாட்களிலேயே இது பூமியை நோக்கி வந்து கொண்டு இருப்பதையும் அவர்கள் கண்டுபிடித்தனர். சூரியனை நோக்கிய பாதையில் வந்த அஸ்டிராய்டு பூமியின் மீது மோதும் ஆபத்து இருந்தது. இது குறித்து ஆய்வாளர்கள் கூறுகையில், "ஆஸ்டிராய்டின் வரும் கால பாதையைப் பார்க்க முடிந்தது. எங்கள் கணக்கின்படி அது 2052இல் பூமி மீது மோதும் ஆபத்து இருந்தது.

ரிஸ்க்
அந்த ஆஸ்டிராய்டை நாங்கள் தொடர்ந்து கவனித்து வந்தோம். ஒவ்வொரு நாளும் அதன் ஆபத்து அதிகரித்துக் கொண்டே இருந்தது" என்றார். புதிதாகக் கண்டறியப்படும் ஆஸ்டிராய்டுகள் ரிஸ்க் பட்டியலில் வைக்கப்படும். அவை பூமியை நோக்கி வரவில்லை என்று உறுதி செய்யப்பட்ட உடன் அவை அந்த பட்டியலில் இருந்து நீக்கப்படும். இது வழக்கமான நடைமுறை தான். ஆனால் இந்த ஆஸ்டிராய்டு திடீரென மாயமானது.

சூரிய ஒளி
ஆஸ்டிராய்டு சூரியனின் பாதைக்கு அருகே வந்ததால் சூரிய ஒளி அதை மறைத்துவிட்டது. இதனால் பல வாரங்களுக்கு அந்த ஆஸ்டிராய்டு எங்கு இருக்கிறது என்பதையே ஆய்வாளர்களால் கண்டறிய முடியவில்லை. ஒரு கட்டத்தில் அது சூரியனைத் தாண்டி செல்லும் என்றாலும் கூட அப்போது அதைக் கண்டறியச் சிரமம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வரும் காலத்தில் அது எப்படிப் பயணிக்கும் என்பதைக் கணிக்க முடியாமல் போகலாம்.

பல மாத காத்திருப்பு
பல மாத காத்திருப்பிற்குப் பின்னர், சமீபத்தில் தான் ஆய்வாளர்களால் அந்த ஆஸ்டிராயிட்டின் இருப்பிடத்தைக் கண்டறிய முடிந்துள்ளது. இந்த பிரபஞ்சத்தில் கோடிக் கணக்கான ஆஸ்டிராய்டுகள் உள்ளதால், துல்லியமாக ஒன்றைக் கண்காணிப்பது மிகவும் சிரமம். இருப்பினும், நீண்ட முயற்சிக்குப் பின்னர், அதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். புதிய தகவல்களைக் கொண்டு ஆய்வு செய்கையில் அந்த ஆஸ்டிராய்டு பூமிக்கு ஆபத்தைத் தராது என்பதைக் கண்டறிந்தனர்.

ரிஸ்க் பட்டியல்
இதையடுத்து அந்த ஆஸ்டிராய்டை ஆபத்தான பட்டியலில் இருந்து நீக்கினர். விண்வெளியில் இதுவரை 10 லட்சத்திற்கும் அதிகமான ஆஸ்டிராய்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அதில் சுமார் 30 ஆயிரம் ஆஸ்டிராய்டுகள் பூமிக்கு அருவே வரும். இருப்பினும், அதில் பெரும்பாலானவை பூமிக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இன்னும் கூட சுமார் 1300 ஆஸ்டிராய்டுகளின் பாதை கணிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.