மூளையை கட்டுப்படுத்தும் சிப்.. மனதில் பட்டதை சொல்லும்.. விரைவில் மனித சோதனை!
வாஷிங்டன்: மனித மூளையை சிப் மூலம் கட்டுப்படுத்தும் மருத்துவப் பரிசோதனையை எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனம் விரைவில் தொடங்குகிறது.
அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், உலக பணக்காரர்களில் ஒருவர். இவருக்கு சொந்தமாக டெஸ்லா எனும் கார் உற்பத்தி நிறுவனமும் ஸ்பேஸ் எக்ஸ் என்ற விண்வெளி சுற்றுலா பயணத்திற்கான நிறுவனமும் இயங்கி வருகிறது.
அது போல் நியூராலிங்க் எனும் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். பல புதுமையான தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவர். மனித மூளையை இயந்திரங்களுடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை ஆராய இவர் தொடங்கியதுதான் நியூராலிங்க்.
தமிழகத்தில் எலான் மஸ்க் நிறுவனம்.. ரத்தின கம்பளம் விரிக்கும் டிஆர்பி ராஜா.. நடக்குமா?

மனித மூளை
இந்த தொழில்நுட்பம் வாயிலாக மனித மூளையில் ஒரு சிறிய சிப் பொருத்தப்படும். அந்த சிப்பின் செயல்பாடுகளை கம்ப்யூட்டர், மொபைல் போன்ற சாதனங்களுடன் இணைக்க வேண்டும். இந்த சாதனங்களை கையால் தொடாமலேயே நினைவுகள் வாயிலாக இயக்க முடியும். மனித மூளை என்ன நினைக்கிறது என்பதையும் இந்த சாதனங்களில் பதில் செய்ய முடியும்.

முக்கிய அம்சம்
இந்த சிப்பின் முக்கிய அம்சம் என்னவெனில் மனித மூளையில் ஏற்படும் முடக்குவாதம், நரம்பியல் பிரச்சினைகள், பாதிப்புகள் குறித்து சரி செய்ய முடியும். இந்த ஆய்வு குறித்து கடந்த 2016 ஆம் ஆண்டு எலான் மஸ்க் அறிவித்திருந்தார். அந்த நிறுவனம் பன்றிகள், குரங்குகளில் பரிசோதனை செய்துள்ளது. அப்போது குரங்குகளின் எண்ணவோட்டத்தை கொண்டு அவை வீடியோ கேம் விளையாட அனுமதிக்கப்பட்டது.

சிப்கள்
தற்போது மனிதர்கள் மூளையில் சிப்களை பொருத்தி ஆராய்ச்சி செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக நியூராலிங்க் நிறுவனம் மருத்துவ நிபுணர்களை பணியில் அமர்த்த உள்ளது. இதற்காக கலிபோர்னியாவில் ஃப்ரீமாண்ட்டில் உள்ள இந்த நிறுவனம் புதுவிதமான எண்ணங்களை கொண்ட மருத்துவர்களும் என்ஜினியர்களும் தேவை என விளம்பரம் கொடுத்துள்ளது.

நியூராலிங்க்
அது போல் இவ்வாறு கட்டமைக்கப்படும் குழுவானது நியூராலிங்கின் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும். எனவே மருத்துவ நிபுணர்கள் கிடைத்தவுடன் மனித மூளையில் சிப்களை பொருத்தும் சோதனை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. உணவு மற்றும் மருந்து நிறுவனத்தின் அனுமதிக்காகவும் நியூராலிங்க் காத்திருக்கிறது.

மூளையை கட்டுப்படுத்தும் சிப்
இந்த சிப் மூலம் முதுகுதண்டுவடத்தில் ஏதேனும் காயங்கள் இருந்தாலும் அதை முற்றிலும் குணப்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது முற்றிலும் பாதுகாப்பானது. இதை தேவைப்படாவிட்டால் பாதுகாப்பாக நீக்கிவிடலாம். மண்டை ஓட்டில் கொஞ்சம் சதையுடன் சேர்த்து வைக்கப்படும் இந்த சிப் வயர்லஸ் சார்ஜ் மூலம் சார்ஜ் செய்யலாம். எனவே இந்த சிப் பொருத்தப்பட்டவர் இயல்பாக உணரலாம். 2020 ஆம் ஆண்டு மனித மூளையில் சிப்பை பொருத்திவிடலாம் என எலான் மஸ்க் கருதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.