அப்போ 60 மில்லியன் கொடுக்க யோசிச்சாங்க.. ஆனா இப்போ நாங்க வேற லெவல்... ஆப்பிள் குறித்த எலான் மஸ்க்
வஷிங்டன்: இப்போது 600 மில்லியன் டாலர் மதிப்புள்ள தனது நிறுவனத்தை சில ஆண்டுகளுக்கு முன் 60 மில்லியன் டாலருக்கு வாங்க ஆப்பிள் மறுத்ததாக டெஸ்லா சிஇஓ எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இப்போது பல லட்சம் மக்களுக்குக் கதாநாயகனாக இருப்பவர் எலான் மஸ்க். மின்சாரத்தில் இயங்கும் கார்கள், இவரது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அடுத்த வெற்றி என இவர் தொடும் அனைத்திலும் வெற்றி முத்திரையைப் பதித்து வருகிறார்.

சொந்த நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டவர்
ஆனால், எலான் மஸ்க்கிற்கு எப்போதும் நிலைமை இவ்வளவு வெற்றிகரமாக இருந்ததில்லை. எலான் மஸ்க் முதலில் குளோபல் லிங்க் இன்பர்மேஷன் நெட்வொர்க் என்ற நிறுவனத்தையே தொடங்கியிருந்தார். அப்போது விடுமுறைக்குச் சென்றிருந்த எலான் மஸ்க்கை, அவரது சொந்த நிறுவனத்திலிருந்தே நீக்கி அதிர்ச்சி கொடுத்தது அந்நிறுவனத்தின் நிர்வாக குழு.

மீண்டு வந்த எலான் மஸ்க்
அதன் பின்னர் டெஸ்லா நிறுவனத்தை எலான் தொடங்கினார். பூமியிலிருந்து கிடைக்கும் கச்சா எண்ணெய் எப்போது வேண்டுமானாலும் தீரும் என்பதால் மாற்றுச் சக்தியில் இயங்கும் கார்களை நாம் கண்டுபிடிக்க வேண்டும் என்று சிந்தித்தார் எலான். அத்துடன் கரியமில வாயு காரணமாக ஏற்படும் புவி வெப்பமயமாவதும் இணைந்து கொண்டதால் உலகம் விரைவில் மின்சார வாகனத்தை நோக்கித் திரும்பும் என்பதை உணர்ந்து டெஸ்லா நிறுவனத்தைத் தொடங்கினார்.

டெஸ்லாவின் சிறப்பு
பொதுவாக மின்சாரத்தில் இயங்கும் கார்கள் சக்திவாய்ந்ததாக இருக்காது என்ற கருத்து அமெரிக்காவில் நிலவியது. அப்போது தான் மின்சாரத்தில் இயங்கும் பவர்புல்லான கார்களை தயாரிக்க முடியும் என்று உலகிற்குக் காட்டினார் எலான் மஸ்க். அமெரிக்காவில் மின்சார கார்கள் துறையில் டெஸ்லா தான் முன்னோடி. அத்துறையில் வேறெந்த நிறுவனங்களும் ஆர்வம் காட்டாததால், ஒவ்வொரு விஷயத்தை டெஸ்லா முதலிலிருந்து உருவாக்க வேண்டியிருந்தது. இதனால் செலவு அதிகரித்ததால் பல முறை டெஸ்லா திவால் ஆகும் நிலைக்குக் கூட தள்ளப்பட்டிருந்தது.

டெஸ்லா எதிர்கொண்ட சவால்
கடந்த 2017ஆம் ஆண்டு மாடல் 3 என்ற மின்சார காரை டெஸ்லா உருவாக்கிக் கொண்டிருந்தது. இதற்காக டெஸ்லா தனது நிதியை மிக அதிகமாகச் செலவழித்தது. விரைவாக நிறுவனத்தின் நிதி காலியானதால் சுமார் ஆறு மாதங்கள் வரை தொழிற்சாலையிலும் சிக்கல் நிலவியது. சிக்கலைத் தீர்க்க தொழிற்சாலையிலேயே எலான் மஸ்க் சில காலம் தங்கியிருந்தார்.

ஆப்பிளுக்கு விற்கப்பட இருந்த டெஸ்லா
இந்தச் சூழ்நிலையில்தான், டெஸ்லா நிறுவனத்தை ஆப்பிளுக்கு விற்பனை செய்வது குறித்து சிந்தித்ததாக எலான் மஸ்க் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும், "மாடல் 3 திட்டத்தின் கடினமான நாட்களில், ஆப்பிள் நிறுவனம் டெஸ்லாவை வாங்குவதற்கான சாத்தியக்கூறு குறித்து ஆலோசிக்க டிம் குக்கை அணுகினேன். ஆனால் அவர் என்னுடன் பேச மறுத்துவிட்டார்" என்று கூறியுள்ளார்.

ஆப்பிள் vs டெஸ்லா
அதே காலகட்டத்தில்தான் ஆப்பிள் நிறுவனம் டெஸ்லாவுக்கு போட்டியாகத் தானாக ஓடும் கார்களை வடிவமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தது. மேலும், ஆப்பிள் நிறுவனம் சமீபத்திய ஆண்டுகளில், பல முன்னாள் டெஸ்லா நிர்வாகிகளை தனது நிறுவனத்தில் பணியமர்த்தியுள்ளது. மேலும், டெஸ்லாவுக்கு போட்டியைத் தரும் வகையில் தானாக ஓடும் கார்களை தயாரிக்கும் சிறு நிறுவனங்கள் பலவற்றையும் ஆப்பிள் வாங்கியுள்ளது. மின்சார வாகனச் சந்தையில் விரைவில் மீண்டும் ஆப்பிள் நுழையும் என்பதையே இது காட்டுகிறது.

மாஸ் காட்டும் டெஸ்லா
ஆப்பிள் மற்றும் டெஸ்லா நிறுவனங்களின் பங்குகள் 2017ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் 1,400% அதிகரித்துள்ளது. தற்போது டெஸ்லாவின் சந்தை மதிப்பு 600 மில்லியன் டாலராக உள்ளது. ஆனால் இது ஆப்பிளின் சந்தை மதிப்பில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவாகும்.