சுவர் முழுக்க ரத்தம்.. ஜாம்பீஸ் போல இருந்த கைதிகள்! ரஷ்ய சிறையில் அமெரிக்க வீரருக்கு நேர்ந்த கொடூரம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் முன்னாள் மரைன் வீரர் ஒருவர், ரஷ்யாவில் தனக்கு நேர்ந்த கொடூரமான சிறை அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எப்போதும் மோதல் போக்கு தான் நிலவி வரும். இரு நாடுகளுக்கும் நேரடியாகச் சண்டையிடாது என்றாலும் கூட, பல விஷயங்களில் ஒன்றுக்கு முரண்பட்டே நின்று வருகிறது.
இந்தச் சூழலில் முன்னாள் அமெரிக்க மரைன் வீரர் ட்ரெவர் ரீட், ரஷ்ய சிறைகள் எப்படி இருக்கும் என்பது குறித்த தனது அனுபவத்தை ஷேர் செய்துள்ளார்.
பாய்ந்து வந்த ஏவுகணைகள்! நொடியில் தரைமட்டமான பள்ளிகள்! பிஞ்சுகளை கொல்கிறதா ரஷ்யா? பரபரப்பு புகார்!

அமெரிக்க வீரர்
அமெரிக்காவின் முக்கிய ராணுவ பிரிவுகளில் ஒன்றான மரைன் பிரிவில் இருந்த ட்ரெவர் ரீட் கடந்த 2019ஆம் ஆண்டு ரஷ்யாவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் கடந்த ஏப்ரல் 28ஆம் தேதி கைதிகள் பரிமாற்ற திட்டத்தில் விடுவிக்கப்பட்டார். அமெரிக்க ஊடகத்திற்கு இவர் அளித்த பேட்டியில், தான் ஏழு கைதிகளுடன் மனநல சிகிச்சை நிலையத்தில் ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகக் கூறி இருந்தார். வாஷிங்டனில் உள்ள ரஷ்யத் தூதரகம் இந்த கருத்துக்கள் குறித்து உடனடி பதில் எதுவும் கூறவில்லை

ஜாம்பீக்கள்
ட்ரெவர் ரீட் மேலும் கூறுகையில், "அங்கே என்னுடன் ஒரே அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான கைதிகள் கொலையாளிகள். அவர்களைப் பார்க்க உண்மையாகவே பயமாக இருக்கும். அங்கு எப்போது வேண்டுமானாலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று எனக்குத் தெரியும். அந்த அறையில் முறையான டாய்லெட் வசதி கூட இல்லை. தரையிலும் சுவர்களிலும் மனித கழிவுகள் தான் இருக்கும். அங்கிருந்தவர்கள் ஜாம்பீக்கள் போலத் தான் இருந்தார்கள்

சுவர் முழுக்க ரத்தம்
அவ்வளவு பயமாக இருந்தது. அது மிகவும் மோசமான ஒரு இடம். அங்குள்ள சுவர்கள் முழுவதும் ரத்தம் இருந்தது. அங்குள்ள பல கைதிகள் தற்கொலை செய்து கொண்டு இருக்கிறார்கள். பலர் மற்ற கைதிகளையும் கொன்றுள்ளனர். என் மீது பொய்யான குற்றச்சாட்டை அவர்கள் சுமத்தி இருந்தார்கள். அதை எதிர்த்து நான் தொடர்ந்து பேசி வந்தேன். இதனால் தான் என்னை அங்கு அடைத்தனர் என்று நினைக்கிறேன்" என்றார்.

என்ன குற்றச்சாட்டு
30 வயதான ரீட், கடந்த 2019ஆம் ஆண்டு ரஷ்யா சென்றிருந்தபோது, அங்குக் குடித்துவிட்டு இரு போலீஸ் அதிகாரிகளைக் கொலை செய்ய முயன்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்டது. இதில் அவர் கைது செய்யப்பட்டார். எந்தவொரு தவறும் செய்யவில்லை என்பதால் சிறையில் இருந்த போதும், விடுவிக்கப்படுவோம் என்ற நம்பிக்கை இருந்ததாக ரீட் தெரிவித்தார்.

அமெரிக்கா ரஷ்யா உறவு
அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான உறவு டிரம்ப் காலத்தில் மோசமடையாமல் இருந்தது. இருப்பினும், உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த பிறகு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிக மோசமானதாக மாறியது. ரஷ்யா மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதேபோல மற்றொரு முன்னாள் மரைன் பால் வீலன், ஒலிம்பிக் பதற்றம் பெற்றவரும் கூடைப்பந்து நட்சத்திரமும் ஆன பிரிட்னி கிரைனர் ஆகியோரை ரஷ்யா கைது செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.