"விரைவில் இருண்ட நாட்கள்.." மின்னல் வேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. டாப் ஆய்வாளர் வார்னிங்- என்ன காரணம்
வாஷிங்டன்: உலகெங்கும் ஓமிக்ரான் பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்காவின் டாப் ஆய்வாளர் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா பாதிப்பை இதுவரை எந்தவொரு நாட்டாலும் முழுவதுமாக ஒழிக்க முடியவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதே இதில் முக்கிய சிக்கலாகப் பார்க்கப்படுகிறது.
சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா முதல் அலையை ஏற்படுத்தியது என்றால், அடுத்து ஆல்பா, டெல்டா போன்ற உருமாறியக் கொரோனா வகைகள் அடுத்தடுத்த அலைகளை ஏற்படுத்தின.
எல்லையில் அத்துமீறி கட்டுமானம்.. சீனாவின் பதில் என்ன? பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன - பரபர தகவல்

ஓமிக்ரான்
இப்போது ஓமிக்ரான் கொரோனாவால் 3ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஓமிக்ரான், உலகின் பல்வேறு நாடுகளிலும் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. இந்தியாவில் முதலில் கடந்த டிசம்பர் மாதம் முதலில் கர்நாடகாவில் ஒமிக்ரான் கண்டறியப்பட்டது. ஆனால், அதன் பின்னர் பல்வேறு மாநிலங்களிலும் ஓமிக்ரான் வேகமாகப் பரவ தொடங்கிவிட்டன. இந்தியாவில் தற்போது கொரோனா கேஸ்கள் மின்னல் வேகத்தில் உயர்ந்து வரும் நிலையில், அதற்குக் காரணமும் கூட ஓமிக்ரான் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவிலும் இதே நிலை தான். அங்கு இத்தனை காலம் டெல்டா கொரோனாவால் அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இப்போது ஓமிக்ரான் கொரோனா ஆதிக்கம் செலுத்தும் வகையாக உருமாறியுள்ளது. அங்கு தற்போது உறுதி செய்யப்படும் கேஸ்களில் சுமார் 98% ஓமிக்ரான் கொரோனா எனத் தகவல் வெளியாகியுள்ளது. இது வெறும் 2 வாரங்களுக்கு முன்பு 71%ஆக இருந்தது. கொரோனா மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டிருப்பதையே இது காட்டுவதாக உள்ளது.

சவால்
இது தொடர்பாக நார்த் பல்கலைக்கழகத்தின் தொற்று நோய்கள் நிறுவனத்தின் பேராசிரியர் டேவிட் வோல் கூறுகையில், "வேக்சின் மற்றும் ஏற்கனவே ஏற்பட்ட கொரோனா பாதிப்பு ஆகியவற்றில் இருந்து நமது உடலில் உருவாகியுள்ள நோய் எதிர்ப்புச் சக்தி இப்போது வைரசை எதிர்கொள்ளப் பயன்படுகிறது. ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. ஆனால் கொரோனா இப்போது மின்னல் வேகத்தில் பரவுகிறது. இது நமக்கு பெரும் சவாலாகவே உள்ளது.

நடவடிக்கை தேவை
குறுகிய காலத்தில் அதிகப்படியான நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளில் அதிக பேர் அட்மிட் ஆகிறார்கள். நிலைமை இதே நிலையில் சென்று கொண்டிருந்தால், நமது சுகாதார கட்டமைப்பில் அழுத்தம் அதிகரித்து மோசமான பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலைமையைச் சமாளிக்க நாம் விரைவில் நடவடிக்கை எடுக்க வண்டும். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மாஸ்க் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும். KN95s, KN90s or KF94 மாஸ்க்குகளை நாம் இலவசமாக வழங்கலாம்.

இருண்ட நாட்கள்
நாம் இப்போது தீர்க்கமாகச் செயல்பட வேண்டிய நேரம். இப்போது நாம் செயல்படவில்லை என்றால், அடுத்த வாரம் நிலைமை மேலும் மோசமாகலாம். ஓமிக்ரான் லேசான பாதிப்பை ஏற்படுத்தினாலும் கூட வேக்சின் போடாதவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு அது பெரிய தலைவலி தான். உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நமது சுகாதார அமைப்புக்கு இருண்ட நாட்கள் வருகிறது என்பதையே காட்டுகிறது" என்று அவர் தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பு
உலகின் பல்வேறு ஆய்வாளர்களும் ஓமிக்ரான் லேசான பாதிப்பையே ஏற்படுத்துவதாகத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் சிலர் இது சாதாரண சளி போன்றது என்றும் குறிப்பிடுகின்றன. ஆனால் இதை உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஓமிக்ரான் கொரோனா சுனாமி அளவுக்கு கேஸ்களை ஏற்படுத்தி உயிரிழப்புகளையும் ஏற்படுத்துவதால் இதைச் சாதாரண சளியாகக் கருத முடியாது என அவர்கள் எச்சரித்துள்ளனர்.