அமெரிக்க கேபிடல் கலவரத்தன்று புடினுடன் டிரம்ப் பேசியிருப்பார்... அலைபேசி பதிவை பார்க்க ஆவல் -ஹிலாரி
வாஷிங்டன்: அமெரிக்காவில் நடைபெற்ற கேபிடல் கலவரத்தன்று ரஷிய அதிபர் புடினுடன் டிரம்ப் பேசியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியிருக்கிறார் ஹிலாரி கிளிண்டன்.
இவர் கடந்த 2016 அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசியுடனான உரையாடலின் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

டிரம்பின் அலைபேசி பதிவுகளை அறிந்துகொள்ள தாம் மிகுந்த ஆவலுடன் இருப்பதாகவும் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தை இழிவுப்படுத்தும் செயலை டிரம்ப் தொடர்வதாகவும் அவரை யார் இயக்குகிறார்கள் என்பது ஒரு நாள் வெளிச்சத்துக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 11-ம் தேதி நிகழ்ந்த அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல் சம்பவத்தை விசாரித்தது போல், ஜனவரி 6-ம் தேதி கேபிடல் கட்டிடம் மீது தாக்குதல் நடத்த முற்பட்டு கலவரம் செய்த விவகாரத்தையும் விசாரிக்க வேண்டும் என ஹிலாரி கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் முன் கலவரம் செய்யப்பட்டது தொடர்பாக விசாரணை கமிஷன் தேவை என ஹிலாரி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
டிரம்ப் ஆதரவாளர்கள் என்று கூறிக்கொண்டு ஜனவரி 6-ம் தேதி கலவரத்தில் ஈடுபட்டவர்கள், தங்களுக்கே தெரியாமல் புடினுடைய கைப்பாவைகளாக செயல்பட்டிருக்கிறார்கள் என ஹிலாரி சாடியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றம் கூடும் கேபிடல் கட்டிடம் முன் நடத்தப்பட்ட கலவரத்தின் பின்னணியில் ரஷிய அதிபர் புடின் இருந்திருக்கக் கூடும் என்பது ஹிலாரி கிளிண்டனின் வாதமாக உள்ளது.
இரட்டை கோபுர தக்குதல் சம்பவத்துடன் அமெரிக்க நாடாளுமன்ற முன் நிகழ்த்தப்பட்ட கலவரத்தை ஒப்பிட்டுக் கூறியுள்ள ஹிலாரி இந்த விவகாரத்தில் விசாரணை ஆணையத்தை எதிர்பார்க்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.