லாங் நைட்! 4 மாதங்களுக்கு சூரியனுக்கு குட் பை சொல்லும் அண்டார்டிகா.. ஒரு துளி வெளிச்சம் இருக்காதாம்
வாஷிங்டன்: பூமியின் தென் துருவமான அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரிய ஒளி ஒரு துளி கூட சென்றடையாது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாம் மிகவும் குறைந்த அளவு தெரிந்து வைத்துள்ள இடங்களில் ஒன்று உலகின் தென் துருவத்தில் அமைந்துள்ள அண்டார்டிகா. முற்றிலும் பனிப்பாறைகளால் மூடியுள்ள அண்டார்டிகாவில் ஆய்வுகள் தொடர்ச்சியாக நடத்தப்படு வருகிறது.
திண்டுக்கல்லில் இருதரப்பு மோதல்.. பெட்ரோல் குண்டு வீச்சு- 5 பேருக்கு வெட்டு.. படபாணியில் பயங்கரம்
அதன்படி சமீபத்தில் தான் பல மாத முன் தயாரிப்புக்குப் பிறகு, ஐரோப்பாவின் கான்கார்டியா ஆராய்ச்சி நிலையத்தில் 12 ஆய்வாளர்களை கொண்ட குழுவினர் ஆய்வுகளை மேற்கொள்ள அண்டார்டிகா பகுதிக்கு சென்றுள்ளனர்.

4 மாதங்கள்
ஆய்வாளர்கள் சரியாக இந்த காலகட்டத்தில் அண்டார்டிகா செல்ல முக்கிய காரணம் உள்ளது. ஏனென்றால், அண்டார்டிகாவில் அடுத்த 4 மாதங்களுக்கு சூரியனே இருக்காது. இதன் காரணமாக அடுத்து 160 நாட்களுக்கு மேலாக அங்கு இருண்ட நிலையே நீடிக்கும். ஆய்வாளர்கள் அனைவரும் அங்கு வரவிருக்கும் நீண்ட குளிர்கால இரவுகளுக்குத் தயாராகவே உள்ளனர். இந்தவொரு நிலைமையில் தான் ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி ஆய்வாளர்கள் அடுத்த ஆறு மாதங்களுக்கு அங்கு தனிமையில் சென்று ஆய்வு செய்ய உள்ளனர்.

லாங் நைட்
கான்கார்டியா ஆராய்ச்சி நிலையம் சமீபத்தில் இந்த நீண்ட இரவுக்கு முந்தைய கடைசி சூரிய அஸ்தமனத்தை பதிவு செய்தது. இந்த சூரிய அஸ்தமனம் நீண்ட இரவின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் உள்ளது. அடுத்த 4 மாதங்களுக்கு ஒட்டுமொத்த அண்டார்டிகாவே இருளில் மூழ்கும். சூரிய ஒளி என்பதே அங்கு இருக்காது. இதை ஆய்வாளர்கள் லாங் நைட் என்று அழைக்கிறார்கள். தங்களின் முன் தயாரிப்பு அனைத்திற்கும் நேரம் வந்துவிட்டதாகவும் அடுத்து வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முக்கியமானதாக இருக்கும் என்றும் ஐரோப்பிய ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இரண்டே காலம்
உலகில் அனைத்து நாடுகளிலும் 4 வகையான பருவ காலம் இருக்கும். ஆனால், அண்டார்டிகா அடர்ந்த பனியால் மூடப்பட்டு இருப்பதால் அங்கு கோடை மற்றும் குளிர்காலம் என இரண்டு பருவங்கள் மட்டுமே இருக்கும். இப்பகுதியில் கோடையில் பகலும், குளிர்காலத்தில் இருளும் இருக்கும். இங்கு இப்போது ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கி ஆய்வு செய்யும் இடம், கடல் மட்டத்திலிருந்து 3233 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு பல நேரங்களில் வெப்பநிலை கிட்டத்தட்ட -80 டிகிரி செல்சியஸ் வரை குறையும்.

பருவங்கள்
நமது பூமி ஒரு குறிப்பிட்ட டிகிரி கோணத்தில் சாய்ந்து இருப்பது, சூரியனை சுற்றி வரும் பாதை ஆகியவை காரணமாகவே பூமியில் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு பருவங்கள் ஏற்படுகின்றன. அண்டார்டிகா பகுதியை பொறுத்தவரை கோடையில் அது சூரியனை நோக்கி சாய்ந்த நிலையில் இருக்கும். குளிர்காலத்தில், அது சூரியனில் இருந்து விலகி இருக்கும்.

ஏன் முக்கியம்
லாங் நைட் என்று அழைக்கப்படும் இந்த காலகட்டத்தில் ஆய்வாளர்கள் மிகவும் இக்கட்டான சூழலில் இருக்க வேண்டும். இதுபோன்ற காலகட்டத்தில் மூளையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை ஏற்படுத்தும் வாய்ப்புகளும் அதிகம். இந்தச் சூழல் கிட்டதட்ட வேறு கிரகத்தில் இருக்கும் சூழலுக்கு நெருக்கமாக உள்ளதால் இந்த காலகட்டத்தில் பல்வேறு ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது மருத்துவம், தூக்கம் என பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.