"அபூர்வ நிகழ்வு!" சூரியனுக்கு மேலே ஒய்யாரமாக செல்லும் வீனஸ்! அடுத்த 100 ஆண்டுகளுக்கு இது நடக்காதாம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா நிறுவனம் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடக்கும் மிகவும் அரிதான நிகழ்வு ஒன்றின் படத்தைப் பகிர்ந்துள்ளது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வுக் கழகமான நாசா பிரபஞ்சம் குறித்தும் மற்ற கிரகங்கள் குறித்தும் தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வுப் பணிகளை நடத்தி வருகிறது.
பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய இந்த பிரபஞ்சம் குறித்த விடைகளைக் கண்டறிய நாசா உள்ளிட்ட உலகெங்கும் உள்ள இருக்கும் விண்வெளி ஆய்வு மையங்களின் பங்கு மிகவும் முக்கியமானது.

நாசா
இந்தச் சூழலில் நாசா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாட்டிலைட் படம் ஒன்றைப் பகிர்ந்து உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு விண்வெளியில் நடந்த இந்த அரிய நிகழ்வின் படத்தைத் தான் நாசா இப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளது. இந்தப் படத்தில் சூரியனுக்கு மேலே வீனஸ் கடந்து செல்வது போல உள்ளது. இது நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி (SDO) மூலம் படம் பிடிக்கப்பட்டது.

படம்
இது மிகவும் அரிதான நிகழ்வு என்றும் இந்தப் படம் மிகவும் அழகானது என்றும் நாசா தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. நாசா பகிர்ந்து உள்ள அந்தப் படத்தில் தகிக்கும் சூரியன், பின்னணியில் மிகப் பெரியதாக உள்ளது. அதற்கு முன்னால், சூரியனுக்கு சிறிய பொட்டை போல வீனஸ் இருக்கிறது. சூரியனுக்கு இடது பக்கம் மேற்புறத்தில் வீனஸ் அழகாகத் தெரிகிறது. இதை முக்கிய நிகழ்வாகவும் வானியலாளர்கள் கருதுகின்றனர்.

100 ஆண்டுகள்
டிரன்சிட் எனப்படும் இந்த நிகழ்வுகள் வளிமண்டல அமைப்பு மற்றும் கிரகங்களின் சுற்றுப்பாதையை வானியலாளர்கள் கண்டறிய உதவுகிறது. இதேபோன்ற அடுத்த டிரான்சிட் நிகழ 100 ஆண்டுகள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வீனஸ் சூரியனைக் கடக்கும் நிகழ்வு ஜோடியாகவே நிகழும். கடைசியாக இது 2004 மற்றும் 2012இல் நிகழ்ந்தது. அடுத்து இதுபோன்ற நிகழ்வு 2117 வரை நடக்காது என்று நாசா கூறி உள்ளது.

கடைசியாக எப்போது
2012இல் சூரியனுக்கு மேலா வீனஸ் சென்ற இந்த டிரான்சிட் சுமார் 7 மணிநேரம் நீடித்தது. உலகில் இருக்கும் அனைத்து நாடுகளிலும் தெரிந்தது. இந்தப் படத்தை நாசா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த உடன் அதைப் பலரும் ஷேர் செய்யத் தொடங்கினர். சூரியனின் இந்த அழகிய ஃபோட்டோவை இணையத்தில் பலரும் ரசித்து வருகின்றனர்.

டிரன்சிட் என்றால் என்ன
ஒரு கிரகத்திற்கு முன்னால் மற்றொரு கிரகம், சிறுகோள் உள்ளிட்டவை கடப்பதே டிரான்சிட் எனப்படும். இது பல்வேறு வழிகளில் நிகழலாம். பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் செல்லும் போது. சந்திரன் சூரியனை டிரான்சிட் செய்கிறது என்று அர்த்தம். இதுபோன்ற நிகழ்வுகள் மூலம் ஒரு கிரகத்தின் சுற்று வட்டப்பாதைகளை வானவியலாளர்கள் கணிக்கின்றனர்.

5 கிரகங்கள்
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு, நேற்று ஐந்து கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் அமைந்தது. புதன், வீனஸ், செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் இருந்தன. இதன் மூலம் பூமியில் இருந்து நாம் பார்க்கும் போது, வானில் ஒரே நேரத்தில் நேர் கோட்டில் ஐந்து கிரகங்கள் மற்றும் நிலாவைப் பார்க்கக் கூடிய தனித்துவமான வாய்ப்பு அமைந்தது குறிப்பிடத்தக்கது.