அமெரிக்காவில் கண்டெய்னர் லாரியில் 46 பேர் சடலமாக கண்டெடுப்பு..! மேலும் பலர் படுகாயங்கள் உடன் மீட்பு
வாஷிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மெக்சிகோ போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் அகதிகளாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்வார்கள்.
வண்டலூர் பூங்காவில் ஆண் சிங்கம் உயிரிழப்பு.. 6 மாதங்களில் 5க்கும் மேல் பலி.. என்ன காரணம்?
இதுபோல சட்ட விரோதமாக நுழைய முயல்பவர்களை பிடிப்பதற்கு என்றே இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லையில் தீவிர ரோந்து பணிகள் நடைபெற்று வரும்.

அகதிகள்
கடந்த சில ஆண்டுகளாகவே இதுபோல எல்லை நோக்கி படையெடுக்கும் அகிதகளின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்து உள்ளது. டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் இப்படி சட்ட விரோதமாக உள்ளே வருவதை தடை செய்யும் வகையில் எல்லையில் சுவர் கட்டும் பணிகள் கூட தொடங்கப்பட்டன. பைடன் அதிபரான பின்னரே இந்த சுவர் கட்டும் பணிகள் நிறுத்தப்பட்டன. அதேநேரம் எல்லையில் கண்காணிப்பு பணிகள் தீவிரமாகவே நடைபெற்று வருகிறது.

46 சடலங்கள்
இந்தச் சூழலில் அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் கண்டெய்னர் லாரி ஒன்றில் இருந்து 46 அகதிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் இந்த கண்டெய்னரை திறந்த போது, உள்ளே நான்கு சிறார்கள் உட்பட 16 பேர் உயிருக்கு போராடி வந்ததாகவும் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், மூன்று பேர் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கண்டெய்னர்
சான் ஆன்டோனியா பகுதியில் இருந்து இந்த கண்டெய்னரில் சுமார் 100 அகதிகளை ஏற்றி வந்து இருக்கலாம். போலீசார் உள்ளே சென்று சடலங்களை மீட்கும் போது, அதன் உடல்கள் மிகவும் வெப்பமாக இருந்தாக போலீசார் தெரிவித்தனர். கண்டெய்னர் உள்ளே தண்ணீரோ அல்லது வெப்பத்தை தணிக்கும் ஏசி இயந்திரமோ இல்லை என்றும் போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், விசாரணையை தொடங்கி உள்ளனர்.

எல்லை
எல்லையில் ரோந்து பணிகள் தீவிரமாக இருக்கும் என்பதால் இதுபோல கண்டெய்னர்களில் அகதிகளை ஏற்றி வருவது அவ்வப்போது நடக்கும். சட்ட விரோதமாக நாட்டில் நுழைய முயல்வதால் பல நேரங்களில் அத்தியாவசிய பொருட்கள் கூட கண்டெய்னரில் இருக்காது. அதுபோன்ற நேரங்களில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்படுகிறது. கடந்த சில காலமாகவே அமெரிக்காவில் இதுபோன்ற உயிரிழப்புகள் ஏற்பட்டு இருந்தாலும் கூட ஒரே கண்டெய்னரில் 46 பேர் சடலங்களாக கண்டெடுக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.