பதற்றம்..'பாக். பயங்கரவாதியை உடனே ரிலீஸ் பண்ணுங்க..' பயங்கர ஆயுதங்களுடன் சர்ச்சில் புகுந்த மர்ம நபர்
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள சர்ச் ஒன்றில் மர்ம நபர் பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் காரணமாக தொடர்ந்து பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. இதற்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தும் போதிலும், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காமல் இருப்பதால் சட்டம் நிறைவேறுவதில் சிக்கல் தொடர்கிறது.
இந்தச் சூழலில் டெக்சாஸ் மாகாணதில் தேவாலயத்தில் புகுந்த ஒருவர் குறைந்தபட்சம் 4 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்த பஸ் டிரைவர்.. 10 கிமீ பஸ் ஓட்டி உயிரை காத்த சிங்கப்பெண்.. செம சம்பவம்

பயங்கர ஆயுதங்கள்
அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை காலை டெக்சாஸில் உள்ள கோலிவில்லி என்ற நகரில் அமைந்துள்ள சர்ச்சில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்துள்ளார். அந்த மர்ம நபர் குறைந்தது 4 பேரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் மாலை 5.30 மணியளவில் முதலில் ஒரு பணயக்கைதி எவ்வித காயமும் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளார். அவரிடம் மர்ம நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்,

பரபரப்பு
அமெரிக்க போலீசாருக்கு பிற்பகலில் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர் தான் கோலிவில்லி நகர் சர்ச்சில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், சிலரை பணயக்கைதிகளாக பிடித்து வைத்துள்ளதாகத் தகவல் அளித்தார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சர்ச்சை சுற்றி 40 கிமீ தூரத்திற்குப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். பணயக்கைதிகளை பிடித்து வைத்துள்ள அந்த நபர் யார் என இதுவரை போலீசாரால் அடையாளம் காண முடியவில்லை. இந்தச் சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதி
தற்போது அமெரிக்கச் சிறையில் உள்ள பாகிஸ்தானின் நரம்பியல் வல்லுநரான சித்திக் என்பவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அந்த மர்ம நபர் வலியுறுத்தியுள்ளார், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்தபோது. அங்கு அவர்களைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் சித்திக் கடந்த 2010இல் கைது செய்யப்பட்டார். அவரது குற்றச்சாட்டுகள் உறுதியான நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 86 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

8 மணி நேரம்
அந்த நபர் பணயக்கைதிகளை பிடித்த வைத்த சம்பவம் சுமார் 8 மணி நேரம் வரை நீட்டித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக அமெரிக்க அதிபருக்கும் விளக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாரை தவிர எஃப்பிஐ அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இது தொடர்பாக போலீஸ் தரப்பில் இருந்தோ எஃப்.பி.ஐ தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்கப்படவில்லை.

விடுவிப்பு
இந்தச் சம்பவத்திற்கு டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், பணயக்கைதிகளை விடுவிக்க போலீசார் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.இந்தச் சூழலில் பணயக்கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக டெக்சாஸ் ஆளுநர் கிரெக் அபோட் ட்வீட் செய்துள்ளார். அவர்கள் எப்படி விடுவிக்கப்பட்டனர், அடையாளம் தெரியாத நபர் யார், அவருக்கு என்ன ஆனது என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.