உடல் முழுக்க கொப்புளங்கள்.. மீண்டும் மிரட்ட தொடங்கும் அந்த ஆபத்தான நோய்.. மிரண்டு நிற்கும் அமெரிக்கா
வாஷிங்டன்: கொரோனா பெருந்தொற்று பாதிப்பே இன்னும் முடியாத நிலையில், அரிய நோயான குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2019ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். அந்த கொரோனா வைரசில் இருந்தே உலக நாடுகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.
4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை முதலமைச்சரிடம் தாக்கல்
வேக்சின் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கொரோனா உயிரிழப்புகளை நாம் கணிசமாகக் கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டோம். இருப்பினும், அதனால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து இன்னும் நாம் தப்பவில்லை.

குரங்கு அம்மை
இந்தச் சூழலில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மங்கி பாக்ஸ் (Monekypox) எனப்படும் குரங்கு அம்மை பரவ தொடங்கி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் கனடாவில் சிலருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவிலும் ஒருவருக்கு இந்த குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் கனடா சென்று திரும்பிய நபருக்குத் தான் இந்த குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கனடா
கனடாவின் மாண்ட்ரீலில் உள்ள சுகாதார அதிகாரிகள் குரங்கு அம்மை தொடர்பாக 13 வழக்குகளை விசாரித்து வருகின்றனர். இவர்களில் எத்தனை பேருக்குக் குரங்கு அம்மை இருக்கிறது என்பது குறித்த சோதனை முடிவுகள் இன்னும் சில நாட்களில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில் தான் அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் சுகாதார அதிகாரிகள் அமெரிக்காவில் குரங்கு அம்மை நோயை உறுதி செய்துள்ளனர். அந்த நபரின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

அறிகுறிகள்
இப்போது வரை ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் இந்த குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த குரங்கு அம்மையின் முக்கிய அறிகுறிகளாகக் காய்ச்சல், தசை வலி, முகம் மற்றும் உடலில் சிக்கன் பாக்ஸ் போன்ற சொறி மற்றும் வீக்கம் ஆகியவையே இந்த நோய்க்கான முக்கிய அறிகுறியாக உள்ளது.

எப்படிப் பரவும்
குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் உடலில் இருக்கும் திரவங்கள், புண்கள் அல்லது அவர்கள் பயன்படுத்தும் ஆடை மற்றும் படுக்கை போன்ற பொருட்கள் மூலம் இந்த நோய் பரவக்கூடும். இந்த வைரசை வீட்டில் இருக்கும் கிருமிநாசினிகளே கொன்றுவிடும். எனவே, குரங்கு அம்மை நோய் சந்தேகம் ஏற்பட்டால், பயன்படுத்தும் பொருட்களைக் கிருமிநாசினிகளைக் கொண்டு சுத்தம் செய்தால் போதும்.

யாருக்கு அதிகம் ஏற்படுகிறது
இந்த வைரஸ் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம். அதேநேரம் தற்போது ஐரோப்பாவில் கண்டறியப்பட்ட கேஸ்கள் பெரும்பாலும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொண்ட ஆண்களுக்கே ஏற்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

உலக நாடுகள்
இந்த குரங்கு அம்மை நோய் ஒரு வகையான அரிய நோயாகும். இது பொதுவாக பாலியல் தொழில் செய்பவர்களுக்கு மத்தியில் தான் காணப்படும். இருப்பினும், கடந்த இரு வாரங்களாக போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மே 6ஆம் தேதி பிரிட்டன் நாட்டில் 9 பேருக்குக் குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டில் சுமார் 40 பேருக்குக் குரங்கு அம்மை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.