'மாஸ்க் போட மாட்டேன்'.. நடுவானில் அடம்பிடித்த பயணி.. புறப்பட்ட இடத்துக்கே திரும்பி சென்ற விமானம்!
வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்படுத்தி வருகிறது. அதுவும் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் வந்த பிறகு கொரோனா வைரஸ் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது.
உலகின் வல்லரசு நாடான அமெரிக்கா முழுவதுமே கொரோனாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 6,92,320 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 2,700-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். கொரோனா அலையால் மக்கள் மிகவும் சோர்வடைந்து விட்டனர் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சொல்லும் அளவுக்கு அங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.
கோவை -சேலம் -தருமபுரி.. முதல்வரின் நேரடி கண்காணிப்பில் 3 மாவட்டங்கள்! ஜெட் வேகத்தில் தேர்தல் பணிகள்!

அமெரிக்காவின் மோசமான நிலை
நிலைமை இப்படி இருக்க அமெரிக்காவில் ஒரு சில மக்கள் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற மறுத்து வருகின்றனர். குறிப்பாக விமானங்களில் பயணிக்கும் சிலர் மாஸ்க் அணிய மறுத்து வருகின்றனர். இதனால் இவர்களுக்கும், விமான பணியாளர்களுக்கும் தகராறு நடப்பது வாடிக்கையாகி விட்டது. இதன் காரணமாக அமெரிக்க உள்நாட்டு விமானங்களில் மாஸ்க் அணியவில்லை என்றால் அனுமதி மறுக்கப்படும் என்று அறிவிப்பு வந்தது.

நடுவானில் பறந்த விமானம்
இந்த நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர். அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்தார். விமான பணிப்பெண்கள் உள்ளிட்ட ஊழியர்கள் அவரை மாஸ்க் அணியும்படி கூறினார்கள்.

மாஸ்க் அணிய மறுத்த பயணி
ஆனால் அந்த நபர் மாஸ்க் அணிய தொடர்ந்து மறுத்து வந்தார். விமானம் நடுவானில் சென்று கொண்டிருந்தபோது இது தொடர்பாக ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் எடுத்துக் கூறியும் அவர் மாஸ்க் அணிய மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார். இதனால் வேறு வழியின்றி விமானம் புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வர வேண்டிய நிலை உண்டானது.

குண்டுகட்டாக தூக்கி வெளியேற்றிய போலீஸ்
அதாவது மியாமி விமான நிலையத்துக்கே விமானம் திரும்பி வந்து தரையிறங்கியது. தகவலின்பேரில் அங்கு ஏற்கனவே காத்திருந்த போலீசார், மாஸ்க் அணிய மறுத்த நபரை குண்டுகட்டாக தூக்கி விமானத்தில் இருந்து வெளியேற்றினார்கள். அந்த நபரிடம் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.