முன்னாள் ராணுவ வீரர்கள் படுகொலை.. காற்றில் பறந்த உத்தரவு.. ஆப்கனில் தொடரும் தாலிபான்கள் அடாவடி
வாஷிங்டன்: தாலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு முன் இருந்த அஸ்ரப் கானி அரசில் ஆப்கன் ராணுவத்தில் பணிபுரிந்தவர்களைத் தாலிபான்கள் குறி வைத்து நடவடிக்கை எடுப்பதாகவும் அப்படிப் பல முன்னாள் ராணுவ வீரர்கள் மாயமாகியுள்ளதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவில் நடந்த இரட்டை கோபுர தாக்குதலுக்கு, ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இந்த போர் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்தது.
இந்தச் சூழலில் தான் கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறப்பட்டன. இதற்காகவே காத்திருந்த தாலிபான்கள் மீண்டும் ஆப்கனில் ஆட்சியைப் பிடித்தனர்.
100 நாட்கள் தாலிபான் ஆட்சி.. உச்சத்தில் பஞ்சம், தலைவிரித்தாடும் உணவு பற்றாக்குறை.. ஆப்கன் நிலை என்ன

தாலிபான் ஆட்சி
சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் தன்வசப்படுத்தினர். ஆப்கன் மக்களின் மனநிலையில் அமெரிக்கப் படைகளுக்கு எதிராகவே இருந்தது. இதனால் மிக எளிதாக ஒட்டுமொத்த ஆப்கனையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது தாலிபான் படை. ஆட்சியை அமைத்த சமயத்தில் முந்தைய அஸ்ரப் கானி ஆட்சி சமயத்தில் பணிபுரிந்த பாதுகாப்புப் படையினர், போலீசார் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு அளிப்பதாகத் தாலிபான்கள் அறிவித்தனர்.

குறி வைக்கப்படும் ராணுவ வீரர்கள்
இருப்பினும், தாலிபான்கள் தாங்கள் கூறியதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு மட்டும் ஆப்கன் ராணுவம், போலீஸ், புலனாய்வு அதிகாரிகள் என மொத்தம் 47 பேர் மாயமாகியுள்ளதாக மனித உரிமை ஆணையம் ஒன்று கடந்த வாரம் அறிக்கை வெளியிட்டது. இது உலக நாடுகள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. முந்தைய ஆட்சியில் பணிபுரிந்த நபர்களைக் குறிவைத்து அவர்களுக்கு எதிராக எடுக்கும் நடவடிக்கைகளைத் தாலிபான்கள் நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

உலக நாடுகள்
இது தொடர்பாக அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஆப்கன் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்த முன்னாள் வீரர்கள் கொலை செய்யப்படுவதும் திடீரென மாயமாக்கப்படுவதும் குறித்த தகவல்கள் எங்களைக் கவலையடையச் செய்கிறது. இவை கடுமையான மனித உரிமை மீறல்கள். மேலும், இந்த நடவடிக்கைகள் தாலிபான் அறிவித்த பொது மன்னிப்புக்கு முரணானது.

நடவடிக்கை தேவை
தாலிபான்கள் ஆட்சி அமைத்த போது அறிவித்த பொது மன்னிப்பு அறிவிப்பை நாடு முழுவதும் அமல்படுத்தப்படுவதைத் தாலிபான்கள் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக வெளிப்படையான முறையில் விசாரணை நடத்தி, இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். . மேலும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளன.

அமெரிக்கா பேச்சுவார்த்தை
அதேபோல ஆட்சி அமைத்த சமயத்தில் முந்தைய ஆட்சியைப் போல இல்லாமல், இந்த முறைப் பெண்களுக்கு அனைத்து உரிமைகளும் அளிக்கப்படும் எனத் தாலிபான்கள் அறிவித்தனர். இருப்பினும், இருபாலர் படிக்கும் கல்வி முறைக்குத் தடை, ஆண் துணையின்றி வேலை செய்யத் தடை எனத் தொடர்ந்து பெண் உரிமைக்கு எதிரான கட்டுப்பாடுகளைத் தாலிபான்கள் விதித்து வந்தன. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் தாலிபான்களுடன் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தியது. அப்போது பெண் உரிமைகளை உறுதி செய்யும் நடவடிக்கைகளைத் தாலிபான்கள் எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.