வேகமெடுக்கும் மங்கி பாக்ஸ்.. வார்னிங் தரும் WHO.. முக்கிய அறிகுறிகள் என்ன? வேக்சின் போட வேண்டுமா
வாஷிங்டன்: மங்கி பாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை உலகெங்கும் வேகமெடுத்துள்ள நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தான் கடந்த இரு ஆண்டுகளுக்கும் மேலாக உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப்போட்டு விட்டது. கொரோனா உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார பாதிப்புகளில் இருந்து உலக நாடுகள் இப்போது தான் மெல்ல மீண்டு வருகிறது.
இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம்
இதனிடையே அடுத்த அதிர்ச்சியாக இப்போது மங்கி பாக்ஸ் என்ற ஒரு வகை வைரஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. கொரோனாவை போல இதுவும் வேகமாகப் பரவுமோ என்று பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.

பல நாடுகள்
பொதுவாக ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே கண்டறியப்படும் இந்த மங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது அதைத்தாண்டி பல்வேறு நாடுகளிலும் பரவி உள்ளது. வெறும் சில வார இடைவெளியில் இந்த வைரஸ் சுமார் 20 நாடுகளில் 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மங்கி பாக்ஸ் இதுவரை இல்லாத நாடுகளிலும் கூட பரவி உள்ளதே இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மங்கி பாக்ஸ்
மங்கி பாக்ஸ் என்பது பெரியம்மை போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் நோயாகும். இருப்பினும், பெரியம்மை உடன் ஒப்பிடும்போது, அது சற்று குறைவான பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இந்த வைரஸ் மேற்கு மற்றும் மத்திய ஆபிரிக்காவில் உள்ள 11 நாடுகளில் எண்டமிக் நோயாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதன்முதலில் இந்த வைரஸ் கடந்த 1958இல் ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்குகளில் கண்டுபிடிக்கப்பட்டது. 1970இல் முதன்முதலில் மனிதர்களுக்கு பரவியது உறுதி செய்யப்பட்டது.

உலக சுகாதார அமைப்பு
இது குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில், "மங்கி பாக்ஸ் பாதிப்பு இதுவரை 200க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இன்னும் அதிகப்படியான நபர்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்படும் என்று எங்களுக்குத் தெரியும். இந்த பங்கி பாக்ஸ் பாதிப்பு இப்போது அசாதாரணாக பரவி வருவது என்பதை ஒப்புக்கொள்கிறோம். தற்போது வரை கண்டறியப்பட்ட பெரும்பாலான கேஸ்கள் ஓரின சேர்க்கையாளர்களாக உள்ள ஆண்களிடமே அதிகம் கண்டறியப்பட்டுள்ளது" என்றார்.

எந்த நாடுகள்
கடந்த மே முதல் வாரத்தில் பிரிட்டன் நாட்டில் முதலில் மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர், வெறும் சில வாரங்களில் சுமார் 90 பேருக்கு அங்கு மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல ஸ்பெயினில் 98 பேருக்கும் போர்ச்சுகல் 74 பேருக்கும் மங்கி பாக்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த நோய்ப் பாதிப்பு அனைத்தும் 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் மத்தியிலேயே அதிகம் கண்டறியப்பட்டுள்ளது.

அறிகுறி சிகிச்சை
காய்ச்சல், தசைவலி, கொப்பளங்கள், சளி ஆகியவை இந்த மங்கி பாக்ஸின் பொதுவான அறிகுறிகளாகும். இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 3 முதல் 6 சதவீதம் பேர் உயிரிழக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், பெரும்பாலான மக்கள் 3 முதல் 4 வாரங்களில் குணமடைந்துவிடுவார்கள். தற்போது வரை மங்கி பாக்ஸ் பாதிப்பிற்குக் குறிப்பிட்ட சிகிச்சை முறை எதுவும் இல்லை. நோயாளிகள் தனிமைப்படுத்தும் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும்.

வேக்சின்
பெரியம்மை வேக்சின் இதற்கும் பலன் அளிக்கும். அதேநேரம் தற்போதைய சூழலில் அனைவருக்கும் வேக்சின் போடத் தேவையில்லை. பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கி தொடர்பில் இருப்பவர்களுக்கு மட்டுமே வேக்சின் செலுத்தினால் போதும் என்று உலக சுகாதார அமைப்பு சார்பில் கூறப்பட்டுள்ளது.