பெரிதாகும் ஓசோன் ஓட்டை.. அதிகரிக்கும் CO2 உமிழ்வு.. உச்சத்தில் காலநிலை மாற்றம்.. என்ன தான் நடக்கிறது
வாஷிங்டன்: உலகின் பெரும்பாலான நாடுகளில் வானிலை மாற்றங்கள் கடந்த ஆண்டும் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது.உலக நாடுகள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக உள்ளது சுற்றுச்சூழல் சீர்கேடுதான். மனிதர்கள் சுற்றுப்புறத்தை மிகவும் மோசமாக மாசடைய வைப்பதால் பருவநிலை மாற்றம் அனைத்து நாடுகளையும் வாட்டி வதைத்து வருகிறது.
புவி வெப்ப மயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும், அதைச் செயல்படுத்துவதில் உலக நாடுகள் பெரியளவில் ஆர்வம் காட்டுவதில்லை.

உலக வானிலை அமைப்பு
இந்தச் சூழலில் தற்போது உலக வானிலை அமைப்பு (WMO) 2021ஆம் ஆண்டிற்கான சர்வதேச காலநிலை அறிக்கையை வெளியிட்டது. அப்போது பேசிய ஐநா பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ், "புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே பாதுகாப்பான, நிலையான ஒன்று. மின்சார விலையைக் கட்டுக்குள் வைக்கவும் வேலை வாய்ப்புகளைக் காக்கவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மட்டுமே ஒரே பாதை. நாம் ஒன்றிணைந்து செயல்பட்டால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 21ஆம் நூற்றாண்டின் அமைதித் திட்டமாக அமையும்" என்றார்.

கிரீன்ஹவுஸ் வாயு
கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம். உயரும் கடல் மட்டம் , கடல் வெப்பம் மற்றும் கடல் அமில மயமாக்கல் ஆகியவை காலநிலை மாற்றத்திற்கான முக்கிய அறிகுறிகள். இவை அனைத்தும் 2021இல் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பொருளாதார நடவடிக்கை குறிப்பிட்ட அளவு முடங்கி இருந்த போதிலும், கிரீன்ஹவுஸ் வாயு வெளியேற்றம் உச்சம் தொட்டுள்ளது. கார்பன் டை ஆக்சைடின் (CO2) வெளியேற்றம் 413.2 பிபிஎம் ஆக உள்ளது. இது தொழில் புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடுகையில் 149 சதவீதம் அதிகம் ஆகும்.

ஓசோன் ஓட்டை
கடல் வெப்பமும் புதிய உச்சத்தை எட்டியது. கடலில் 2000 மீ ஆழம் வரை இருக்கும் நீர் 2021இல் தொடர்ந்து வெப்பமடைந்துள்ளது. இது வரும் காலத்திலும் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல ஓசோனில் உள்ள ஓட்டையும் 2021ஆம் ஆண்டில் விரிவடைந்துள்ளது. இது இப்போது அதிகபட்சமாக 24.8 மில்லியன் கிமீ பரப்பளவை எட்டியுள்ளது. 1979 ஆண்டு உடன் ஒப்பிடுகையில் இது 70 சதவீதம் பெரியதாகும்.

வெப்பம் அதிகம்
லா நினா நிகழ்வு காரணமாக 2021இல் சற்றே குளிர்ச்சியான வெப்பம் இருந்தாலும், வரலாற்றில் கடந்த 7 ஆண்டுகளில் பதிவான வெப்பம் தான் அதிகம் என்று உலக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தெற்காசியாவில் சில பகுதிகளில் 50 டிகிரி செல்சியஸ் (122 பாரன்ஹீட்)க்கும் அதிகமான வெப்பத்துடன் வெப்ப அலைகள் வீசியுள்ளது. இந்த நூற்றாண்டில் தெற்காசியாவில் அடிக்கடி ஏற்படும் வெப்ப அலைகள் குறித்தும் எச்சரித்துள்ளது

இந்தியா

பொருளாதார பிரச்சினை
பருவநிலை மாற்றம் காரணமாக உணவுப் பாதுகாப்பிலும் பிரச்சினை ஏற்படுவதாக இந்த ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. தீவிர வானிலை நிகழ்வுகள், பொருளாதார பின்னடைவுகள், கொரோனா பெருந்தொற்று காரணமாக மனிதாபிமான நெருக்கடிகளும் அதிகரித்து வருகிறது. இதனால் பல நாடுகளில் பஞ்சம் ஏற்படும் ஆபத்தும் உருவாகி உள்ளது. 2020 ஆம் ஆண்டில் ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில், பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆசியாவிலும் மூன்றில் ஒரு பகுதியினர் ஆப்பிரிக்காவிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.