அடப்பாவிகளா அங்கேயுமா?... மெடா வெர்ஸ் உலகிலும் பாலியல் பலாத்காரமா?...புகார் அளித்த பெண்ணால் பரபரப்பு
மெடாவெர்ஸ் என்கிற நவீன தொழில் நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. மெடாவர்ஸ் விர்ச்சுவல் உலகில் (மெய்நிகர் உலகம்) விர்ச்சுவல் இமேஜாக நுழைந்த பெண் ஒருவரை அங்கிருந்த விர்ச்சுவல் மர்ம நபர்கள் 3 பேர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்திடம் அப்பெண் புகார் அளித்துள்ளார். பெண் எந்த வடிவில் தனியாக வந்தாலும் பாவிப்பயல்கள் இப்படித்தான் நடப்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மெடாவெர்ஸ் அடுத்தக்கட்ட ஆச்சர்யம்
மெடாவர்ஸ் எனும் நவீனமாகிவரும் புதிய வரவின் ஒரு அம்சம் மெய் நிகர் உலகம் எனும் விர்ச்சுவல் உலகம் (இனி விர்ச்சுவல் உலகம் என்றே அழைப்போம்) இதில் வி.ஆர்/ஏஆர் தொழில் நுட்ப கருவி மூலம் நாம் நுழையலாம். வீட்டின் அறையில் இந்தக்கண்ணாடியை நாம் அணிந்து அமர்ந்து இருந்தாலும் விர்ச்சுவல் உலகில் நடமாடலாம். உண்மையான உங்கள் தோற்றத்துடன் நீங்கள் அங்கு உலாவலாம். அதேபோல் அங்கு வரும் மனிதர்களுடன் பேசலாம், பழகலாம், விளையாடலாம், விவாதிக்கலாம், கற்கலாம், கற்பிக்கலாம். உடல் ரீதியான பிசிகல் டச் (Physical touch) வைத்துக்கொள்ளலாம்.
அடுத்த தலைமுறையை ஆளப்போகும் மெடாவெர்ஸ்
இப்படி பல வகைகளிலும் மனித குலத்துக்கு பயன்படப்போகுது மெடாவெர்ஸ் தொழில்நுட்பம். இதுகுறித்து சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் உடல் இங்கே இங்கே இருக்கும். மெடாவெர்ஸ் மூலம் வேறு வேறு உலகில் நீங்கள் உலாவலாம், விருப்பமானதைச் செய்யலாம். இதில் அடுத்த முன்னேற்றமாக இறக்கும் நிலையில் உள்ள உங்கள் உறவுகளை விர்ச்சுவல் உலகில் வாழவைக்கலாம் (இதெற்கெல்லாம் தனிக்கட்டணம் செலுத்த வேண்டும்) இங்கு உயிரிழந்த அவர் விர்ச்சுவல் உலகில் உயிருடன் அவரது உருவத்தில் இருப்பார்.

இறந்தவரை வாழவைக்கலாம்...
அவருடன் நீங்கள் பேசலாம், நீங்களும் விர்ச்சுவல் உலகிற்குள் சென்று அவருடன் பழகலாம் (இதுபற்றி அப்லோட் எனும் வெப்சீரிஸ் நன்றாக சொல்கிறது-அதுபற்றி பிறகு எழுதுகிறோம்) நம் உலகிருந்து அவருடன் வீடியோ காலில் பேசலாம். மரணமில்லா வாழ்க்கை என்பது இங்கு சாத்தியமாகலாம். இது தற்போதைக்கு கற்பனையே, இப்படியெல்லாம் நடக்குமா எனக்கேட்கலாம், நடக்க அதிக வாய்ப்புள்ளது. விர்ச்சுவல் உலகில் அதிக விஷயங்களை சேர்க்கும் முயற்சிகள் தொடர்ந்து நடப்பதால் எதிர்காலத்தில் இப்படி நடப்பது சாத்தியமே.

மெடாவெர்ஸில் முதலீடு செய்யும் பெரும் நிறுவனங்கள்
இப்படிப்பட்ட விர்ச்சுவல் உலகை பெரும் நிறுவவனங்கள் உருவாக்கி தங்கள் பயனர்கள் அங்கு இடம் வாங்கி வசிக்க, அங்கு சென்று வர, அந்த உலகைக் காண வசதிகளை ஏற்படுத்தித் தருகின்றன. அதில் முக்கியமான நிறுவனம் ஃபேஸ்புக் நிறுவனமாகும் (எதிர்காலத்தில் இந்த வசதி மூலம் நீங்கள் உங்கள் முக நூல் நண்பருடன் விர்ச்சுவல் உலகில் பழக வாய்ப்பு கிடைக்கும்) அதற்காக மெடா என்று தனது பெயரை மாற்றி மார்க்கு அதிக அளவில் அதில் கவனம் செலுத்துகிறார்.

விர்ச்சுவல் உலகிலும் பாலியல் வன்கொடுமை
தற்போது விர்ச்சுவல் உலகிற்குள் விர்ச்சுவல் இமேஜாக தனது உருவத்துடன் ஜாலியாக சுற்றுலா சென்ற 43 வயது இங்கிலாந்து பெண் ஒருவர் அங்கு வந்த மூன்று ஆண்களால் (அவர்களும் விர்ச்சுவல் இமேஜ்தான்) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பிசிகல் டச் விர்ச்சுவல் உலகில் சாத்தியம் என்பதால் அப்பெண் அவர்களுடன் போராடியுள்ளார். ஆனாலும் அவர்கள் அப்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.

தப்பித்து ஓடிய பெண்
இதனால் பயந்துப்போன அவர் தனது விஆர் கருவியை எடுத்துவிட்டு விர்ச்சுவல் உலகைவிட்டு வெளியேறியுள்ளார். தங்கள் செயலை புகைப்படம் எடுத்துள்ளனர், ரெக்கார்டு செய்துள்ளனர். அதை அவருக்கே அனுப்பி, உனக்கும் இதில் விருப்பம் இருந்திருக்கும் என பதிவிட்டுள்ளனர். விர்ச்சுவல் உலகில் நடப்பது நிஜமாக நடப்பது போன்ற உணர்வை உங்களுக்குள் உருவாக்கும் என்பதாலும், விர்ச்சுவல் உலகிலும் இப்படிப்பட்ட கொடுமைகள் நடக்கிறதே என்கிற கோபத்திலும் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

விர்ச்சுவல் உலகில் தவறு அத்துமீறல் தவறில்லையா?
பாலியல் பலாத்காரம் செய்த 3 ஆண்களும் வடிவேலு பாணியில் ஏம்மா புகார் அளிப்பதற்கும் நியாயம் தர்மம் வேண்டாமா? விர்ச்சுவல் உலகில் நடப்பதை எல்லாம் புகாராக கொடுப்பாயா என கேட்டுள்ளதாக பதிவிட்டுள்ளார். பெண்கள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஆணாதிக்கம் கொண்டவர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி. தனி இடத்தில் யாரும் கவனிக்காத இடத்தில் தவறு செய்ய துணியும் நபர்களால் எப்போதும் பலகீனமானவர்களுக்கு பிரச்சினைதான்.

தவறை சரிசெய்வதாக உறுதி
பெண்ணின் புகாரை கிண்டல் செய்தும், உனக்கும் அதில் விருப்பம் இருந்தது என தங்கள் செயலை நியாயப்படுத்தியும் பதிவிட்ட 3 பேர் மீது அப்பெண் புகார் அளித்துள்ளார். விர்ச்சுவல் உலகில் நடந்தாலும் தவறு தவறு தான் நாங்கள் அதை சரி செய்யவும், மீண்டும் அவ்வாறு நிகழாமல் இருக்கவும் பாதுகாப்பாக எங்கள் தளத்தை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறோம் என மெட்டா செய்தித் தொடர்பாளர் ஜோ ஆஸ்போர்ன் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானம் வளர்ந்தாலும் மனிதன் மனிதனே
சிலர் தன்னிடம், விர்ச்சுவல் உலகில் "பெண் அவதாரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டாம், இது ஒரு எளிய தீர்வு" என்று கூறியதாக அப்பெண் தெரிவித்துள்ளார். மெடாவெர்ஸ் விர்ச்சுவல் உலகில் இதுபோன்ற அம்சங்களை தவிர்க்கும் பாதுகாப்பு முறைகளும் உள்ளது. ஆனாலும் விஞ்ஞானம் என்ன தான் வளர்ந்தாலும் தங்கள் விருப்பத்திற்கு சட்டவிரோதமாக பயன்படுத்துபவர்களும், பெண்களை போகப்பொருளாக பார்ப்பவர்களும் எப்போதும் இருப்பார்கள் என்பதற்கு இச்சம்பவம் உதாரணம்.