• search
keyboard_backspace

முடிந்து போன திருவிழா.. தேவை மாற்று அணி அல்ல, மாற்றம்…. பா.கிருஷ்ணன்

Subscribe to Oneindia Tamil

தேர்தல் வாக்குப் பதிவு என்ற திருவிழா ஒருவழியாக முடிந்துவிட்டது.

தேர்தல் பிரசாரம் நிறைவடைந்த நாளில் அனைத்து ஊடகத்திலும் "பிரசாரம் ஓய்ந்தது" என்றுதான் தலைப்புச் செய்தி வெளியானது. அது மக்களின் உள்ளத்தைப் பிரதிபலிக்கிறதா என்ற எண்ணம் தோன்றியது.

இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் தமிழகத்தை ஆண்டு வந்தது காங்கிரஸ் கட்சிதான். 1952ல் காங்கிரஸ் அரசு அமையாவிட்டால், கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணிதான் ஆட்சி நடத்தியிருக்கும். அதைத் தொடர்ந்து கேரளம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைப் போல் காங்கிரஸ் கூட்டணியோ கம்யூனிஸ்ட் கூட்டணியோதான் ஆட்சி நடத்தி வந்திருக்கும்.

Paa Krshnan article on possibility of Third Front in Tamilnadu

ஆனால், அதற்கு சாதுர்யமாக முற்றுப் புள்ளி வைத்தவர் மூதறிஞர் இராஜாஜி. அவருக்கு அந்தப் பணியைக் கொடுத்து பூர்த்தி செய்ய வைத்தவர் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு.

நாடு விடுதலை பெற்ற பின் முதல் முறையாக நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் பல மாகாணங்களில் வெற்றி பெற்றது. அப்போது தமிழகம் ஒருங்கிணைந்த சென்னை ராஜதானியாக இருந்தது.

அதில் ஆந்திரப் பிரதேசம், ஒரிசா, கேரளம் ஆகியவற்றின் சில பகுதிகள் இணைந்திருந்தன. அந்த மாகாணத்தின் சட்டப் பேரவையில் மொத்தம் 375 இடங்கள் இருந்தன. அதற்கு 1952ம் ஆண்டு நடந்த தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான ஐக்கிய முன்னணி 223 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் தோல்வி கண்டது.

அதனால், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக டி.பிரகாசம் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. நேரு அதை விரும்பவில்லை. இராஜாஜியை அனுப்பினார். ராஜதந்திரியான இராஜாஜி 60 சுயேச்சைகளையும் பா.வே. மாணிக்கநாயக்கரின் காமன் வீல் கட்சியையும் இழுத்து , காங்கிரஸ் ஆட்சியை அமைத்துவிட்டார்.

அதே காங்கிரஸின் போக்கை அவர் பின்னாளில் எதிர்த்து சுதந்திர கட்சியைத் தொடங்கியதும் காங்கிரஸை ஒழிப்பது என்று சபதம் பூண்டதும் பின்னாளைய வரலாறு.

பின்னர் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் பிரிக்கப்பட்டு, தமிழகம் தனியாக இயங்கியதைத் தொடர்ந்து காங்கிரஸே ஆட்சி பீடத்தில் இருந்தது. காங்கிரஸுக்கு மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சியே சக்தி வாய்ந்ததாக இருந்தது.

காங்கிரஸ் மீது அதிருப்தி ஏற்பட்டிருந்தால், மாற்றாக கம்யூனிஸ்ட் கட்சியே அதிகாரத்தை மீட்டிருக்கும். ஆனால், திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்த திமுக வளரத் தொடங்கியது. அப்போது அதுதான் மூன்றாவது அணி.

அதையடுத்து திமுக வளர்ச்சி பெற்றது. பொறுமையாக இருந்து, எந்த அணியிலும் இடம்பெறாமல், தனது தலைமையில் அணியை அமைப்பதில் உறுதி காத்து, அறிஞர் அண்ணா தலைமையில் 1967ல் திமுக ஆட்சி அமைத்தது. அதன் பிறகு, தமிழக அரசியல் களம் காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் என்ற நிலை மாறி, காங்கிரஸ் - கழகம் என்ற நிலை உருவானது.

இதன் மூலம் காங்கிரஸ் இல்லையென்றால், கம்யூனிஸ்ட் என்ற நிலை ஏற்பட்டது. இதையே மாற்றிச் சொல்லப் போனால், கம்யூனிஸ்ட் இல்லையென்றால், மீண்டும் காங்கிரஸ் என்ற நிலைதான் உருவானது.

இதன் காரணமாகத்தான் மூன்றாவது சக்தியாக திமுக உருவானபோது, காட்சியே மாறி காங்கிரஸ் இல்லாவிட்டால், திமுக என்றும் திமுக இல்லாவிட்டால் காங்கிரஸ் என்றும் நிலை உருவானது. இது தேர்தல் கால மாற்றமாகத்தான் அமைய இருந்தது.

ஆனால், அது அரசியல் இயக்க மாற்றமாக அமைந்தது எம்ஜிஆரால்தான். 1972ல் திமுகவிலிருந்து பிரிந்த எம்ஜிஆர் அண்ணா திமுகவை உருவாக்கிய பிறகு, திமுக அல்லது அதிமுக என்ற புதிய நிலை உருவானது. அதில் விசேஷம் என்னவென்றால், இதற்கு முந்தைய மாற்றங்களில் கொள்கை அடிப்படையில் வேறுபாடுகள் காணப்பட்டன.

காங்கிரஸ் அதற்கு மாற்றாக கம்யூனிஸ்ட் என்பது சித்தாந்த்தின் மாற்றமாகும். காங்கிரஸுக்கு மாற்றாக திமுக என்பதும் அதைப் போன்ற சித்தாந்த மாற்றமாக இருந்தது.

ஆனால், திமுகவிலிருந்து அண்ணா திமுக பிரிந்தாலும் அதுவும் திராவிட இயக்கத்தின் அடிப்படை சித்தாந்தங்களைப் பெரும்பாலும் ஏற்றதாகவே அமைந்தது. அதன் விளைவாக, திராவிட இயக்கத்தின் கோட்பாட்டுக்கே தமிழக மக்களின் ஆதரவு என்ற நிரந்தர நிலை உருவானது.

திமுக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டால், அதிமுக அரசு உருவாகும். அதிமுக அரசு மீது வெறுப்பு ஏற்பட்டால், திமுக ஆட்சி அமையும். இந்த நிலைக்கு அடித்தளம் இட்டவர் எம்.ஜி.ஆர். அதைத் தொடர்ந்தவர் ஜெயலலிதா.

இரண்டு கழகங்களையும் புறந்தள்ளி, மூன்றாவது சக்தியை உருவாக்க மக்கள் நீதி மய்யமும், நாம் தமிழர் கட்சியும் முயல்கின்றன. இரு கழகங்களுக்கும் மாற்றாக மூன்றாவது சக்தியாக உருவாக இதற்கு முன்பு பா.ம.க., பிறகு மதிமுக, அதையடுத்து தேமுதிக ஆகியவை உருவாயின.

ஆனால், அந்த முயற்சிகள் பலனில்லாமல் போயின. இப்போது மாற்றத்தை முன் வைக்கும் மக்கள் நீதி மய்யமும் நாம் தமிழர் கட்சியும் அதில் வெற்றி காணுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

ஆனால், கடந்த கால வரலாற்றின் மூலம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் இந்த இரு கட்சிகளும் இருக்கிறது.

மூன்றாவது சக்தியாக 1989ம் ஆண்டு உருவான பாமக தனித்து இயங்கியது சில காலம்தான். 1996ல் நடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை. அதையடுத்து, 1998ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அண்ணா திமுகவுடன் அணி சேர்ந்தது. பின்னர், 1999ம் ஆண்டு தேர்தலில் திமுக அணியில் இடம்பெற்றது. இதனால், இரு கழகங்களின் மாற்றுச் சக்தி என்ற தகுதியை அக்கட்சி இழந்துவிட்டது.

1993ம் ஆண்டு திமுகவை எதிர்த்துப் புறப்பட்ட மறுமலர்ச்சி திமுக 1996ம் ஆண்டு தேர்தல் தோல்விக்குப் பின் பாமகவைப் போலவே 1998ல் அண்ணா திமுகவுடனும், 1999ல் திமுகவுடனும் கைகோர்த்தது. பிறகு அதுவும் மூன்றாவது சக்தி என்ற முகத்தை இழந்தது.

2006ல் இதைப் போன்ற புதிய களம் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அமைந்தது. அது சட்டப் பேரவைத் தேர்தலில் இடங்களைப் பிடிக்க முடியாவிட்டாலும் மறைமுகத் தாக்கத்தை ஏற்படுத்தியது. அண்ணா திமுக மீண்டும் அரசு அமைக்க இயலாதபடி வாக்குகளைப் பிரித்தது. அந்தத் தேர்தலில் அக்கட்சிக்கு கிடைத்த வாக்குகள் அதிமுகவுக்கு மாற்றுச் சக்தியாக உருவாக முடியும் என்று உணர்த்தியது. ஆனால், அதை அக்கட்சி புரிந்து கொள்ளத் தவறியது. 2011ம் ஆண்டு தேர்தலில் அண்ணா திமுகவுடன் சேர்ந்து அதிக இடங்களைப் பெற்றது. செல்வாக்கு குறைந்தது.

மூன்றாவது அணியாக உருவாகும் எந்தக் கட்சியும் தனித்து இயங்க வேண்டும். அல்லது, தனது தலைமையில் இதர கட்சிகளை இழுத்துச் செல்ல வேண்டும். இதை 1967ம் ஆண்டு அண்ணா செயல்படுத்தினார். 1973 ஆண்டு முதல் எம்ஜிஆர் செயல்படுத்தினார்.

புதிதாக கட்சி தொடங்குவதை விட அதில் தொடர் நிலையைக் கடைப்பிடிப்பதுதான் முக்கியமானது. தனது இருப்பை இன்னொரு இயக்கத்தில் கரைப்பது அதன் வளர்ச்சியைத் தேய்பிறையாக்கும்.

புதிதாக மூன்றாவது சக்திகளாகத் தங்களைக் கருதிக் கொள்ளும் கட்சிகள் கடந்த கால வரலாற்றின் பாடங்களைக் கற்க வேண்டும்.

English summary
Senior Journalist Paa Krshnan views that the possibility of third force in Tamilnadu cannot be ruled out provided they maintain consistency and fight alone ever. Citing example from the past he argues that the dreams of parties like PMK, MDMK and DMDK to become third force worn out due to their alliance strategy.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In