கோவாவிற்கு சுற்றுலா போறீங்களா..? யாரும் சென்றிடாத இந்த இடங்களை ட்ரை பண்ணுங்க..!!
பல நாட்களாக நண்பர்களுடன் கோவா செல்ல வேண்டும் என்று கனவு கண்டு கொண்டிருப்பவர்களுக்காகத் தான் இந்தப் பதிவு. கோவாவில் இதுவரை காணாத சில இடங்களை பற்றி இங்கே காணலாம்.
1. பட்டர்ஃபிளை பீச்
தெற்கு கோவாவில் அமைந்துள்ள பட்டர்ஃபிளை பீச், தனிமையை அனுபவிக்க ஒரு சிறந்த இடமாகும். இந்த அழகான கடற்கரைக்கு நீங்கள் பலோலெம் அல்லது அகோண்டா பீச்சில் இருந்து படகு சவாரி மூலம் செல்லலாம். பல திருமணமான தம்பதிகள் தங்கள் துணையுடன் இங்கு அதிகம் வருவதால் இது ஹனிமூன் பீச் என்றும் பிரபலமாக அழைக்கப்படுகிறது. இங்கு சிவப்பு மீன்கள், தங்க மீன்கள் மற்றும் கடல் அர்ச்சின்களை காணலாம்.
இந்த கடற்கரையில் பறக்கும் பல்வேறு வகையான பட்டாம்பூச்சிகள் உங்களுக்கு ஒரு ரம்மியமான அனுபவத்தைத் தரும். அதேபோல, இங்கே நீங்கள் டால்பின்களையும் காணலாம்.
2. சோர்லா காட்
உங்கள் மொபைலுக்கு விடுமுறை கொடுத்து மனதை அமைதிப்படுத்த மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்திருக்கும் இந்த சோர்லா காட்டுக்கு செல்லலாம். இது கோவா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநிலங்கள் சேரும் இடத்தில் அமைந்துள்ளது.
இங்குள்ள அரிய வகை பறவைகள், பட்டாம்பூச்சிகள், அழகான தாவரங்கள் மற்றும் அதிகமான நீர்வீழ்ச்சிகளைக் காண மலையேற்றம் செய்யவேண்டி இருக்கும். அந்தவகையில், ட்ரெக்கிங் செல்ல விரும்புபவர்களுக்கு இது சூப்பர் ஸ்பாட். வித்தியாசமான அனுபவத்தைப் பெற விரும்புபவர்கள் மகாதேய் வனவிலங்கு சரணாலயத்திற்கு செல்லலாம்.
3. திவார் தீவு
மண்டோவி நதிக்கரையில் அமைந்துள்ள திவார் தீவிற்கு பழைய கோவாவிலிருந்து சிறிய படகு சவாரி மூலம் செல்லலாம். அமைதியை விரும்புபவர்களுக்கு ஏற்ற இடம் தான் இந்த திவாரி தீவு.
படகு சவாரியின்போது பனை மரங்கள் நிறைந்த சாலைகள் மற்றும் உள்ளூர்வாசிகளின் அன்பான விருந்தோம்பல் ஆகியவற்றை அனுபவிக்கலாம். போண்டேரம் திருவிழாவின் போது இங்கு வருவது கூடுதல் சிறப்பு. பசுமையான நெல் வயல்கள், அழகான நீர்நிலைகள் மற்றும் போர்த்துகீசிய வீடுகளால் சூழப்பட்ட திவார் தீவினை காண ஒரு சைக்கிள் அல்லது ஸ்கூட்டரை வாடகைக்கு எடுத்துச் செல்லலாம்.
4. கபோ டி ராமா கோட்டை
கோவாவின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய கோட்டைகளில் கபோ டி ராமா கோட்டை அகோண்டா கடற்கரைக்கு வடக்கே 16 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சுமார் 180,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த கோட்டை ஒரு மத தொடர்பைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த இடத்தின் பெயர் இந்திய புராண இதிகாசமான ராமாயணத்திலிருந்து உருவானதாக சொல்லப்படுகிறது. மத நம்பிக்கைகளின்படி, ராமர் தனது அன்பு மனைவி சீதா தேவி மற்றும் சகோதரர் லட்சுமணனுடன் பதினான்கு ஆண்டுகள் நீடித்த வனவாசத்தின் போது இங்கு வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த காலங்களில் இது பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போர்களையும் கண்டுள்ளது. 1763 ஆம் ஆண்டில் மீட்டெடுக்கப்பட்ட இந்தக் கோட்டை போர்த்துகீசியர்களால் இராணுவ நோக்கங்களுக்காக தளபதி அறை, இராணுவ முகாம்கள் மற்றும் ஒரு தேவாலயம் ஆகியவற்றுடன் பயன்படுத்தப்பட்டது. அதன்பிறகு, 1935 முதல் 1955 வரை இது சிறைச்சாலையாகப் பயன்படுத்தப்பட்டது. இந்த கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ள காபோ டி ராமா கடற்கரையையும் கண்டு அனுபவிக்கலாம்.


Click it and Unblock the Notifications