Home / Photos
Netflix-ல் சர்ச்சையை கிளப்பிய 'லேடீஸ் ஃபர்ஸ்ட்' .. உண்மையில் என்ன சொல்கிறது இந்த படம்?
By Divya Bala
நெட்பிலிக்ஸில் வெளியாகியுள்ள புதிய திரைப்படம் 'Ladies First'. பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு கற்பனை உலகத்தை நகைச்சுவை மற்றும் சாடைர் பாணியில் சித்தரிக்கும் இந்த படம், அதன் வித்தியாசமான கதைக்களத்தால் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. அதை பற்றி விரிவாக இந்த பதிவில் பார்க்கலாம்.
1/5
Photo Credit: IMDb
Share
படத்தின் தொடக்கத்தில், டேமியன் சாக்ஸ் ஒரு பெரிய விளம்பர நிறுவனத்தில் உயர்பதவியில் இருக்கும் அதிகார மனப்பான்மை கொண்ட நபராக அறிமுகமாகிறார். நிறுவனத்தின் அடுத்த CEO பதவி தனக்குத்தான் கிடைக்கும் என நம்பிக்கையுடன் இருக்கும் அவர், பெண்களை மதிக்காத அணுகுமுறையுடன் நடந்து கொள்கிறார். அதே நிறுவனத்தில் 20 ஆண்டுகளாக உழைத்து வந்தாலும், பெண் என்பதற்காக தொடர்ந்து புறக்கணிக்கப்படும் அலெக்ஸ் ஃபாக்ஸுக்கு திடீரென ஒரு பதவி உயர்வு கிடைக்கிறது. ஆனால் அது உண்மையான அங்கீகாரம் அல்ல, வெறும் கண்துடைப்புக்காக செய்யப்பட்ட முடிவு என்பதை அறிந்த அலெக்ஸ் அதிர்ச்சியடைகிறார்.
2/5
Photo Credit: IMDb
Share
ஒரு முக்கியமான கூட்டத்தில் அலெக்ஸின் கருத்துக்கள் முழுமையாக புறக்கணிக்கப்பட, டேமியன் மற்றும் அவரது ஆண் சக ஊழியர்கள் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் விளம்பர யோசனைகளை முன்வைக்கிறார்கள். கோபமடைந்த அலெக்ஸ் வேலையை விட்டு வெளியேற, அவரை தொடர்ந்து வரும் டேமியன் பெண்களை கேலி செய்து பேசிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விபத்தில் சிக்குகிறார். கண்விழித்து பார்க்கும்போது அவர் இருந்த உலகமே மாறியிருப்பதை உணர்கிறார்.
3/5
Photo Credit: IMDb
Share
இப்போது பெண்கள்தான் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்திருக்கும் உலகம். விபத்திற்கு முன்பு வரை CEO ஆக இருந்தவர் இன்று உதவியாளராக இருக்கிறார். அலுவலகத்தை சுத்தம் செய்த பெண் இன்று நிர்வாக குழுவில் இருக்கிறார். டேமியன் அமர்ந்திருந்த அறையில் அலெக்ஸ் அதிகாரத்துடன் அமர்ந்திருக்கிறார். பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில், இதுவரை பெண்கள் சந்தித்த பாகுபாடுகளை டேமியன் நேரடியாக அனுபவிக்கத் தொடங்குகிறார். நடப்பதை புரிந்துகொள்ளமுடியாமல் திணறி எடுத்து சொல்ல முயற்சிக்கிறார். தன்னை யாரும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத நிலை அவரை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
4/5
Photo Credit: IMDb
Share
தன் பழைய உலகத்துக்கு திரும்ப வேண்டுமெனில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்று ஒரு மர்ம நபர் கூறியதும், டேமியன் CEO பதவியை அடைய போராடுகிறார். ஆனால் அந்த பயணத்தில் பெண்கள் அவர்கள் அன்றாட உலகில் சந்திக்கும் விஷயங்களை ஆணாக டேமியன் சந்திக்கிறார். இது அனைத்தும் கொஞ்சம் 18ப்ளஸ் கலந்து காட்டியுள்ளார்கள். அலெக்ஸுடன் ஏற்பட்ட மோதல்கள் மெதுவாக புரிதலாக மாறுகின்றன. இருவரும் ஒருவரின் பார்வையை மற்றொருவர் புரிந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். இதன் மூலம் படம் வெறும் நகைச்சுவையை தாண்டி, வேலைத்தளங்களில் இருக்கும் பாலின பாகுபாடுகள் குறித்து பேச ஆரம்பிக்கிறது.
5/5
Photo Credit: IMDb
Share
இறுதியில் டேமியன் மீண்டும் தனது பழைய உலகத்துக்கு திரும்பினாலும், அவர் முற்றிலும் மாறிய மனிதராக இருக்கிறார். பெண்களுக்கு சம வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பதன் அவசியத்தை உணர்ந்து செயல்படுகிறார். இந்த படத்தைச் சுற்றி சர்ச்சை எழுந்ததற்கு முக்கிய காரணம், பெண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகை காட்டி ஆண்கள் அனுபவிக்கும் சிரமங்கள் மூலம் சமூகத்தில் உள்ள இரட்டை நிலைப்பாடுகளை கேள்வி எழுப்பிய விதம்தான். சிலர் இதை புத்திசாலித்தனமான சாடைர் என பாராட்டிய நிலையில், மற்றவர்கள் பாலின விவாதத்தை மிகைப்படுத்தியுள்ளதாக விமர்சித்தனர். அதுவே 'Ladies First' படத்தை இணையத்தில் அதிகம் பேசப்பட்ட படமாக மாற்றியது. தமிழ் டப்பிங் உடன் நெட்பிலிக்ஸ் தலத்தில் உள்ளது இந்த படம்.


Click it and Unblock the Notifications