For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வன்னியருக்கு 20% இடஒதுக்கீடுக்குப் பதில் உள்ஒதுக்கீடு-.நிராகரித்தால் அரசியல் முடிவு எடுப்போம்: பாமக

Google Oneindia Tamil News

சென்னை: வன்னியர்களுக்கான 20% இடஒதுக்கீடு தர வேண்டும் என்கிற நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு என வழங்க வேண்டும் என பாமக கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையையும் நிராகரித்தால் அரசியல் முடிவை எடுக்க நேரிடும் எனவும் பாமக எச்சரிக்கை விடுத்துள்ளது.,

சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று சனிக்கிழமை இணைய வழியில் நடைபெற்றது. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் ஆகியோர் இந்த கூட்டத்துக்கு முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:

தமிழ்நாடு சமூகநீதியின் பிறப்பிடம் என்று போற்றப்பட்டாலும், சமூகம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிக மிக பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு முழுமையான சமூகநீதி வழங்கப்படவில்லை. கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் சமமானவர்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகள் மட்டுமே சமூக நீதியை உறுதி செய்யும். ஆனால், தமிழ்நாட்டில் அத்தகைய நிலைமை இல்லை. சமூக நிலையில் மிகப்பெரிய இடைவெளி கொண்ட சமூகங்களுக்கு இடையில் தான் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில் சமூகநீதியை ஒருபோதும் ஏற்படுத்த முடியாது; மாறாக சமூக ஏற்றத்தாழ்வுகள் தான் அதிகரிக்கும். தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 141 சாதிகள், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் பிரிவில் 7 சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்டப் பிரிவில் 47 சாதிகள், சீர் மரபினர் பிரிவில் 68 சாதிகள் உள்ளன. மருத்துவர் அய்யா அவர்களின் தலைமையில் வன்னியர் சங்கம், 1980ஆம் ஆண்டில் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக நடத்திய போராட்டங்களின் பயனாக 1989ஆம் ஆண்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.

PMK now demands internal reservations for Vanniyars within MBC 20% Quota

அதற்கு முன் 1951 ஆம் ஆண்டிலிருந்து 39 ஆண்டுகளாக மேற்கண்ட 263 சாதிகளும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற ஒரே பிரிவில் தான் இருந்தன. 263 சாதிகளும் ஒரே சமூக, கல்வி நிலையில் தான் இருப்பார்கள் என்று நினைத்ததே சமூகநீதிக்கு செய்யப்பட்ட துரோகமாகும். 1989ஆம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 32 ஆண்டுகளாக பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 148 சாதிகள், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் 115 சாதிகள் என்ற நிலை தொடருகிறது. 1970&ஆம் ஆண்டில் சட்டநாதன் ஆணையம் அளித்த அறிக்கையில், பிற்படுத்தப்பட்ட மக்கள்தொகையில் 11.70% மட்டுமே உள்ள 9 சமுதாயங்கள் அரசிதழ் பதிவு பெற்ற பணிகளில் (Gazetted Officers)48.2 விழுக்காட்டையும், அரசிதழ் பதிவு பெறாத பணிகளில் (Non-Gazetted Officers ) 37.30 விழுக்காட்டையும் கைப்பற்றிக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சமூகத்தில் மிக, மிக பின்தங்கிய நிலையில் உள்ள சமூகங்களுக்கு கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்கவில்லை. இந்த நிலையை மாற்ற வன்னியர்கள் உள்ளிட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை தனிப்பிரிவாக பிரித்து தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்திருந்தது.

ஆனால், அந்த பரிந்துரையை அப்போதிருந்த கலைஞர் தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை. அதன்பின்னர் பத்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு 1989ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரிக்கை குறித்து அப்போதைய முதலமைச்சர் கலைஞருடன் பேச்சு நடத்திய போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாக பிரித்து, அதில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்கலாம் என்று அறிவியல்பூர்வமான தீர்வை மருத்துவர் அய்யா முன்வைத்தார். அதைக்கேட்ட கலைஞர், அந்தத் தொகுப்பில் தமிழகத்தில் வெறும் 10,000 பேர் மட்டுமே உள்ள தமது சாதியையும் சேர்த்துக்கொள்ளக்கூடாதா? என்று கேட்டார். அன்று மாலை வரை நடைபெற்ற பேச்சுக்களில் மருத்துவர் அய்யா அவர்களின் யோசனையை ஏற்றுக்கொள்வதாக கலைஞர் நாடகமாடினார். ஆனால், அடுத்த நாள் காலையில் வெளியிட்ட அரசாணையில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சாதிகள் கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற புதிய தொகுப்பை உருவாக்கி, அந்த பிரிவுக்கு 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு கேரளத்தில் சாதிவாரியாக 8 தொகுப்புகளாகவும், ஆந்திரத்தில் 6 தொகுப்புகளாகவும், கர்நாடகத்தில் 5 தொகுப்புகளாகவும் பிரித்து வழங்கப்படுகிறது. அந்த மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு, மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாமல் இரு பிரிவுகளாக மட்டும் பிரித்துக் கொடுத்து கலைஞர் அரசு ஏமாற்றியது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை அழுகிய கனியைக் கொடுப்பதற்கு சமமானது என்று மருத்துவர் அய்யா விமர்சித்தார். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டால் வன்னியர்களுக்கு எந்த அளவுக்கு பயன் கிடைக்கிறது? என்பதை தொடர்ந்து பல ஆண்டுகளாக ஆய்வு செய்து பார்த்ததில், வன்னியர்களுக்கு எந்த பயனும் கிடைக்கவில்லை என்பது தெளிவாக தெரியவந்தது. அண்மையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட முதல் தொகுதி தேர்வுகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்ட துணை ஆட்சியர்கள் 6 பேரில் ஒருவர் கூட வன்னியர் அல்ல என்பது தான் இதற்கு மறுக்க முடியாத சான்று ஆகும். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 20% இடஓதுக்கீட்டில், தமிழகத்தின் தனிப்பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு சமூகநீதி தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு தானாக கிடைத்துவிடவில்லை. மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் 10 ஆண்டுகளுக்கும் கூடுதலாக தொடர்ச்சியாக போராட்டங்களை நடத்தியது, காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கும், குண்டாந்தடி தாக்குதலுக்கும் 21 சொந்தங்களை பலி கொடுத்தது, பாளையங்கோட்டை மத்திய சிறை தவிர, தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைகளிலும் மருத்துவர் அய்யா அவர்கள் சிறை தண்டனை அனுபவித்தது, பல்லாயிரக் கணக்கான பாட்டாளி சொந்தங்களும், இளைஞர்களும் வழக்குகளை சந்தித்து, சிறைத் தண்டனை அனுபவித்தது உள்ளிட்ட தியாகங்களால் தான் 20% இட ஒதுக்கீடு சாத்தியமானது. வன்னியர்களுக்கு மட்டுமே பயன்பட வேண்டிய அந்த இட ஒதுக்கீட்டை, இப்போது 115 சாதிகள் அனுபவிக்கின்றன. ஆனால், வன்னியர்கள் தவிர, இந்த சாதிகளில் ஒன்று கூட நாம் நடத்திய இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் கலந்து கொள்ளவோ, ஆதரவளிக்கவோ இல்லை. அதே நேரத்தில் இடஒதுக்கீட்டைப் போராடிப் பெற்ற வன்னியர்களுக்கு அதில் சிறிதளவு கூட கிடைப்பதில்லை. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் உள்ள சமுதாயங்களில் வன்னியர்களுக்கும், பிற சாதிகளுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைக்கிறது என்பதை வெளியிடுவதற்குக் கூட தமிழக அரசு மறுத்து வருகிறது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திடம் தகவல் பெறும் உரிமைச் சட்டப்படி மருத்துவர் அய்யா அவர்கள் எழுப்பிய வினாக்களுக்குக் கூட இதுவரை விடை அளிக்கப்படவில்லை. அந்தத் தகவல்களை வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் வைத்தியநாதன் அவர்கள் ஆணையிட்டும் கூட அது மதிக்கப்படவில்லை. சமூகநீதியை நிலை நிறுத்தக்கூடிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் 15 உறுப்பினர்களை நியமிக்க முடியும் என்றாலும் கூட, வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. இத்தகைய சமூக அநீதிகளைப் போக்க வேண்டும்; வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீட்டை வென்றெடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான் பாட்டாளி மக்கள் கட்சி -வன்னியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுப் பொதுக்குழு கடந்த 22.11.2020 அன்று கூடி தொடர் போராட்டங்களை நடத்தத் தீர்மானித்தது. அதன்படி மொத்தம் 5 கட்ட போராட்டங்கள் 8 நாட்களுக்கு நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக அரசு பேச்சு நடத்த முன்வந்தது. கடந்த திசம்பர் 22&ஆம் தேதி மூத்த அமைச்சர்கள் இருவர் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து மருத்துவர் அய்யா அவர்களை சந்தித்து இது குறித்து பேச்சு நடத்தினார்கள்.

வன்னியருக்கு உள் ஒதுக்கீடு

அப்போது வன்னியர்கள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு அடுத்த ஒரு வாரத்திற்குள் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மருத்துவர் அய்யா அவர்களிடம் உறுதியளித்தனர். மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20% இட ஒதுக்கீடு வன்னியர் சங்கம் போராடி, பல தியாகங்களை செய்து பெற்றது என்றாலும், அந்த இட ஒதுக்கீட்டை கடந்த 32 ஆண்டுகளாக அனுபவித்து வரும் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு கொஞ்சம் கொடுக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி கருதுகிறது. அந்த நல்லெண்ணத்துடன் 20% இட ஒதுக்கீட்டில் பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கு ஒரு பகுதியையும், வன்னியர்களுக்கு பெரும்பகுதியையும் ஒதுக்கீடு செய்யும் வகையில் தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை சற்று தளர்த்திக் கொண்டு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் திட்டத்திற்கும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒப்புதல் அளித்தார்.

அதனடிப்படையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய உள் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோருடன் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் திரு.ஜி.கே.மணி அவர்கள் தலைமையில், வடக்கு மண்டல இணைப் பொதுச்செயலாளர் திரு.ஏ.கே மூர்த்தி, புதுவை மாநில அமைப்பாளர் முனைவர் கோ.தன்ராஜ் ஆகியோர் அடங்கிய குழு குழு பேச்சு நடத்தியது. அதன் தொடர்ச்சியாக மூத்த அமைச்சர்கள் குழு நாளை மறுநாள் திங்கள்கிழமை மருத்துவர் அய்யா அவர்களை தைலாபுரம் தோட்டத்தில் சந்தித்துப் பேசுவர் என்று அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்கு 1989ஆம் ஆண்டே தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும். அப்போது கலைஞர் அடுக்கடுக்காக செய்த துரோகங்களின் விளைவாக வன்னியர்களுக்கு இன்று வரை உரிய சமூகநீதி கிடைக்கவில்லை. வன்னியர்களுக்குரிய சமூகநீதியை இனியும் அரசு மறுப்பது நியாயமாக இருக்காது. மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் போராடி, எண்ணற்ற தியாகங்களைச் செய்து பெற்ற 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்.

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்த டாக்டர் ராமதாஸ், இப்போது உள் ஒதுக்கீட்டை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ள நிலையில், அதை பயன்படுத்திக் கொண்டு, வன்னியர்களின் உள் ஒதுக்கீடு கோரிக்கையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், மாண்புமிகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் நிறைவேற்ற வேண்டும். இதையே முக்கிய வேண்டுகோளாக தமிழக அரசிடம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு முன்வைக்கிறது.

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களின் சமூகநீதிக்கான, பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த நியாயமான, எளிய கோரிக்கையை பொங்கலுக்குப் பிறகு நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத் தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழு கேட்டுக் கொள்கிறது. அவ்வாறு செய்ய தாமதமானால் பாட்டாளி மக்கள் கட்சியின் செயற்குழுவை உடனடியாகக் கூட்டி, அரசியல் ரீதியிலான அடுத்தக்கட்ட முடிவை எடுப்பது என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக்குழு தீர்மானிக்கிறது.

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

English summary
The PMK on Saturday demanded that internal reservations for Vanniyars within the MBC's 20% quota.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X