• search
keyboard_backspace

நீங்கள் எந்தப் பக்கம்? பகுதி- 1 - பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

அண்மையில் மறைந்த எழுத்தாளர், தோழர் இளவேனில் மூலமே முதன்முதலில் இந்தத் தொடரை நான் அறிந்தேன். "நீங்கள் எந்தப் பக்கம்?" என்று மாக்சிம் கார்க்கி மக்களை பார்த்துக் கேட்டதாய் அவர் கூறுவார். அவருடைய எழுத்துகளிலேயே அதனை ஒருமுறை பார்த்து விடலாம்.

"மாக்சிம் கார்க்கியின் குரல் என் மனசாட்சியை உலுக்குகிறது -

இருவேறு உலகங்கள்

இருவேறு நீதிகள்

வாழ்வின் மதுரங்கள் அனைத்தும் ஒருபுறம்

கசப்பும் கண்ணீரும் கலந்தொழுகும்

இன்னொருபுறம்

வர்க்கப் பகைமையின் ரத்தக் கறைகளால் பூமியின் முகமே விகாரமாகிப் போனது

அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டும் என்பதற்காகச் சொல்லுங்கள் -

நீங்கள் எந்தப் பக்கம்?"

இதே தொடரை, இதே வினாவைப் பிறிதொரு காலத்தில், சிலி நாட்டின் அதிபராக இருந்த அலெண்டேயும் முன்வைத்ததாகப் படித்திருக்கிறேன்.

Prof. Suba.Vees Artilce Neengal Entha Pakkam Part-1

இன்று கார்க்கியும், அலெண்டேயும் இல்லை. ஆனால் அந்தக் கேள்வி இருக்கிறது. உலகப்போர் தொடங்கி, உள்ளூர் மோதல் வரையில், ஒவ்வொரு முறையும் அந்தக் கேள்வி கேட்கப்படுகிறது - நீங்கள் யார் பக்கம்?

இதோ இது தமிழ்நாட்டில் தேர்தல் நேரம். நாம் ஒவ்வொருவருவரும் இந்த வினாவிற்கு விடை சொல்ல வேண்டிய நேரம். வாய் வார்த்தைகளில் சொல்லவில்லையென்றாலும், வாக்குச் சாவடிக்குள் நுழைந்த பிறகாவது இந்த வினாவிற்கு விடை சொல்லத்தான் வேண்டும்.

நாங்கள் எந்தப் பக்கமும் இல்லை. நடுநிலையாக, மையத்தில் இருக்கிறோம் என்று சொல்கிறவர்கள் உண்டு. அது உண்மையில்லை. நடைமுறையில் சாத்தியமும் இல்லை. எண்ணிப் பாருங்கள், உங்களிடம் கொடுக்கப்படும் வாக்குச் சீட்டில் நடுநிலையாக வாக்களிப்பதற்கு வாய்ப்பு ஏதும் உங்களுக்கு இருக்கிறதா? வேண்டுமானால் யாருக்கும் வாக்களிக்க மாட்டேன் என்று கூறலாம். அதுவும் நடுநிலையன்று, எதிர்நிலை! எல்லோருக்கும் எதிர்நிலை. ஆகமொத்தம், ஒரு நிலையை நாம் எடுத்தே ஆகவேண்டியுள்ளது.

எனினும் நடுநிலை என்று சொல்லி ஒதுங்கிக்கொள்ளும் மனிதர்கள் மட்டுமில்லை, கட்சிகளும் பல நாடுகளில் உள்ளன. இரண்டாவது உலகப்போர் முடிந்த தருணத்தில் அப்படி ஒரு போக்கு உலகில் எழுந்தது. ஐரோப்பாவில், குறிப்பாக பிரான்சிலும், ஜெர்மனியிலும் அப்படி மையவாதக் கட்சிகள் (Centrist Parties) உருவாயின.

அமெரிக்க அதிபர்கள் சிலரே, தங்களின் கட்சி அடையாளத்தைத் தாண்டித் தாங்கள் ஒரு மையவாத அரசியலர் என்று அறிவித்துக் கொண்டனர். அவர்களுள் முதலில் இடம் பெறுபவர் ஹாரி ட்ரூமன் (Harry Truman ). இரண்டாம் உலகப்போர் முடிந்தவுடன் அதிபரான இவர், 1945 முதல் 1953 வரையில் அமெரிக்காவின் அதிபராக இருந்தார். ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இவர், தன்னை ஒரு இடதுசாய்வு கொண்ட மையவாதி என்று கூறிக்கொண்டார். அவருக்கு அடுத்து அப்பொறுப்பிற்கு வந்த, குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அதிபர் ஐசனோவரோ, தான் வலது சாய்வு கொண்ட மையவாதி என்றார்.

கீழை நாடுகளான ஜப்பான், கொரியா, பாகிஸ்தான், கிழக்கு வங்கம் ஆகிய நாடுகளிலும் இத்தகைய கட்சிகள் தோன்றின. வங்கதேசத்தின் அவாமி லீக் தன்னை ஒரு மையவாதக் கட்சி என்றே அறிவித்துக் கொண்டது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய பி.ஏ. சங்மாதான், காங்கிரசை விட்டு விலகிய பின், முன்முதலில் அப்படி ஒரு கட்சி தொடங்குவதாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். 2013 ஜனவரியில் அவர் தொடங்கிய அந்த மையவாதக் கட்சியின் பெயர், 'தேசிய மக்கள் கட்சி' (National Peoples' Party). இந்திய அளவிலான கட்சி என்று அவர் அறிவித்தாலும், அதன் எல்லை மேகாலயாவுடன் சுருங்கி விட்டது. மேகாலாயாவின் முதமைச்சராகவும், நாடாளுமன்ற அவைத்தலைவராகவும் இருந்தவர் சங்மா. எனினும் அவரால் அடுத்துவந்த மேகாலயா சட்டமன்றத் தேர்தலில் இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், 2018 பிப்ரவரியில், கமல்ஹாசன் தொடங்கியுள்ள 'மக்கள் நீதி மையம்'தான் முதலில் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டு தொடங்கியுள்ள மையவாதக் கட்சி என்று கூறலாம்.

ஏன் மையத்தில் நிற்க வேண்டும்? அப்படி நிற்பவர்களை மக்கள், குறிப்பாகத் தமிழக மக்கள் ஏன் ஆதரிப்பதில்லை? - இந்த இரண்டு வினாக்களுக்கும் விடை தேடினால், நீங்கள் இந்தப் பக்கம் என்னும் கேள்வியில் இருக்கும் நியாயம் நமக்கு எளிதில் புரியும்.

தத்துவ அடிப்படையில், எந்த துருவத்திற்கும் செல்லாமல், 'நடுப்பாதையில் நட' என்று சொன்ன புத்தனின் மொழி, அரசியலுக்கானதன்று. மிகக் கடுமையாகத் தன்னை வருத்திக் கொண்ட, இன்பங்களையே நாடக்கூடாது என்று வலியுறுத்திய, உலகியல் போக்கிலிருந்தும், மானுட இயற்கைத் தன்மையிலிருந்தும் முற்றிலும் விலகி நின்ற சமண சமயத்திற்கும், எப்போதும் களியாட்டங்களிலேயே மூழ்கிக் கிடந்த, சோமபானம்,சுராபானம் அருந்தி மயங்கிக் கிடந்த, உலக சுகங்கள் அனைத்தையும் துய்த்துவிடத் துடித்த வைதீக மதத்திற்கும் இடையில் 'நடுப்பாதையில் நட ' என்று சொன்னவர் புத்தர்.

உயிர்க்கொலை கூடாது என்றார் புத்தர். எனினும், "பிச்சைக்குச் செல்லும்போது, மீன் துண்டுகள் கலந்த உணவை மக்கள் கொடுக்கின்றனர், என்ன செய்வது?" என்று புத்த பிக்குகள் கேட்டபோது, மக்கள் கொடுக்கும் உணவை உண்டு பழகுங்கள் என்று சொன்னவர் புத்தர். அதற்காக, பார்ப்பனர்களைப் போல யாகங்கள் நடத்தி, அதில் விலங்குகளை வெட்டிப்போட்டு, அவற்றின் இறைச்சியைச் சுவைத்துச் சுவைத்து உண்ணுங்கள் என்று அவர் அறிவுறுத்தவில்லை. இரு துருவங்களும் வேண்டாம், நடுப்பாதையில் நட என்றார்.

அது வேறு, நடைமுறை அரசியல் வேறு. அரசியலில், எந்தப் பக்கமும் சாராமல் நடுவில் இருப்பதாகச் சொல்வதற்கு இரண்டு காரணங்கள்தாம் இருக்க முடியும். ஒன்று, இப்போது இருக்கும் யார் மீதும் அல்லது எந்தக் கட்சியின் மீதும் நம்பிக்கையில்லை என்பதை வெளிப்படுத்துவது. இரண்டு, தான் அல்லது தங்கள் கட்சி எல்லோருக்கும் பொதுவானது என்பதாகக் காட்டிக் கொள்வது!

மையம் என்பது எந்தத் தீர்வை நோக்கியும் இழுத்துச் செல்லாது. ஒருவன் அடிக்கிறான், இன்னொருவன் அடிபடுகிறான் என்றால், நாம் அடிப்பவன் பக்கமா, அடிபடுகிறவன் பக்கமா என்பதைச் சொல்வதுதான் நேர்மை. நான் மையமாக இருக்கிறேன் என்றால், மறைமுகமாக அடிக்கிறவனை ஆதரிக்கிறேன் என்றுதான் பொருள்!

தமிழ்நாட்டில் மக்கள் ஏன் மையமாக இருப்பவர்களை - ஏன் - முன்றாவது அணியைக் கூட ஆதரிப்பதில்லை? ஒரே காரணம்தான்! இங்கே நடப்பது, இரண்டு நேர் எதிர் சித்தாந்தங்களுக்கு இடையிலான போராட்டம். எனவே இங்கு நடு இடம் என்றோ, மூன்றாவது இடம் என்றோ ஒன்று கிடையாது. ஒன்று மனு நீதியை ஆதரிக்க வேண்டும் அல்லது சமூக நீதியை ஆதரிக்க வேண்டும். நாம் எந்தப் பக்கம் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்!

மையமாக இருக்கிறோம் என்று சொல்வது, மனு நீதியை ஆதரிப்பதாகவே சென்று முடியும்!

ஆண்டான்-அடிமை, உயர்சாதி-கீழ்ச்சாதி என்று கட்டமைக்கப்பட்டிருக்கும் இச்சமூகத்தை மாற்ற விரும்புகிறோமா, இல்லையா என்பதுதான் நம்முன் உள்ள ஒரே கேள்வி. இதில் நடு இடமும், மையமும் எங்கே இருக்கின்றன?

20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே தமிழக அரசியல் என்பது, தமிழ்ச் சமூகம் சார்ந்ததாக ஆகிவிட்டது. சாதியற்ற, பாலின, மொழி சமத்துவம் கொண்ட ஒரு சமூக உருவாக்கம்தான், இடதுசாரித் தமிழ்த் தேசியமான திராவிட அரசியலின் அடித்தளம். பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற, பாலின, மொழி சமத்துவமற்ற ஒரு சமூகத்தை என்றென்றும் பேணிக் காப்பதே, வலதுசாரி இந்துத்வ அரசியலின் அடித்தளம்.

இவை இரண்டையும் விட்டுவிட்டு, ஊழலை ஒழிக்க வருகின்றோம் என்பதெல்லாம் உப்புப் பெறாத பேச்சு. ஊழல் என்பது நிர்வாக நடைமுறை பற்றியது. சித்தாந்தத் தொடர்புடையதன்று. யார் ஆட்சிக்கு வந்தாலும் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதே சரி. ஊழலை ஒழிப்பதற்காக ஆட்சிக்கு வருகிறோம் என்பது சரியில்லை. இடஒதுக்கீடு, நீட் தேர்வு, விவசாயிகள் போராட்டம், சுற்றுச் சூழல் பாதுகாப்பு,

மனித உரிமை, ஜனநாயக உரிமை, அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை என இவை போன்றவைகளில் தங்கள் நிலைப்பாடு என்ன என்று கூறாமல், நடுநிலை என்பதும் மையம் என்பதும், ஊழல் ஒழிப்பு என்பதும் இங்கு எடுபடாது!

ஆண்டாண்டு காலமாக நடக்கும் போர் மட்டுமில்லை, அடுத்து வரப்போகும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலும் இதற்கான தீர்வையே எதிர்நோக்கி உள்ளது. மனு நீதியா, சமூக நீதியா எது வேண்டும் என்பதே நம் முன் உள்ள கேள்வி. இந்தக் கட்டத்தில் நாம் நாம்மை, நம் நாட்டின் எதிர்காலத்தைச் சரியான பாதையில் கொண்டுசெல்ல வேண்டுமென்றால், நாம் எந்தப் பக்கம் என்பதைச் சொல்லியே ஆகவேண்டும்.

நான் திராவிடத்தின் பக்கம்!

நீங்கள்.....?

(கேள்வி தொடரும்)

English summary
Prof. Suba.Vee's Artilce "Neengal Entha Pakkam" Part-1
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In