• search
keyboard_backspace

நீங்கள் எந்தப் பக்கம்? - 6 மதவெறி அரசியலா, மதச்சார்பின்மையா? -சுப. வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம், பாஜக ஆளுகின்ற கர்நாடக மாநிலத்தில், அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்காக, வீடு வீடாகச் சென்று ஆளும்கட்சியினர் நிதி திரட்டியுள்ளனர். ஆளும்கட்சி என்பதால் அஞ்சி நிதி வழங்கியவர்களே மிகுதி. ஆனாலும் ஒரு சிலர், எங்கோ கட்டப்படும் கோயிலுக்கு இங்குள்ள நாங்கள் ஏன் நிதி தரவேண்டும் என்று கேட்டு, பணம் கொடுக்க மறுத்துள்ளனர். உடனே அந்த வீடுகளில் அடையாள ஒட்டிகள் (ஸ்டிக்கர்) ஒட்டப்பட்டுள்ளன.

எப்படி ஓர் அச்சுறுத்தல்! ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சிக்கு வந்தவுடன், யூதர்கள் வீடுகளில் ஒரு விதமான அடையாளங்களும், யூதர் அல்லாதவர்கள் வீடுகளில் வேறு விதமான அடையாளங்களும் இடப்பட்டன. பிறகு அந்த அடையாளங்களைக் கொண்டே அந்த வீடுகள் தாக்கப்பட்டுள்ளன. அந்த யூதர்கள் கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இப்போது கர்நாடகம், ஹிட்லர் காலத்து ஜெர்மனி ஆகிக் கொண்டிருக்கிறது.

Prof. Suba.Vees Artilce Neengal Entha Pakkam Part-6

கர்நாடகத்தின் முன்னாள் முதல்வர் குமாரசாமி இதனைக் கண்டித்துள்ளார். உடனே அவருக்கு இந்து விரோதி என்ற பட்டத்தை இலவசமாக வழங்கிவிட்டனர். யார் இந்து, யார் இந்து விரோதி, யார் இந்தியன், யார் இந்திய விரோதி என்பனவெல்லாம், பாஜக அலுவலகத்தில் முடிவு செய்யப்படும் நிலைதான் நாட்டில் உள்ளது.

இந்நிலை இந்தியாவில் இன்று நேற்று ஏற்பட்டதில்லை. புத்தர் காலத்திற்கு முன்பிருந்தே இருக்கிறது. புத்தர்தான் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்து, அவர்களின் ஆதிக்கத்தை ஒடுக்கினார். அனால் பிற்காலத்தில் மீண்டும் பார்ப்பனியம் தலைதூக்கி விட்டது. இடையில் மொகலாய சாம்ராஜ்யம் ஏற்பட்டபோது, இன்னொருவிதமான மதப்பண்பாடு வந்தது. ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்தில், இந்துத்துவ பார்ப்பனிய வழிமுறைகள் சில செல்வாக்கிழந்தன. இதனை, சுவாமி சிவானந்த சரசுவதி போன்றவர்களே எழுதியுள்ளனர். தன்னுடைய "மத விசாரணை" என்னும் நூலில் அவர்,

"19ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் வரையில், நமது நாட்டில் பல அட்டூழியங்கள் மதத்தின் பெயரால் நடத்தப்பட்டு மக்கள் துன்பத்தை அனுபவித்து வந்தனர். அவற்றை ஆங்கில அரசாங்கம், கருணையோடு சட்டங்களை பாஸ் பண்ணி, மிக மிகக் கஷ்டத்துடன் நிறுத்தியது. அவ்வாறு ஒழிக்கப்படாவிட்டால், நாம் இப்போது எதை விரும்புகிறோமோ, எதனால் நாம் இவ்வாறு பெருமை பேசிக் கொள்கிறோமோ, அத்தகைய இந்நிலைமையைப் பாராதவாசிகள் அடைந்திருப்பார்களா? இல்லை, இல்லை!" (பக்கம் 179)

என்று எழுதுகிறார்.

20 ஆம் நூற்றாண்டில் உருவான இந்து மகா சபா, ஆர்.எஸ்.எஸ்.போன்ற இயக்கங்கள், ஆங்கிலேய அரசுடன் இரண்டு விதமான போக்குகளை மேற்கொண்டனர். ஆங்கிலேயர்கள் மிலேச்சர்கள், அந்நியர்கள், கிறித்துவ மதத்தினர் என்று கூறி, வெகு மக்களை அவர்களுக்கு எதிராக நிறுத்த ஒருபக்கம் முயற்சி செய்தனர். ஆனால் அதற்காக, காங்கிரஸ் கட்சியுடன் கைகோத்துக் கொள்ளவில்லை. அதே நேரம், ஆங்கிலேய அரசில், முதன்மையான எல்லாத் துறைகளிலும், முதன்மையான எல்லாப் பொறுப்புகளிலும் பதவி வகிக்கவும் முற்பட்டனர்.

குறிப்பாக, நிதி, நீதி, நிர்வாகம், பத்திரிக்கை ஆகிய நான்கு துறைகளில், ஆங்கிலேயர் காலம் தொட்டே, பெரிய பதவிகளில் இருந்தவர்கள் பார்ப்பனர்கள்தாம்! அந்த நிலையில் இன்று சிறு மாற்றம் ஏற்பட்டுள்ளதே அல்லாமல், இன்றும் முற்றிலுமாக மாறிவிட்டது என்று கூற முடியாது.

இன்றும் ஒவ்வொரு அரசு அலுவலகம், கல்வி நிறுவனம், நீதிமன்றங்கள் என எவற்றை எடுத்துக் கொண்டாலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரையில் ஆங்கிலேயர்கள் உயர் பதவிகளில் இருந்திருப்பார்கள். பிறகு பார்ப்பனர்கள் அந்த இடத்திற்கு வந்திருப்பார்கள். அதன்பிறகு, பார்ப்பனரல்லாதாரில் மேல் சாதியினர் என்று கருதப்படுவோர் இடம் பெற்றிருப்பார்கள்.

Prof. Suba.Vees Artilce Neengal Entha Pakkam Part-6

எடுத்துக்காட்டிற்கு ஒன்றைப் பார்க்கலாம். சென்னை, சேத்துப்பட்டில், என்.வி.என் மாளிகையில் உள்ள, தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத் தலைவர்களின் பெயர்ப்பலகை அங்கு உள்ளது. அந்தப் பெயர்ப்பலகையில், 1914 தொடங்கி 1924 வரையில், ஆதி நாராயண அய்யர், ராமநாத அய்யர், வெங்கடராம சாஸ்திரி, வேதாசல அய்யர் என்று அவா்கள்தான் இருந்திருக்கின்றனர். 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி வந்தபிறகு சர் கே.வி.ரெட்டி தலைவராக வந்துள்ளார்.அவரைத் தொடர்ந்து வந்தவர்களும் செட்டியார், முதலியார் என்று சாதிப் பெயர்களுடன் உள்ளனர். 1959 இல் முதன்முறையாக, கனகசபை என்று ஒருவரின் பெயர் சாதியில்லாமல் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு ஒரு குறிப்பிட்ட சாதியினரின் ஆதிக்கமே நிலவி வந்த சூழலில், திராவிட இயக்கத்தின் எழுச்சி தமிழ்நாட்டில் ஒரு பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தது. எனினும், இந்திய அளவில் பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான் விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்தது. அதே நேரம், விடுதலைக்குப் போராடிய கட்சி என்ற நம்பிக்கையில், நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சிக்கு அரசியல் தளத்தில் செல்வாக்கு இருந்தது.

காங்கிரசின் வளர்ச்சியும், காந்தியாரின் மத நல்லிணக்கப் போக்கும், ஆர்.எஸ்.எஸ், இந்து மகா சபா போன்ற அமைப்புகளை எரிச்சல் கொள்ள வைத்தன. காந்தியாரை அரசியல் தளத்திலிருந்து மட்டுமின்றி, உலகிலிருந்தே அகற்றிவிட வேண்டும் என்ற எண்ணம் வலதுசாரிகளுக்கு எழுந்தது. அதன் விளைவாக, 1948 ஜனவரி 30 அன்று, கோட்ஸே என்னும் மதவெறியன் ஒருவனால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஒரு விதத்தில் மதவெறி கொண்ட அவர்கள் தங்கள் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டனர் என்றாலும், இந்தியா முழுவதும் அவர்களின் செல்வாக்கு சரிந்து போயிற்று. அடுத்த பத்து ஆண்டுகள், அவரகளால் தலைதூக்க முடியவில்லை.

அதிலிருந்து மீள்வதற்காகவே, அவர்கள் இராமரைத் தங்களின் புதிய ஆயுதமாகக் கையிலெடுத்தனர். இந்து மதமே இந்தியாவின் மதம், ஹிந்து ராஷ்டிரம்தான் இலக்கு என்று முடிவெடுத்தனர். 1940 இல், ,ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் இரண்டாவது தலைவராகப் பொறுப்பேற்ற கோல்வாக்கரின் உரைகளும், எழுத்துகளும், அவர் பதவிக்கு வந்து 25 ஆண்டுகளுக்குப் பின் (Bunch of Thoughts) என்னும் பெயரில் (தமிழில் - ஞான கங்கை) வெளியிடப்பட்டன. இன்றும் அதுவே அவர்களின் சித்தாந்த வழிகாட்டியாக உள்ளது. அதில் உள்ள சில கருத்துகளை நாம் உள்வாங்கிக் கொண்டால்தான், அவர்களின் மதம் சார்ந்த அரசியலைப் புரிந்து கொள்ள முடியும்.

"மேற்கத்திய நாடுகளில் உருவாகிய இந்த மதச்ச்சார்பின்மை என்ற கருத்து நமது நாட்டுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானதே அல்ல" என்கிறார் கோல்வாக்கர் (ஞான கங்கை - தொகுதி 2). இவ்வளவுக்கும், மதச்ச்சார்பின்மை எனும் சொல் அப்போது இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறவே இல்லை. 1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 42ஆவது சட்டத் திருத்தம்தான் அந்தச் சொல்லை முதன்முதலாக அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறச் செய்தது. (The 42nd Amendment changed the description of India from a "sovereign democratic republic" to a "sovereign, socialist secular democratic republic")

1975-76 இந்தியாவின் நெருக்கடி நிலைக் காலத்தில் நடந்த ஒரு அல்லது ஒரே ஒரு நல்ல செயல் என்று அதனைக் கூறலாம். அதனையும் இப்போது நீக்கிவிட ஆளும் அரசு துடிக்கிறது. குருநாதர் கோல்வாக்கரின் சொல்லை மந்திரமாக ஏற்றுக் கொண்டுள்ள அவர்கள், மதச் சார்பின்மையை அகற்றி, ஹிந்து ராஷ்டிரத்தை நிறுவிடத் துடிக்கின்றனர்.

மதச்சார்பின்மை என்ற சொல் சட்டத்தில் எங்கும் இல்லை (அப்போது) என்பதையும் கோல்வாக்கர் குறிப்பிடுகின்றார், "நமது நாட்டு உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி சுப்பாராவ் அவர்கள் சுட்டிக்காட்டியபடி, நமது நாட்டின் அரசியல் சாசனத்தில் மதச்சார்பின்மை என்ற சொல்லை எங்குமே காணமுடியாது" என்று கூறும் அவர் அப்படி ஓர் இடைச் செருகல் வருமெனில் அதனை ஏறுக்கொள்ளக்கூடாது என்பதையும் அப்போதே சொல்லிச் சென்றுள்ளார். அது இந்துமத எதிர்ப்பாகவே இருக்கும் என்றும் எச்சரிக்கிறார்.

ஆனால் அவர்ளையும் மீறி, அந்தச் சொல் அரசியல் சட்ட அமைப்பிற்குள் வந்த பிறகு, இராமர்தான் இனிமேல் தங்களுக்குத் துணையிருப்பார் என்ற முடிவுக்கு வருகின்றனர். 1984 மார்ச் 31 அன்று அசோக் சிங்கால் தலைமையில் நடைபெற்ற விஸ்வ இந்து பரிஷத் கூட்டத்தில், அயோத்தியில் இருக்கும் பாபர் மசூதிக்கு விடை கொடுக்க வேண்டும் ('liberate the mosque ') என்று தீர்மானம் ஆகின்றது.

அசோக் சிங்காலின் முன்முயற்சியில்தான், வினய் கட்டியார் தலைமையில் பஜ்ரங் தள் என்ற ஓர் அமைப்பு 1989 இல் உருவாக்கப்படுகிறது. அதன் முழுமுதல் நோக்கமே, பாபர் மசூதியை இடிப்பதுதான். அப்படிச் செய்தால் வழக்கு, நீதிமன்றம் என்று வருமே, என்ன செய்வது என்ற வினாவிற்கு அங்கேயே விடை சொல்லப்படுகிறது.

"இந்த நாட்டில் மிகப் பெரும்பான்மையினர் இந்துக்கள்தான். அவர்களின் எண்ணங்கள் மதிக்கப்பட வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி நீதிமன்றங்கள் எல்லாம் இதுபற்றித் தீர்மானிக்க முடியாது" (The Hindu sentiments must be enforced. The courts cannot decide). என்பதே அன்றைய அவர்களின் முடிவாக இருந்தது.

ஆனால் இன்று நீதிமன்றங்கள் சொல்வதை நாம் ஏற்க வேண்டாமா என்று நியாயம் பேசுகின்றனர். "பலித்தவரை" என்பதுதான் பார்ப்பனியம் என்பார் பெரியார். அது நூற்றுக்கு நூறு சரியாகவே உள்ளது. எது பலிக்குமோ அதனை அதுவரையில் எடுத்துக் கொள்வது என்பதுதான் அவர்களின் பழக்கம்.

தமிழ்நாட்டில் ராமர் எடுபடவில்லை என்றால் வேல் யாத்திரை நடத்தலாம். வங்கத்தில் துர்கா பூஜை நடத்தலாம். இப்படி ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு நியாயம். அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று நாம் சட்டம் கொண்டுவர முயன்றால்,அது ஆகமங்களுக்கு எதிரானது என்பார்கள். ஆனால் இராமேசுவரம் கோயிலில் ஸ்மார்த்த பாப்பனர்களுக்கு இடமில்லை என்று காரண ஆகமம் சொல்கிறதே என்றால், அதிகாரத்தைக் காட்டி மிரட்டி, சின்னச் சங்கரனை உள்ளே அழைத்துச் செல்வார்கள்.

இப்போது அவர்கள் திட்டம் தெளிவானது. மதச்சார்பின்மை என்பதைச் சட்டத்திலிருந்தும், சமூகத்திலிருந்தும் நீக்க வேண்டும். எங்கு நோக்கினும், 'ஜெய் ஸ்ரீ ராம்' கூச்சலைக் கொண்டுவர வேண்டும். இதனை நாம் கற்பனையில் சொல்லவில்லை. இதோ இந்த வாரம் வெளிவந்துள்ள அவர்களின், அதிகாரபாப்பூர்வ வார ஏடான 'ஆர்கனைஸர்' (Organiser) சொல்கிறது.

அவ்வேட்டில் வெளியாகியுள்ள, மே. .வங்க பாஜக தலைவர், திலீப் கோஷ் நேர்காணலில், "எப்படிப் பிரித்தானியர்கள் வந்தே மாதரம் என்ற முழக்கத்தைக் கண்டு அஞ்சினார்களோ அப்படி இந்த மேற்கு வங்க ஆட்சியாளர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்னும் முழக்கத்தைக் கண்டு அஞ்சுகின்றனர்" (Organiser, 28.02.2021) என்று கூறுகின்றார்.

இதிலிருந்து நமக்கு ஒன்று தெரிகிறது. தமிழ்நாட்டில்தான் திராவிட இயக்கம் என்னும் நாத்திக இயக்கம் வேர் விட்டுள்ளது, அதனால் கடவுள் மறுப்பு முழக்கங்கள் இங்கு ஒலிக்கின்றன என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள், கடவுள் நம்பிக்கை உடைய மேற்கு வங்கம் போன்ற இடங்களிலும் ஜெய் ஸ்ரீ ராம் சத்தத்திற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே கடவுள் நம்பிக்கை என்பது வேறு, அரசியலில் மதத்தைக் கலப்பது என்பது வேறு என்னும் உண்மை தெளிவாகிறது! மதச் சார்புடைய அரசியல் வேண்டுமா, மதச்சார்பற்ற அரசியல் வேண்டுமா என்பதே இன்று நம்முன் உள்ள கேள்வி!

நான் மதச்சார்பின்மையின் பக்கம்! நீங்கள் எந்தப் பக்கம்?

(கேள்வி தொடரும்)

English summary
Here Prof. Suba.Vee's Artilce "Neengal Entha Pakkam" Part-6.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In