• search
keyboard_backspace

நீங்கள் எந்தப் பக்கம்? பகுதி- 7 ஒற்றையாட்சியா, மாநில சுயாட்சியா? பேரா. சுப. வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்தபோது, நாளேடுகள் பலவற்றில் பாஜக முழுப்பக்க விளம்பரங்களைக் கொடுத்தது. அந்த விளம்பரங்களின் மேல் பகுதியில், "ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம்" என்ற தொடர் இடம் பெற்றிருந்தது. 'ஒரே மதம்' என்பதை ஏனோ விட்டுவிட்டார்கள்!

அந்தத் தொடரை மேலோட்டமாகப் பார்க்கும்போது, அது தேச ஒற்றுமையை வலியுறுத்துகிறது என்பது போலத் தோன்றும். வெகு மக்களில் பலரும் கூட அப்படி நம்ப வாய்ப்பு உள்ளது. ஆனால் இந்த "ஒளிமயமான தேச பக்தியில்" எவ்வளவு பெரிய ஆபத்துகள் நிறைந்துள்ளன என்பதை ஆழ்ந்து பார்த்தால்தான் புரியும்.

2018 வரையில் பாஜக வில் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்தவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவருமான யஷ்வந்த் சின்ஹா சில நாள்களுக்கு முன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், இவர்களின் புதிய தேசபக்தி பற்றி விரிவாகவே குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "இவர்களின் புதிய தேசபக்தி, தான் ஒரு தேசபக்தன் என்று உரத்துக் குரல் எழுப்புவதோடு மட்டும் நின்றுவிடாது, யார் யாரெல்லாம் தேசபக்தர்கள் என்று சான்றிதழ் கொடுக்கும் அதிகாரத்தையும் கையில் வைத்துக் கொண்டுள்ளது. அது மட்டுமல்லாமல், தாங்கள் ஏற்காதவர்களை 'தேசவிரோதிகள்' என்று முத்திரை குத்தும் அதிகாரமும் உடையதாகஇருக்கிறது. இவர்களின் இந்தப் புதிய தேசபக்தி ஒளியின் முன்னால், இந்திய விடுதலைப் போராட்டமே மங்கி மறைந்து முக்கியமற்றதாக ஆகி விடுகிறது" என்கிறார் அவர்.

(This new cult of patriotism does not merely stop at claiming loudly "I am a patriot", it extends to giving certificates of patriotism to others - and the right to brand them as anti-national. Even our great freedom movement pales into insignificance before the bright light of this new patriotism).

Prof. Suba Veerapandians Neengal Entha Pakkam Part 7

ஆம், அவர்களிடமிருந்து தேசபக்தச் சான்றிதழை நாம் பெற வேண்டுமானால், நம் மொழி, நம் இனம், நம் உரிமைகள் என எவை பற்றியும் பேசக்கூடாது.

சுருக்கமாகச் சொன்னால், இந்தியா தன்னுடைய பன்மைத்துவத்தை (pluralism) முற்றிலுமாக இழந்து, ஒற்றை அடையாளத்துடன் நிற்க வேண்டும் என்கின்றனர். அந்த ஒற்றை அடையாளம் என்பது எது? எல்லோரும் இந்தியர்கள், இந்தியர்கள் மட்டுமே! தமிழர்கள், வங்காளிகள், பஞ்சாபிகள் போன்ற அடையாளங்கள் இருக்கக்கூடாது. இந்தி அல்லது சமஸ்கிருதம் மட்டுமே நாட்டில் எங்கும் இடம் பெற்றிருக்கும். அவரவர் தாய்மொழிகளைத் தனியாக அல்லது ரகசியமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்துமதத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது இந்து மதத்திற்கு அதாவது பாப்பானியத்திற்கு அனைவரும் பணிந்து போக வேண்டும். மாநிலங்கள் என்பவை வெறும் பஞ்சாயத்துகளாக மட்டுமே இருக்கும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். பொதுக் குடிமைச் சட்டம் (common civil code) என்பதை எந்த எதிர்ப்பும் இல்லாமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்கள், நீட் தேர்வு ஆகிய அனைத்தையும் பணிந்து ஏற்க வேண்டும்.

சரி, இவ்வளவையும் ஏற்றுக்கொண்ட பின்னரும், இந்தியாவில் உள்ள அனைவரும் சமமான குடிமக்கள் ஆகிவிட முடியுமா? அது எப்படி முடியும்? "சதுர் வர்ணம் மயா சிருஷ்டம்" என்று கிருஷ்ணரே சொல்லிவிட்டாரே....பிறகு எப்படி எல்லோரும் சமமாக முடியும்? அவர்கள் பார்ப்பனக் குடிமக்களாகவும், நாம் சூத்திரக் குடிமக்களாகவும்தான் இருக்க முடியும். இவ்வளவு உள் அர்த்தங்களையும் உட்கொண்டிருக்கிறது அந்தத் தொடர்!

இப்போது நம் முன் உள்ள கேள்வி....நாம் அதனை ஏன் எதிர்க்க வேண்டும் என்பதுதான்!

இந்தியா என்பது தானாக உருவான நாடு அன்று. ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாடு. அப்படி உருவாக்கப்பட்ட பிறகும், ஓரு மொழி, ஒரே பண்பாடு என்பது எப்போதும் இங்கு இருந்ததில்லை. உலகில் உள்ள 3000 மொழிகளில், பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில்தான் உள்ளன. அதே போன்று, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல்வேறு பண்பாடுகள் இங்கு உள்ளன.

ஆங்கிலேயர்கள் துப்பாக்கி முனையில், அதிகாரத்தைக் காட்டி, இந்தியா என்று ஒரு நாட்டைத் தன் நிர்வாக வசதிக்காக உருவாக்கினர்.

இருப்பினும் வேற்றுமையில் ஒற்றுமை என்ற அடிப்படையில், இந்தியாவில் உள்ள மக்கள் அனைவரும் இந்நாட்டின் அமைப்பை ஏற்றுக்கொண்டனர். ஆம், வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் ஆகப் பெரிய சிறப்பு! ஆனால் இப்போது இவர்கள் வேற்றுமையில்லாத ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர். ஒற்றுமை (unity) என்பது வேறு, ஒருமை (uniformity) என்பது வேறு என்னும் பேருண்மையை இவர்கள் மறைக்கப் பார்க்கின்றனர்.

இந்தியாவைப் பொருத்தளவு, கூட்டாட்சித் தத்துவமே சரியானது. அதுவே இந்திய மக்களிடம் ஒற்றுமையை மட்டுமின்றி, உறவையும் வளர்க்கும். 'வளமான தமிழகம், வலிமையான பாரதம்' என்று சிலர் முழக்கமிடுகின்றனர். அதுவும் சரியானதன்று. 'தனித்துவமான தமிழகம், ஒருங்கிணைக்கும் ஒன்றியம்' என்பதே சரி! இந்தக் கோட்பாட்டினை ஏற்றுக்கொண்ட நாடுகள் உலகில் பல்வேறு துறைகளிலும் முன்னேறி இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

இன்றுவரையிலான அமெரிக்க ஐக்கிய நாடுகள், பழைய சோவியத், சின்னஞ் சிறு நாடான ஸ்விட்சர்லாந்து ஆகிய பெரிய, சிறிய நாடுகள் கூட்டாட்சி முறையில்தான் இயங்குகின்றன. அதிலும், அமெரிக்கர்கள் ஒரே மொழியைத்தான் தாய் மொழியாகக் கொண்டுள்ளனர். அவர்களின் உணவு,உடை, வாழ்க்கை முறை எல்லாம் ஏறத்தாழ ஒன்றுதான். ஆனாலும் அங்கு, ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி பெற்று விளங்குகிறது.

சுவிட்சர்லாந்தை எடுத்துக் கொண்டால், அங்கு வாழும் வெவ்வேறு தேசிய இன மக்கள் சம எண்ணிக்கையில் இல்லை. டொய்ச் மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட ஜெர்மானியர்கள்தான் அங்கு 66,5% உள்ளனர். அவர்களுக்கு உள்ள எல்லா உரிமைகளும், குறைவான எணிக்கையில் உள்ள பிரஞ்சு மக்களுக்கும், மிகக் குறைவான எண்ணிக்கையில் உள்ள இத்தாலியர்களுக்கும் வழங்கப்படுகிறது. அதே போல, மதம் என்று எடுத்துக் கொண்டால், கிறித்துவர்கள்தான் மிகுதி. 60 சதவீதத்திற்கும் மேலே அவர்கள் உள்ளனர். இஸ்லாமியர்கள் வெறும் 5.3% மட்டும்தான். மத நம்பிக்கையற்றவர்கள் 26,4% உள்ளனர். எல்லோரும் அங்கு சமமாக நடத்தப்படுகின்றனர். ஒரே நாடு, ஒரே மொழி போன்ற சர்வாதிகார முழக்கங்கள் அங்கு எப்போதும் எழுப்பப்பட்டதில்லை. அதனால் அந்த நாடு ஒற்றுமையாக இருப்பதுடன், உலகில் முன்னேறிய நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது.

இந்தியாவின் முன்னேற்றத்திற்குப் பெரும் தடையாக இருப்பதே இதுபோன்ற பெரும்பான்மை வாதமும், ஆதிக்கப் போக்கும்தான்! சாதி, மதக் கலவரங்கள் எத்தனையோ உயிர்களை இங்கு பலி வாங்கிவிட்டன! முன்னேற்றத்திற்கும் முட்டுக்கட்டையாகி விட்டன.

"தேசிய ஒற்றுமையும், மாநில சுயாட்சியும் ஒன்றுக்கொன்று போட்டியானவை என்று கட்டாயம் கருதக்கூடாது " (National unity and provincial autonomy must not be thought of as competitors - Report of the Royal commission in Canada)) என்று சொல்கிறது, இன்று உலகில் முன்னேறி இருக்கும் கனடா நாடு. ஆனால் பாஜக வோ இரண்டையும் நேர் எதிரிகளாகக் காட்டுவதிலேயே குறியாக இருக்கிறது.

திமுக வும், பாஜக வும் முற்றிலும் வேறுபட்டு நிற்கும் இடங்களில் இந்த மாநில சுயாட்சியும் ஒன்று! காங்கிரஸ் கட்சியும் மாநில சுயாட்சிக்கு எதிராகத்தான் இருந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. ஆனால் இன்று அக்கட்சியின் நிலைப்பாட்டில் சில தளர்வுகள் ஏற்பட்டிருப்பதைப் பார்க்க முடிகிறது. ராகுல் காந்தி போன்றவர்கள் கட்சி எல்லைகளைத் தாண்டி மாநில சுயாட்சிக்கு ஆதரவான சில கருத்துகளைப் பரிமாறிக் கொள்கின்றனர். ஆனால், பாஜக வோ மேலும் மேலும் அதனை உறுதிப்படுத்துவதிலும், தேசிய இனங்களின் முகங்களை அழிப்பதிலும்தான் கூடுதல் கவனத்தோடு செயல்படுகிறது.

1960 களில், திமு கழகம், திராவிட நாடு கோரிக்கையைக் கைவிட்டபின், அறிஞர் அண்ணா, மாநில சுயாட்சிக் கொள்கையைத்தான் மிக உறுதியாக முன்னெடுத்தார். 1963 ஜனவரி 25 ஆம் நாள், தில்லி, மாநிலங்களவையில் அவர் ஆற்றிய உரை ஈடு இணையற்றது. மாநில சுயாட்சியின் தேவையைப் பல்வேறு வகைகளில் அன்று எடுத்துக்காட்டிப் பேசினார். இறுதியாக, ஒற்றை ஆட்சி முறையை எதிர்க்கும் படை என்றே திமுக வை அவர் உருவகப்படுத்தினார். அவருடைய குரலைக் கேளுங்கள் -

"நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றைத் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? தற்போதைய கூட்டாட்சியை ஒரு மெய்யான கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழிவகை செய்திடுவீர்"

மாநில சுயாட்சிக்குப் போராடும் ஒரு முன்னணித் தாக்குதல் படையாகவே (You should take the DMK as the spearhead of the opposition to the unitary nature of the Federal structure of this constitution) என்று கூறிய அண்ணாவின் பெயரைத் தங்கள் கட்சிப் பெயரிலும், அவர் படத்தைத் தங்கள் கட்சிக் கொடியிலும் வைத்துள்ள அதிமுக என்ன செய்திருக்க வேண்டும்? பாஜக விளம்பரத்தைக் கண்டித்திருக்க வேண்டும். மாறாக, அன்றுதான், அமித் ஷாவுடன் அக்கட்சி கூட்டணி பற்றி பேசியது.

1969 ஆம் ஆண்டு, ஆனா தன் காஞ்சி ஏட்டில் எழுதிய கட்டுரையும் மாநில சுயாட்சி பற்றியதே!அதனால்தான் அது அண்ணாவின் உயில் என்று அழைக்கப்படுகிறது!

பாஜக என்பது தமிழ்நாட்டிற்கு மட்டும் எதிரானது இல்லை, இந்தியாவில் உள்ள எல்லா மாநிலங்களுக்கும், எல்லாத் தேசிய இன மக்களுக்கும் எதிரானது. அவர்களின் உரிமைகளை மட்டுமின்றி, அனைவரது அடையாளங்களையுமே அழிக்க நினைக்கும் கட்சியாகவே அது உள்ளது.

காங்கிரஸ் ஆண்ட காலத்திலிருந்தே இந்தப் போக்கு இங்கு தொடங்கிவிட்டது. அரசமைப்புச் சட்டத்தின்படி, மத்திய அரசுப் பட்டியல் (Cenral list), மாநில அரசுப் பட்டியல் (State list), ஒத்திசைவுப் பட்டியல் (Concurrent list) என மூன்று உண்டு. அவற்றுள் மாநிலப் பட்டியலில் உள்ள அதிகாரங்கள் பலவற்றை மத்திய அரசு எடுத்துக்கொணடு விட்டது. இப்போது ஒரே சட்டம் என்று சொல்வதைப் பார்த்தால், மாநிலப் பட்டியல் என்ற ஒன்றே வேண்டாம் என்று பாஜக கருதுகின்றது எனத் தோன்றுகிறது.

ஏற்கனவே நம்மிடம் இருந்த கல்வி, ஒத்திசைவுப் பட்டியலுக்குச் சென்றுவிட்டது. இப்போது நீட் போன்ற தேர்வுகள், முற்றிலுமாக மத்திய அரசின் ஆக்கிரமிப்புகளாக மாறி விட்டன.

இப்போது நம்முன் இருக்கும் கேள்வி இதுதான். அவரவர் அடையாளங்களையும், உரிமைகளையும் பேணிக் காத்துக்கொண்டு, இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனமக்களோடும் ஒற்றுமையாக வாழப்போகிறோமோ அல்லது ஒற்றையாட்சி முறையின் கீழ், நம் உரிமைகள் அனைத்தையும் இழந்து அடிமைகளாக வாடப் போகிறோமோ என்பதுதான்!

நான் மாநில சுயாட்சியின் பக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?

(கேள்விதொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5 , 6]

English summary
Here is an article was written by Prof. Subaveerapandian.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In