• search
keyboard_backspace

நீங்கள் எந்தப் பக்கம் (பகுதி- 5) சுயமரியாதையா, வைதீகமா? -சுப. வீரபாண்டியன்

Subscribe to Oneindia Tamil

2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோரைக் கொண்ட அமர்வு, ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியது. அசுவத்தாமன் என்னும் வழக்கறிஞரால் தொடரப்பட்ட வழக்கு அது! தமிழ்நாடு அரசின் "இந்து திருமண (திருத்தச்)சட்டம் 1968" பிரிவு 7 (a) நீக்கப்பட வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை!

அதாவது, அறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்று ஒரு சட்டத்தைக் கொண்டுவந்தார். அதனை நீக்க வேண்டும் என்பதுதான் மனுதாரரின் வேண்டுதல் (prayer). அந்தத் திருத்தம் நடைமுறைக்கு வந்து, ஆயிரக்கணக்கான திருமணங்கள் தமிழ் நாட்டில் நடந்த பிறகு, ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்குப் பின் இப்படி ஒரு வழக்கு தொடரப்படுகிறது.

Prof Subavees Article on Self Respect and Court Verdicts

அந்த வழக்கில் என்ன தீர்ப்பு சொல்லப்பட்டது என்பதைப் பார்க்கலாம். அதற்கு முன்பு, ஏன் அப்படி ஒரு திருமண முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதற்கான தேவை என்ன, அது ஏன் ஐம்பது ஆண்டுகளுக்குப் பின்னும் ஒரு குறிப்பிட்ட சாராரால் எதிர்க்கப்படுகிறது என்பதை ஆராய்ந்திட வேண்டும்.

ஒரு திருமண முறை மாற்றப்படுவது அல்லது இன்னொரு விதமான திருமண முறையையும் ஏற்றுக்கொள்வது என்பதற்கு இவ்வளவு முயற்சிகளும், இவ்வளவு எதிர்ப்புகளும் ஏன் என்பது பெரும் வியப்புக்குரியதே. ஆனால் இது வெறும் திருமண முறை மாற்றம் மட்டும் இல்லை, ஒரு பண்பாட்டுப் புரட்சி, ஆதிக்கப் பண்பாட்டுப் படையெடுப்பிற்கான எதிர்ப்பு என்பதைப் புரிந்துகொண்டால் எல்லாம் எளிதில் விளங்கும்!

உலகின் பல்வேறு தேசிய இனங்களைப் போலவே, தமிழ் இனமும், வகை வகையான பண்பாட்டுப் படையெடுப்புகளுக்கு உள்ளாகியுள்ளது. அவற்றுள், கடுமையானதும், நேர் எதிரான கூறுகளைக் கொண்டதும், நீண்ட நெடு நாள்களாக இங்கு வலிமையாக வேரூன்றி நிற்பதும் பார்ப்பனியப் பண்பாடே! தமிழர்கள் வாழ்வின் ஒவ்வொரு அசைவிலும் அது ஆதிக்கம் செலுத்துகிறது. அதுவே குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்வையும் வழிநடத்துகிறது.

பிறப்பு முதல் இறப்பு வரையில், இந்துமத வாழ்வியல் முறை என்னும் பெயரில், தமிழர்களின் வாழ்வைப் பார்ப்பனியப் பண்பாடே தீர்மானிக்கிறது. அவற்றுள் மிக முக்கியமானது திருமண நிகழ்வு. அந்நிகழ்வை 1800 ஆண்டுகளாகப் பார்ப்பனியம் கைப்பற்றிக் கொண்டது. சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூறு இரண்டு பாடல்களில் பழந்தமிழ்த் திருமணம் எவ்வாறு நடந்தது என்பதை எடுத்துக் காட்டுகிறது. அப்பாடல்களில் புரோகிதர்களின் மந்திரங்களோ, இன்றுள்ள பல சடங்குகளோ காணப்படவில்லை.

சிலப்பதிகாரத்தில்தான் முதன்முதலாக, அம்முறை உட்புகுந்துள்ளதைப் பார்க்க முடிகிறது.

" சாலி யொருமீன்தகையாளைக் கோவலன்

மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத்

தீவலம் செய்வது காண்பார்கண் நோன்பென்னை"

என்னும் சிலம்பின் வரிகள், தமிழ்நாட்டில் நடைபெற்றுவிட்ட ஒரு பண்பாட்டு மாற்றத்தை எடுத்துக் காட்டுகின்றன. புரோகிதரின் மந்திரமும், தீவலம் வருவதும் (அக்கினி சாட்சியாக) தமிழகம் அதற்குமுன் அறிந்திராதவைகள்!

அன்று தொடங்கித் தமிழர்கள் தங்கள் பழைய மரபுகளைத் திருமண நிகழ்வில் இழந்து விட்டனர். இதுதான் தமிழ்முறை என்று கருதும் அளவிற்கு அப்பார்ப்பணியப் பண்பாடு இங்கு நிலைபெற்றுவிட்டது.

1926 இல், தந்தை பெரியாரால் தமிழ்நாட்டில் தொடங்கப்பெற்ற சுயமரியாதை இயக்கம்தான், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு, வைதீக, பார்ப்பனியத் திருமண முறையை எதிர்த்து, சுயமரியாதைத் திருமணம் என்னும் புதிய முறையை அறிமுகப்படுத்தியது. 1928 மே மதம், அருப்புக்கோட்டைக்கு அருகில் உள்ள சுக்கிலநத்தம் என்னும் சிற்றூரில் முதல் சுயமரியாதை திருமணத்தைப் ஏரியார் நடத்தி வைத்தார்.

அன்றைய சூழலில் அது வெறும் திருமணமன்று, ஒரு சமுதாய புரட்சி என்றே கூற வேண்டும். அம்முறையைச் சுயமரியாதை இயக்கத்தினர் தங்கள் வீட்டுத் திருமணங்களில் அறிமுகப்படுத்தினர். அது ஒரு சாராரிடம் தொடர்ந்து பரவத் தொடங்கிற்று. அம்முறை பரவப் பரவ, வைதீகர்களிடம் ஒரு பெரிய கலக்கத்தையும் அது ஏற்படுத்தியது.

எனினும் அதனை வெறும் மாற்றுத் திருமண முறை என்று கூறுவதை தந்தை பெரியார் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படிச் சுருக்குவது உண்மைக்கு மாறானது என்று அவர் கருதினார். "சுயமரியாதைத் திருமணம் என்பதில் புதிய முறையோ, புதிய சடங்கோ ஒன்றுமில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். அர்த்தமற்றதும், பொருத்தமற்றதுமான சடங்குகள் வேண்டாம் என்பதும், அனாவசியமான அதிகச் செலவும், அதிகக் காலக்கெடும் இருக்கக்கூடாது என்பதும்தான் சுயமரியாதைக் கலியாணத்தின் முக்கியத் தத்துவமாகும்" என்றார் அவர்.

சுயமரியாதைத் திருமணங்களின் நோக்கத்தையும், சிறப்பையும் விளக்கி அவர் பல திருமண மேடைகளில், பல மணி நேரங்கள் பேசியுள்ளார். பிறப்பால் அனைவரும் சமம், பெண் என்பவள் சம உரிமையுடையவளாக விளங்க வேண்டும், மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும், ஆடம்பரம் கூடாது என்பன போன்றவைகள் அத்திருமண நோக்கங்களில் சில!

இவற்றைப் பொறுத்துக்கொள்ள முடியாத பார்ப்பனர்களும், வைதீகர்கள் சிலரும் இதனைக் கடுமையாக எதிர்த்தனர். நீதிமன்றத்திலும் இது தொடர்பாக ஒரு வழக்கு நடந்தது.

அந்த வழக்கு இரண்டு தனியாருக்கிடையில் நடந்த வழக்காகும். கோட்டையூரைச் சேர்ந்த சிதம்பரம் (செட்டியார்) தன் மனைவி இறந்த பின்பு, வேறு சாதியைச் சேர்ந்த, கணவனை இழந்த ரங்கம்மாள் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம், 1934 ஆம் ஆண்டு, தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்றது. சிதம்பரம் அவர்களின் முதல் மனைவிக்குப் பிறந்தவரைத் திருமணம் செய்து கொண்டிருந்த அவர் மருமகள் தெய்வானை நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அந்த வழக்கில், 1953 ஆம் ஆண்டு, நீதிபதி ராஜகோபாலன், நீதிபதி சத்திய நாராயண ராவ் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். அத்தீர்ப்பு, சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகாது என்று கூறிவிட்டது.

இந்துக்களின் திருமணத்தில், ஹோமம் (அக்கினி வளர்த்தல்), சப்தபதி ஆகியன இன்றியமையாதவை. அச்சடங்குகள் நடந்திருந்தால் மட்டுமே ஓர் இந்துத் திருமணம் என்று அதனை ஏற்றுக்கொள்ள முடியும் என்பதே தீர்ப்பின் சாரம்.

அவ்விரு சடங்குகளுக்கு மட்டும் ஏன் அவ்வளவு முதன்மை?

பாப்பனர்களில் ஒரு வகையினார் ஸ்மார்த்த பார்ப்பனர்கள் எனப்படுவர். அவர்கள் நெருப்பை வணங்கும் வழக்கமுடையவர்கள். அப்பண்பாடு இங்கு திணிக்கப்பட்டது. இரண்டாவது சப்தபதி. அதாவது ஏழு அடிகள் என்று பொருள். மணமேடையில், மணமகள் கையைப் பற்றிக் கொண்டு, மணமகன் ஏழு அடிகளை எடுத்து வைப்பான். அந்தச் சடங்கு மிக முதன்மையானது என்று கருதப்பட்டது.

அதற்கு ஓர் ஆழமான காரணம் உண்டு. அந்தச் சடங்குதான், நமக்கும், நம் வீட்டுப் பெண்களுக்கும் சுயமரியாதைக்கு இழுக்கைத் தேடித் தருவது. அது குறித்து அண்ணல் அம்பேத்கர், தெளிவாக எடுத்துரைக்கின்றார் (தொகுதி - 8).

"மணப்பெண்ணின் மீது முழு உரிமை கொண்ட தேவர்கள் (சோமன், இந்திரன் முதலானோர்), இவள் அவதனம் கொடுக்கப்பட்டதால் முழு நிறைவடைந்து, அவளை விட்டுவிடத் தயாராகின்றனரா என்பதைச் சோதிக்கும் நடைமுறையே அது. சப்தபதியில் நடந்து செல்லும் தூரம் வரை, மணமகன், மணமகளைத் தன்னுடன் அழைத்துச் செல்வதை, அந்தத் தேவர்கள் அனுமதித்தால், அவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட இழப்பீட்டில் நிறைவடைந்து விட்டனர் என்றும், அவர்களது உரிமை தீர்ந்துபோய் விட்டதென்றும், அந்தப் பெண் மற்றொருவரின் மனைவியாவதற்குச் சம்மதம் பெற்றுவிட்டாள் என்றும் கருதப்படுகிறது." என்பதே அம்பேத்கர் தரும் விளக்கம். இது எவ்வளவு பெரிய மானக்கேடு! வைதீகத் திருமணத்தை ஏற்பது என்பது, இந்த இழிவை ஏற்றுக்கொள்வதாகவே ஆகும்!

இதனை மானமுள்ள எந்தச் சமூகமும் ஏற்கக்கூடாது என்று கூறியே பெரியார், சுயமரியாதைத் திருமணத்தை முன்மொழிந்தார். பெரியாரின் சீடரான அண்ணா, தான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றபின், இதனைச் சட்டமாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். சட்டமன்றத்தில் இத்தீர்மானத்தை முன்மொழியும்போதே பல நல்ல செய்திகளை முன்வைத்தார்.

"ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கங்கள் சட்ட ஏற்பினையும் பெற்றுவிடுதல் இயற்கை" (Customs by usage get lelgal sanction) என்றார் அண்ணா. மேலும் இத்திருமணத்தை அனுமதிக்கப்பட்ட சட்ட முறைகளில் ஒன்று (permissive legislation) என்றே அவர் குறிப்பிட்டார். அதாவது இனி இம்முறை மட்டுமே பின்பற்றப்பட வேண்டும் என்று கூறாமல், இதுவும் பின்பற்றப்படலாம் என்றே கூறுகிறோம் என்றார். அண்ணாவின் உரையில் ஜனநாயகத்தின் கூறுகள் இருப்பதைப் பார்க்க முடிகிறது.

இத்தகைய ஜனநாயக அடிப்படையில் கொண்டுவரப்பட்ட சட்டத் திருத்தத்தைத்தான் அசுவத்தாமன் என்னும் வழக்கறிஞர் நீக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். யாரோ ஒரு அசுவத்தாமன் என்னும் வழக்கறிஞரால் தொடுக்கப்பட்ட வழக்கு என்று அதனை நாம் பார்க்கக்கூடாது. அவரைப் பார்ப்பனர்களின் அடையாளமாகவும், குறியீடாகவும்தான் பார்க்க வேண்டும்.

அவர் தன் மனுவில், ஓர் அரசியல் கட்சி தன் கொள்கைகளில் ஒன்றை இச்சமூகத்தின் மீது திணிக்கிறது என்றும், இதன் மூலம், சமூகத்தில் உள்ள சமமான மனிதர்களைச் சமமின்றி நடத்த முயற்சிக்கிறது என்றும், இச்சட்டம், அடிப்படை உரிமைகள் பற்றிப் பேசும் இந்திய அரசமைப்புச் சட்ட விதியின் 14 ஆவது பிரிவிற்கு எதிரானது என்றும் குறிப்பிடுகின்றார். சமத்துவமின்மையைப் பேணிப் பாதுகாக்க விரும்புவோர், சமத்துவம் பற்றிப் பேசும் விந்தை இது!

சட்டம் கொண்டுவரப்பட்டு, 47 ஆண்டுகளுக்குப் பிறகு தொடுக்கப்பட்ட இவ்வழக்கில்தான், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், சிவஞானம் ஆகிய இருவரும் 2015 அக்டோபரில் தீர்ப்பு வழங்கினர்.

அடிப்படை உரிமைகளுக்கு இச்சட்டம் எதிரானது அன்று என்று கூறிய நீதிபதிகள், இதில் எதிர்ப்பதற்கு ஒன்றுமில்லை என்று கூறினர். ஏற்கனவே திருமணம் ஆகிவிட்ட மனுதாரருக்கு இச்சட்டத்தினால் எந்தவிதமான தனிப்பட்ட பாதிப்பும் இல்லை என்றனர். அதனைத் தாண்டி, இயலபாகவே இந்துமதம் பன்மைத்துவம் கொண்டது, பல்வேறு வழிபாட்டு முறைகளையும். பகுதிக்குப் பகுதி வேறுபட்ட பழக்க வழக்கங்களையும் கொண்டது என்பதால், இன்னொரு மாற்றம் வருவதில் பிழை ஒன்றுமில்லை என்றும் கூறினர்.

கடந்த அரை நூற்றாண்டாக இந்த மாதிரியான சுயமரியாதைத் திருமணங்கள் நடந்து வருகின்றன என்றும், அவற்றால் எந்தச் சிக்கலும் எழுந்துவிடவில்லை என்றும் கூறிய அவர்கள், இத்திருமண முறை காலத்தை வென்று நிற்கிறது என்றும் குறிப்பிட்டனர்.

இறுதியாக இம்மனுவைப் பற்றிக் குறிப்பிட்ட அவர்கள், "இங்கு ஏதோ பிரிவினைகளுக்குப் பஞ்சம் இருப்பதை போல, இவ்வழக்கு இன்னொரு பிரிவினையைத் தூண்டுகிறது" என்று சொல்லி மனுவைத் தள்ளுபடி செய்தனர்

(The only purpose served by this writ petition is raising a divisive issue, as if we have any shortage of the same! We have asked the petitioner whether he was facing any difficulty personally, but he states that he was happily married. If he had a problem, possibly, solution could have been found.

16. We are not inclined to entertain this petition to challenge the provision of Section 7-A of the Hindu Marriage Act, 1955. 17. The writ petition is dismissed.)

இந்தத் தீர்ப்பு வந்துவிட்டதால், எல்லாம் முடிந்து விட்டது என்று நாம் கருத முடியாது. இன்றும் வைதீகத் திருமணங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. அதனால் வரக்கூடிய இழிவை நம் மக்கள் இன்னும் உணரவில்லை. எங்கும் இனிமேல் சுயமரியாதைத் திருமணங்கள்தான், வைதீகத் திருமணங்களை நடத்துவதில்லை என்ற முடிவுக்குத் தமிழ் மக்கள் வரும் நாளே, நம் சுயமரியாதை மீட்கப்படும் நாளாகும்!

நாம் சுயமரியாதையின் பக்கமா, வைதீகத்தின் பக்கமா?நாம் தன்மானமுடையவர்களா இல்லை அவமானத்தை ஏற்பவர்களா? இந்த வினாவிற்கு நாம் விடை சொல்லித்தானே ஆகவேண்டும்!

நான் சுயமரியாதையின் பக்கம். நீங்கள் எந்தப் பக்கம்?

(கேள்வி தொடரும்)

பகுதி [1, 2, 3, 4, 5]

English summary
Here is an article written by Prof. Suba Veerapandian on Self Respect and Court Verdicts.
Related News
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
Just In