For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்கள் எந்தப் பக்கம்? - 3 இந்தியா ஒருதரம்... இந்தியா ரெண்டுதரம்... - பேராசிரியர் சுப. வீரபாண்டியன்

Google Oneindia Tamil News

புதிய பொருள்களோ, புதிய புத்தகங்களோ, புதிய நிகழ்ச்சிக்கான விற்பனைச் சீட்டுகளோ வெளியிடப்படும்போது,

"விற்பனை தொடங்கிவிட்டது"

என்று அறிவிப்பார்கள். இந்திய நாடாளுமன்றத்தில் அப்படி ஓர் அறிவிப்பு வெளிப்படையாகக் காணப்படவில்லை என்பதைத் தவிர, நிலைமை ஏறத்தாழ அப்படித்தான் உள்ளது.

இந்தியாவில் விற்பனை தொடங்கிவிட்டது என்னும் பொருளில் இதனை இங்கு குறிப்பிடவில்லை. இந்தியாவே விற்பனைக்கு வந்துவிட்டதோ என்ற அச்சத்தில்தான் இந்தக் குறிப்பு இடம்பெறுகின்றது.

பொதுத்துறை விற்பனை என்பது இந்தியாவிற்குப் புதிது என்றும் சொல்லிவிட முடியாது. வாஜ்பாய் அமைச்சரவையில் அருண் ஷோரி என்று ஓர் அமைச்சர், பொதுத்துறை விற்பனைக்காகவே (Minister of Disinvestment) நியமிக்கப்பட்டிருந்தார். பிறகு வந்த காங்கிரஸ் ஆட்சியிலும் அது தொடரத்தான் செய்தது. ஆனாலும் இப்போது நடப்பது போல் எல்லாவற்றையும் விற்பனை செய்வது என்னும் அளவில் அவை இல்லை.

Prof SubaVees Artilce on Union Budget 2021

இது இன்றைய மத்திய அமைச்சரவையின் போக்கு என்று எளிதில் முடிவெடுத்துவிட முடியாது. பாஜக சித்தாந்தத்திலேயே இது ஆழ வேரூன்றியுள்ளது. ஆர் எஸ் எஸ் அமைப்புதான் இன்று மத்திய ஆட்சியை வழிநடத்துகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. ஆட்சியாளர்களும் கூட அதனைச் சில நேரங்களில் ஏற்கவே செய்கின்றனர்.

அந்தச் சித்தாந்தம் என்ன?

இதோ, அவர்களின் குருநாதர் கோல்வால்கர் சொல்வதைப் பார்க்கலாம் -

"தேசியப் பொருளாதாரத்தை வடிவமைக்கும் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். இதிலும் பணத்துக்கு மட்டும் மதிப்பளிக்கும் முறையில் அல்லாமல், நமது பாரம்பரியச் சிந்தனாமுறை பாதை காட்டியுள்ளது. அர்த்த சாஸ்திரம் என்பதை நாம் நீதி சாஸ்திரம் என்றே அழைத்திருக்கிறோம். இன்று இந்த நீதி என்பது, ராஜ நீதி என்பதோடு அடங்கிப்போய் விட்டது. ஆனால் நமது தொன்மையான கண்ணோட்டத்தின்படி, அரசியலும், பொருளாதாரமும் அந்த ஒரு வார்த்தையில் அடங்கின." (கோல்வால்கர், ஞான கங்கை, முதல் பாகம், பக்.77-78)

கோல்வால்கர் என்ன சொல்ல வருகிறார் என்பது புரிகிறது. ஆட்சி நடத்தும் முறையில், அர்த்த சாஸ்திரத்தை முன்னோடியாகக் கொள்ள வேண்டும் என்கிறார். அர்த்த சாஸ்திரம் என்ன சொல்கிறது என்பதைப் பார்க்கும் முன், சோஷலிசம் போன்ற சமன்மைக் கொள்கைகளை அறவே கைவிட்டுவிட வேண்டும் என்று கோல்வால்கர் சொல்வதையும் பார்த்து விடலாம்.

"சோஷலிசம் என்றால் என்ன, அது சொல்வது என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு விதவிதமான சோஷலிசங்கள் தலைதூக்கி விட்டன. கில்டு சோஷலிசம், அனார்க்கிசம், சின்டிகலிசம், கம்யூனிசம் என்று விதவிதமாக வர்ணிக்கப்படுபவை எல்லாம் சோஷலிசத்தின் பல அவதாரங்கள். எது எப்படி ஆயினும், நாம் ஏன் இப்படிப்பட்ட வார்த்தைகளுக்கு அடிமையாக வேண்டும்? நமது மண்ணில் தோன்றிய அறிவாற்றலின் அடிப்படையில் நாம் ஏன் நமது சிந்தனையை வளர்த்துக் கொள்ளக்கூடாது? " என்று கேட்கிறார் அவர்.

இதில் இரண்டு செய்திகள் கூர்ந்து கவனிக்கப்பட வேண்டியனவாக உள்ளன. ஒன்று, அர்த்த சாஸ்திரத்தை ஏற்பது. இன்னொன்று, சோஷலிசத்தைத் திரித்தும், மறுத்தும் சொல்வது. சோஷலிசத்திற்குக் கோவால்கர் தரும் விளக்கத்தை எண்ணிப் பாருங்கள்.

சோஷலிசத்திற்க்கு அவர் தரும் வேறு சொற்கள் அப்படியே பொருந்துவன அல்ல. சோஷலிசம், கம்யூனிசம் இரண்டும் நெருக்கமானவை என்றாலும், இரண்டிற்கும் இடையிலும் கூட வேறுபாடுகள் உள்ளன. சின்டிகலிசம் என்பது பிரெஞ்சு மொழியிலிருந்து வந்த சொல். தொழிலாளர் போராட்டங்களால் உருவாக வேண்டிய அமைப்பைப் பற்றி அது பேசுகிறது. விவசாய நாடான இந்தியாவிற்கு அது பொருந்தாது!

கில்டு சோஷலிசம் என்பது, 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், இங்கிலாந்தில், ஆர்தர் பேன்ட்டி, எஸ்.ஜி. ஹாப்சன் போன்றவர்களால் தொழிற்சங்கங்களையொட்டி முன்மொழியப்பட்ட ஒரு திட்டம். தொழிலாளர்களின் ஆதரவோடு, தொழில் நிறுவனங்களை ஒரு குழுவாக்கி (கில்டு) அதனை நிர்வாகம் செய்யும் முறையைக் குறிப்பது.

அனார்க்கிசம் என்பது ஒருவிதமான அராஜகவாதம். அதாவது, அரசு, சட்டம், ஒழுங்கு எவையும் வேண்டாம் என்று கூறும் போக்குடையது. இதனைத் தவறாகச் சிலர் தாராளவாத மார்க்சியம் என்று கூறுவர். இதனையும் சோசலிசத்தின் மறுபெயர் என்கிறார் கோல்வால்கர்.

ஆகமொத்தம், எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி, சோஷலிசம், கம்யூனிசம் போன்றவைகளை மறுப்பது அவர் நோக்கம். போகட்டும், எதனை அவர் ஏற்கிறார்? அர்த்த சாஸ்திரம் சொல்லும் "நீதியை" அவர் நடைமுறைப்படுத்த வேண்டும் என்கிறார். அப்படி என்ன அர்த்த சாஸ்திரம் சொல்கிறது?

"வருவாய் வழிவகைகள்" குறித்து நிறையவே அர்த்த சாஸ்திரத்தின் ஆசிரியர் சாணக்கியர் சொல்கின்றார். நேரடி வரி, மறைமுக வரி தவிர, மக்களிடம் ஆசையைத் தூண்டி, அவர்களைச் செலவழிக்கச் செய்து, அதன்மூலமும் அரசின் வரவைக் கூட்டிக் கொள்ளலாம் என்று கூறுகின்றார். அது எப்படி? இதோ இப்படித்தான் -

"அற்புதம் நிகழ்வது போல் உடனடியாகக் ஒரு கோயில் அல்லது புகலிடத்தை உருவாக்கி, அங்கே தெய்வம் எழுந்தருளியிருப்பதாகச் செய்தியைப் பரவ விடுவது. வணிகப் பொருட்காட்சி, விழா என்று தொடங்கிக் கொண்டாட்ட உணர்வை ஏற்படுத்தி விடுவது. ஒரு பருவத்தில் பூக்கின்ற பூவை, பழுக்கின்ற பழத்தை, திடுதிப்பென்று தோன்றச் செய்து, இது தெய்வத்தின் அருளால் நடந்திருப்பதாக மக்களை நம்பச் செய்வது"

இவையெல்லாம் சாணக்கியர் பணத்தைப் பெருக்கச் சொல்லித்தரும் வழிகள். இப்படியெல்லாம் செய்தால், வியப்பிலும், பூரிப்பிலும் மக்கள் பணத்தைக் கொண்டுவந்து கொட்டுவார்கள் என்கிறார்.

அயோத்தி ராமர் கோயில் இப்படித்தான் இன்று பிரம்மாண்டமாகக் காட்டப்படுகிறது. அதற்கு அத்தனை பிரிவினரிடமிருந்தும், நகர சுத்தித் தொழிலாளர்கள் உள்பட, பணம் திரட்டப்படுகிறது. இவ்வாறு பல வழிகளிலும் சேர்க்கப்படும் பணம் பெரும் வணிகர்களுக்குப் போய்ச் சேரும் வழியையும் அவர் எடுத்துரைக்கின்றார்.

எந்தப் பொருளையும் உற்பத்தி செய்பவரே நேரடியாக விற்பனை செய்ய அனுமதிக்கக் கூடாது என்பது, "பொருளாதாரத்தின் அம்சங்கள்" என்னும் இயலில் அவர் கூறும் விதி. "பண்டங்களும், தயாரிப்புகளும், அவை உற்பத்தி செய்யப்படுகின்ற அல்லது தயாரிக்கப்படுகின்ற இடத்தில் விற்பனை செய்யப்படக்கூடாது. அவற்றுக்குரிய சந்தைகளுக்கோ, நகரங்களுக்கோ கொண்டு செல்லப்பட்டு, வரி செலுத்தியே விற்கப்பட வேண்டும்" என்பது அர்த்த சாஸ்திரம் சொல்லும் சட்டம். அதாவது, மறந்தும் 'உழவர் சந்தை' போன்றவைகளுக்கு இடமளித்துவிடாதீர்கள் என்கிறார்.

அது மட்டுமின்றி, உள்ளூரில் உற்பத்தியாகும் பொருள்களுக்கு 5 சவீத லாபமும், இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீத லாபமும் வணிகர்களுக்குத் தரப்பட வேண்டும் என்றும் சொல்கிறார். அதாவது உள்நாட்டில் தொழிலாளர்கள் கை ஓங்கிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அரசுக்கு அறிவுறுத்துகிறார்.

இப்போது அர்த்தசாஸ்திரம் கூறும் விதிகளை நாம் இப்படிப் புரிந்து கொள்ளலாம். 1. உடல் உழைப்புக்கு முதலிடம் தரக்கூடாது 2. பெருவணிகர்களை வளர்த்தெடுக்க வேண்டும் 3. இறக்குமதியை ஊக்குவிக்க வேண்டும். 4. மக்களை மதம், கோயில், கடவுள் என்று மயக்கத்திலேயே ஆழ்த்தி வைத்திருக்க வேண்டும்

இப்போது சொல்லுங்கள்.....இந்தியாவின் நிதிநிலை அமைச்சர் நிர்மலா சீதாராமனா, சாணக்கியரா?

சாணக்கியரிடமிருந்து புறப்பட்டு, கோல்வால்கர் வழியாக ஆர் எஸ் எஸ் கொண்டுவரும் திட்டமே, மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையாக வெளியாகியுள்ளது. அதனால்தான், நடுத்தட்டு, அடித்தட்டு மக்களுக்கு எந்தப் பயனையும் தராத 'கார்ப்பரேட் படஜெட்' என்ற விமர்சனத்தை அது எதிர்கொண்டுள்ளது.

இந்தியாவின் மக்கள் தொகை மிகப் பெரியது என்பது மட்டுமில்லை, இந்தியாவில் அன்றாடக் கூலிகளின் எண்ணிக்கையும் மிகப் பெரியது. ஆம், ஏறத்தாழ 30 கோடிப் பேர் நம் நாட்டில் அன்றாடக் கூலிகள். அவர்களுக்கு இந்த நிதிநிலை அறிக்கை என்ன கொண்டு வந்துள்ளது?

சற்றேறக்குறைய 18 லட்சம் கோடி ரூபாய்க் கடனில் நாடு இருக்கிறது என்பதே அறிக்கை தரும் செய்தி. அதிலிருந்து மீள்வதற்காகவே பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகின்றனர். அனால் அந்தக் கணக்கும் பொருந்தி வரவில்லை. வாழ்நாள் காப்பீட்டுக் கழகம் உள்ளிட்ட ஐந்து பெரும் நிறுவனங்களை விற்பனை செய்தால் கூட, 1.70 லட்சம் கோடி ரூபாய்தான் வரும் என்கிறது அரசு. பிறகு எப்படிக் கடனை அடைப்பது?

விமான நிலையங்கள் பல ஏற்கனவே தனியாருக்குத் தாரை வார்க்கப்பட்டுவிட்டன. மேலும் பல விமான நிலையங்கள், தொடர்வண்டித் துறை, மின் கம்பிகள், எண்ணெய்க் குழாய்கள், நெடுஞ்சாலைகள் என எல்லாவற்றையும் தனியாரிடம் விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. அனைத்தையும் விற்பனை செய்துவிட்டு, அடிக்கட்டுமானப் பணிகளைத் தொடங்கவிருக்கிறோம் என்கின்றனர். அந்தப் பணிகளையும் தனியாரிடம்தான் ஒப்படைக்கப் போகின்றனர். பிறகு இந்த நாடு எப்படி வெகு மக்களின் நாடாக இருக்கும்?

முதியோர், பெண்கள், குழந்தைகள் நலத்திட்டம் ஏதேனும் அறிக்கையில் உண்டா? கேட்டால், 75 வயது ஆனவர்கள், தாங்கள் பெறும் ஓய்வூதியத்திற்குக் கணக்கு (returns ) காட்ட வேண்டாமாம். இங்குதான் நாம் கவனிக்க வேண்டிய செய்தி ஒன்று உள்ளது. வரி எதுவும் கட்ட வேண்டியதில்லை என்று கூறவில்லை. வருமானத்தில் உரிய வரியைப் பிடித்து விடுவார்கள் (as TDS). கணக்கு மட்டும்தான் காட்ட வேண்டியதில்லை. இது சலுகை அன்று. ஒருவிதத்தில் அவர்களுக்குச் செய்யும் கெடுதல் என்றே கூற வேண்டும். ஆம், கூடுதலாக வரி பிடிக்கப்பட்டிருக்குமானால், கணக்கைத் தயாரிக்கும்போதுதான் அது தெரிய வரும். அதனைத் திருப்பிக் கொடுக்குமாறு (refund) கேட்க முடியும். கணக்கே சமர்ப்பிக்க வேண்டாம் என்றால், அந்தத் தொகையும் போய்விடும்.

இவ்வாறு எல்லாப் பிரிவினரையும் துயரத்தில் ஆழ்த்தும் இந்த நிதிநிலை அறிக்கை, நாட்டையே ஏலம் விடுகிறது என்றே கூற வேண்டும். இந்தியா ஒரு தரம், இந்தியா ரெண்டு தரம் என்று கூவும் குரல்கள் கேட்கின்றன. இப்போதாவது தேசம் விழித்துக் கொள்ளவில்லையென்றால், இந்தியா மூன்றாவது தரம் என்று சொல்லி ஏலத்தை முடித்து விடுவார்கள்.

நம் நாட்டை அந்நியர்களிடமிருந்தும், பெருவணிகர்களிடமிருந்தும் காப்பாற்றப் போகிறோமா இல்லையா?நாம் ஏழை மக்களின் பக்கமா, பெருநிறுவனங்களின் பக்கமா என்று முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் நிற்கிறோம்!

நான் ஏழை மக்களின் பக்கம்!

நீங்கள் எந்தப் பக்கம்?

(கேள்வி தொடரும்)

English summary
Here is Prof SubaVee's an article Artilce on Union Budget 2021.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X