For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உதயநிதியை முன்வைத்து.... திராவிட இயக்கம் வளர்த்தது ரசமா? விரசமா? -பா. கிருஷ்ணன்

Google Oneindia Tamil News

திராவிட இயக்கம் தமிழக அரசியலில் வேரூன்றியதற்கு முக்கிய காரணம் நாவன்மைதான்! சர்க்கரை மூட்டையைத் தேடி எறும்புகள் வருவதைப் போல் தி.மு.க. கூட்டம் என்றால், அறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன், சொல்லின் செல்வர் ஈ.வே.கி. சம்பத், கலைஞர் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன், நாவுக்கரசர் நாஞ்சில் மனோகரன் ஆகியோர் பேசும் கூட்டங்களைக் காண மக்கள் திரண்டு வருவர். அவர்களில் பெரும்பாலானோருக்குத் தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் திறம்படப் பேசும் ஆற்றல் உண்டு.

ஒரு முறை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பல தலைவர்கள் பேசி முடித்து அண்ணா பேச வந்தபோது இரவு நேரம் ஆகிவிட்டது. மக்கள் களைப்படைந்திருந்தனர். அப்போது, தொண்டர்களையும் மக்களையும் உற்சாகப்படுத்தியது அண்ணாவின் அழகான தமிழ் உரை.

"மாதமோ சித்திரை, மணியோ பத்தரை. உங்களுக்கு நித்திரை. வாக்குச் சாவடியில் போடுங்கள் உதய சூரியனுக்கு முத்திரை" என்று கூறிய மறு கணமே தூக்கக் கலக்கத்தில் இருந்த அத்தனை பேரும் ரசித்து சிரித்தனர். தூக்கத்தில் விழிகள் சொக்கிய அவர்கள் அண்ணாவின் மொழியில் சொக்கிவிட்டனர். அவரது பேச்சினால் தமிழ் ஆர்வம் பெற்றவர்கள் ஏராளம்.

 Senior Journalist Pa Kirshnan Article On Dravidian Movement

ஆனால், அதற்குப் பின்னர் திராவிட இயக்கத்தினர் பேச்சில் ரசம் இல்லை. விரசம்தான் இருக்கிறது. அன்றைய பேச்சு களிக்க வைத்தது. இன்றைய பேச்சு முகம் சுளிக்க வைக்கிறது. அன்றைய பேச்சு தமிழர்களிடையே அண்ணன் தம்பி என்று பாசம் வளர்த்தது. இன்றைய பேச்சு ஆபாசம் வளர்க்கிறது.

இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் திமுகவின் நீண்ட காலத் தலைவராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி.

பல்லாண்டுகளாகவே உலக மொழிகளில் செம்மொழி என்ற நிலையைப் பெற்றுவிட்ட செந்தமிழை மத்திய அரசு செம்மொழி என்று அறிவிக்கச் செய்ததையே பெரிய சாதனையாக் கொண்டாடி வருகிறது திமுக. ஆனால், திராவிடக் கட்சிகள் பேசுகிற மேடையிலும் எழுத்திலும் பிழையில்லாமல் தமிழ் இல்லை.

அதுவாவது போகட்டும் என்றால் மேடைப் பேச்சுகளில் தமிழ்மொழியை ஆபாசத்துக்காகவே பயன்படுத்துகிறார்கள். வெள்ளிக் கிண்ணத்தில் சேற்றையும் சாக்கடை நீரையும் ஏந்துவதைப் போல்...

ஒரு முறை சட்டப் பேரவையில் ஒரு கேள்விக்கு, அன்றைய முதலமைச்சர் கருணாநிதி, "நாடாவை அவிழ்த்துப் பார்த்தால் தெரியும்..." என்று விரசமாகக் கூறிவிட்டு, "நாடா என்று குறிப்பிட்டது, கோப்பில் உள்ள நாடாவைத்தான். வேறு நாடா அல்ல" என்றார். நாடா என்றால் பாவாடை நாடா என்ற எண்ணம் தோன்றும்படி பேசிய அவர், "கோப்பில் உள்ள நாடாவை அவிழ்த்துப் பார்க்கும்போது, உறுப்பினர் கேட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன என்பதைத்தான் குறிப்பிட்டேன்" என்று வலிந்து விளக்கினார்.

பாரதப் பிரதமர் இந்திரா காந்தி மீது திமுகவினரால் ஒரு முறை தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போது காயத்தில் இந்திரா காந்தி புடவையில் ரத்தம் சிந்தியிருந்தது. அதைக் கலைஞர் கருணாநிதி, "பெண்ணுக்கு ரத்தப் போக்கு ஏற்படுவது உண்டு. அதனால் வந்த ரத்தக் கறையாக இருக்கலாம்" என்ற கருத்துப் பட குறிப்பிட்டார்.

அண்ணா திமுக பொதுச் செயலாளராக இருந்த செல்வி ஜெயலலிதாவை விரசமாகப் பல முறை குறிப்பிட்டுள்ளார் தி.மு.க. தலைவர் கருணாநிதி. வி.கே. சசிகலாவைப் பற்றி செல்வி ஜெயலலிதா "தனது உடன் பிறவா சகோதரி" என்று பலமுறை குறிப்பிட்டபோதும், மு. கருணாநிதி, "அவர்களுக்கு இடையில் தாம்பத்திய உறவு" என்று செய்தியாளர்கள் கூட்டத்திலேயே வருணித்தார். அது மட்டுமின்றி, "இனி ஜெயலலிதாவை திருமதி ஜெயலலிதா என்று குறிப்பிடுவேன்" என்றும் கூறியுள்ளார்.

அண்ணா திமுகவும் இதற்குச் சளைத்ததில்லை. விரசமாகப் பேசுவதற்கென்றே இரு திராவிடக் கட்சிகளிலும் சில பேச்சாளர்கள் இருந்தனர். ஆபாசக் காட்சிகள் இருக்கும் திரைப்படங்களை வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கலாம் என்பதைக் குறிப்படும் வகையில், "ஏ" சான்றிதழ் தருவதைப் போல், கழகக் கூட்டங்களில், "ஏ" கூட்டங்கள் கூட நடத்தப்பட்டிருக்கின்றன. அக்கூட்டங்களில் இரவு பத்து மணிக்கு மேல்தான் அவர்கள் பேசுவார்கள்.

மத்திய அமைச்சராக இருந்த ஒருவரைப் பற்றி, "கட்சித் தலைவரின் மகளின் மனம் கவர்ந்தவர்" என்று செல்வி ஜெயலலிதா விரசமாகக் குறிப்பிட்டுள்ளார்.

தந்தைக்குப் பிறகு கழகத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்ற மு.க. ஸ்டாலினுக்குப் பேச்சுத் திறன் இல்லை. பெரும்பாலான சமயங்களில் குழம்பியபடி பேசுகிறார் என்ற விமர்சனம் உள்ளது. அது கூட பரவாயில்லை. அவரும் விரசத்தைக் கடைபிடித்தார் என்பது வேதனை. கடந்த ஆண்டு ஒரு கிராமசபைக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், "ஒரு கல் வீசினால், இரட்டை மாங்காய் அடிக்கிறோம்" என்று பேசினார். பெண்களின் மார்பகத்தை மறைமுகமாகக் குறிப்பிடும் தொனி அதில் இருந்தது. அந்தப் பேச்சை "இது விரசமான வெளிப்பாடு" என்று பெண்கள் கண்டித்தனர்.

இன்னொரு சமயம் "முதலமைச்சர் குட்டிக் கதை சொல்கிறார். குட்டிக் கதையைக் குட்டிதான் சொல்லும்..." என்று பெண்களை இழிவாகக் குறிப்பிட்டார் ஸ்டாலின்.

மு.க. ஸ்டாலினுக்குப் பிறகு இளைஞர் அணியின் செயலாளராக ஆக்கப்பட்டுள்ள அவரது மகன் உதயநிதி தொடக்க கால கூட்டத்திலேயே தனது கட்சியின் பெண் வேட்பாளரை அறிமுகம் செய்த கூட்டத்தில், "திமுக வேட்பாளர் அழகானவர். அவருக்கு வாக்கு அளியுங்கள்" என்று திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். இதைக் கேட்டு பெண்கள், "இது என்ன தேர்தலா, அழகிப் போட்டியா" என்று கொதித்துப் போயினர்.

இப்போது, முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவின் காலில் விழுந்த சம்பவத்தை விமர்சிக்கும் போக்கில், விரசமாகப் பேசியிருக்கிறார். இது கடும் கண்டனத்துக்கு ஆளாகியிருக்கிறது. இதற்காக அவர் மீது வழக்குப் பதிவு செய்யும்படி வலியுறுத்தப்படுகிறது.

கழகங்கள் இரண்டும், குறிப்பாக தி.மு.க. பல சமயம் இவ்வாறு விமர்சிக்கப் போதிய விஷயம் இல்லாவிட்டால், விரசத்தையே ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள்.

திராவிட இயக்கக் கோட்பாடுகளுக்கு வித்திட்ட தந்தை பெரியார் புராணக் கதைகளைக் குறிப்பிட்ட போது விரசமாகப் பேசியதுண்டு. ஆனால், தனிப்பட்ட எந்த மனிதரைப் பற்றியும் அவர் கடுமையாக விமர்சித்த எந்தத் தலைவரைப் பற்றியும் விரசமாகவோ ஆபாசமாகவோ பேசியதேயில்லை.

திராவிட இயக்கங்களின் கடந்த கால வரலாற்றில் இப்படி விரசம் நாற்றமெடுத்தது. ஆனால், இளைய தலைமுறையினர் பொறுப்புக்கு வந்ததும் அறிவியல் ரீதியில் அரசியலை அணுகுவது, உலக விஷயங்களைப் பேசி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சுகள் அந்த எதிர்பார்ப்பில் மண் அள்ளிப் போடுகிறதோ என்ற கவலை ஏற்பட்டுள்ளது.

இத்தகைய அணுகுமுறைக்கு உடனடியாகத் தேவை கடிவாளம்! பேச்சில் பாசம் ததும்பலாம். ஆபாசம் கூடாது! ரசம் இருக்கலாம் விரசம் கூடாது. இத்தகைய அணுகுமுறை நீடித்தால், அந்தக் கட்சிகள் மக்கள் செல்வாக்கை இழக்க நேரும்.

English summary
Columnist Paa Krishnan, in his writeup narrates how Dravidian part leaders make nasty comments in their speeches. The writer also cautions that they will become unpopular if such trend continues.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X